குழாய்க் கிணறு
குழாய்க் கிணறு என்பது 100 - 200 சதம மீட்டர்கள் வரை விட்டம் கொண்ட ஆழமான ஒரு வகைக் கிணறு ஆகும். இது நிலத்தடி நீரைப் பெற்றுப் பயன்படுத்துவதற்கு உதவும் ஒரு செலவு குறைந்த முறையாகும். பாரம்பரிய கிணறுகள் போல இவற்றின் நீர்மட்டத்தைக் காண முடியாது. நிலத்தில் ஆழமாகத் துளையிட்டு இரும்பு அல்லது நெகிழிக் (பிளாஸ்ட்டிக்குக்) குழாய் புகுத்தி இக்கிணறு உருவாக்கப்படுகிறது. நிலத்தடி நீர் அதிகளவில் உள்ள இடங்களிலேயே பயன்படும். குழாய்க் கிணற்றின் ஆழம், அது இருக்கும் இடத்தின் நிலக்கீழ் நீர் மட்ட அளவைப் பொறுத்து வேறுபடும். மிக ஆழமான நிலத்தடி நீரைப் பெறுவதற்கான வினைத்திறனுள்ள முறையாகும்.

நீர் எடுத்தல்
இது குறைவான விட்டம் கொண்ட கிணறு என்பதால் மரபுவழிக் கிணறுகளைப் போல் வாளிகளைப் பயன்படுத்தி நீரை வெளியே எடுக்க முடியாது. இதனால் வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தியே இக்கிணற்றிலிருந்து நீரை எடுக்கலாம். ஆழம் குறைந்த கிணறுகளில் இருந்து நீரெடுப்பதற்குக் கைப்பம்பியையோ, இயந்திரங்களையோ பயன்படுத்துவது உண்டு. ஆழம் கூடிய கிணறுகளில் இருந்து இயந்திரங்களைப் பயன்படுத்தியே நீர் வெளியே எடுக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் இவ்வாறு நீரெடுப்பது வசதிக் குறைவு என்பதால், நீரை நிரப்பிவைத்துத் தேவையானபோது பயன்படுத்துவதற்குத் தற்காலிகத் தொட்டிகளைப் பயன்படுத்துவது உண்டு.