குலோத்துங்கன் உலா

ஒட்டக்கூத்தரால் பாடப்பட்ட நூல் மூவருலா. இதன் இரண்டாம் உலா குலோத்துங்க சோழன் உலா. முதல் உலா விக்கிரம சோழன் உலா இரண்டாம் உலா அவன் மகன்மீது பாடப்பட்ட குலோத்துங்க சோழன் உலா. இவன் இரண்டாம் குலோத்துங்கன் என வரலாற்றில் காணப்படுபவன். மூன்றாம் உலா இவன் மகன் இரண்டாம் இராசராசன் மீது பாடப்பட்ட இராசராசன் உலா.

இந்த நூல் உலா நூல் இலக்கண முறைப்படி அமைந்துள்ளது. 387 கண்ணிகளால் ஆனது. இவன் தில்லையில் செய்த திருப்பணிகள் 21 கண்ணிகளில் கூறப்படுகின்றன.

சோழமன்னர் எல்லாரும் கருநிற மேனி உடையவர்கள். [1] இந்தக் குலோத்துங்கனின் மேனி நிறத்துக்கு ஏற்ப நீலநில ஆடை, நீல மணி முதலானவற்றைப் புனைந்துகொண்டு அவன் உலா வரும்போது வந்து நின்றாள் என்று இந்த நூலின் சில கண்ணிகளில் கூறப்பட்டுள்ளன.

இவன் தில்லைத் திருமுன்றில் இருந்த திருமால் சிலையைக் கடலில் எறிந்தான் என்பர். [2]

தில்லைத் திருமன்ற முன்றில் சிறுதெய்வத்
தொல்லைக் குறும்பு தொலைத்தெடுத்து
என இந்நூலில் வரும் கண்ணி இச் செய்தியைக் குறிப்பிடுகிறது. [3] [4]

இந்த நூலுக்குக் குலோத்துங்க சோழன் உலா உரை என்றும் பழைய உரை ஒன்று உண்டு. இந்தப் பழைய உரையின் பெருமையால் மூவருலாவில் இந்த உலா சிறப்பு மிக்கது என்பதை உணரமுடிகிறது.

காண்க

கருவிநூல்

அடிக்குறிப்பு

  1. இராசராசன் தந்தையான இரண்டாம் பராந்தகன் ஒருவன் மட்டும் சிவந்த மேனி உடையவன். அதனால் இவனைச் ‘சுந்தர சோழன்’ என வழங்கினர்.
  2. தில்லைத் – தென்பாலில்
    சென்னி குலோத்துங்கன் சித்திரகூ டத்திருமால் தன்னை அலை எறிந்தான் தான். (16ஆம் நூற்றாண்டு மணிப்பிரவாள நடை உரையாசிரியர் பிள்ளை லோகஞ்சீயர் செய்த இராமானுசர் திவ்விய சரிதை என்ற நூலில் உள்ள பாடல்)
  3. இச் செய்தியை ஒட்டக்கூத்தர் செய்த பரணியும் தக்கயாகப் பரணி 777 குறிப்பிடுகிறது.
  4. முதலாம் குலோத்துங்கன் மன்னார்குடி இராசகோபாலசாமி கோயிலைக் கட்டிக் குலோத்துங்க விண்ணகரம் என்று பெயர் சூட்டினான்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.