குறுங்குடி மருதனார்
குறுங்குடி மருதனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். மாங்குடி மருதனாரைப் போல இவர் ஊரால் அடையாளம் காட்டப்பட்ட புலவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் இரண்டு உள்ளன. அகநானூறு 4, குறுந்தொகை 344 ஆகியவை அவை.
பாடல் தரும் செய்திகள்
அகம் 4
இந்தப் பாடல் தலைவியும் தோழியும் பேசிக்கொள்வதாக அமைந்துள்ளது.
- கருணை உள்ளம்
- இந்தப் பாடல் கருணை உள்ளத்துக்கு எடுத்துக்காட்டாகப் பலராலும் மேற்கோள் காட்டப்படும் பாடல்களில் ஒன்று. வேந்தன் இட்ட பணியை நிறைவேற்றிய பின்னர் தலைவன் தன் மனைவியை நினைத்துக்கொண்டு தேரில் இல்லம் மீள்கிறான். தேரை இழுத்துவரும் குதிரையின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் மணியின் நாக்கு அசையாமல் கட்டிவைத்துக்கொண்டு தேரை ஓட்டிவருகிறான். மணியின் ஒலி கேட்டால் பூவில் தேன் உண்ணும் வண்டுகளுக்கு இடையூறு நேரும் என்று எண்ணி அப்படிச் செய்கிறான்.[1]
- உறையூருக்குக் கிழக்குப் பக்கத்தில் நெடும்பெரும் குன்றம் ஒன்று இருந்தது. (அது இக்காலத்தில் உச்சிப்பிள்ளையார் கோயில் மலை) இதில் பூக்கும் காந்தள் மலர் போலத் தலைவியின் மேனி மணந்ததாகக் கூறப்படுகிறது.
- கார்காலத்தில் பூக்கும் பூக்கள்
- முல்லை, இல்லம், கொன்றை ஆகியவை கார்காலத்தில் பூக்கும் பூக்கள். இதனை மேய்ந்துகொண்டு இரலைமான் துள்ளி விளையாடும்.
குறுந்தொகை 344
- தலைவன் பிரிந்து சென்றதைத் தலைவி பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று தோழி தலைவிக்குச் சொன்னாள். தலைவி தன்னால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை என்கிறாள்.
- பனிக்காலம். குளிர்ந்த சாரல் காற்று. காளையோடு சேர்ந்திருக்கும் பசு தன் பால்வாய்க் கன்றை எண்ணிக்கொண்டு ஊருக்கு மீளும் மாலை வேளை.[2] பொருள் தேடச் சென்ற அவர் இன்னும் வரவில்லையே! - என்கிறாள் தலைவி.
அடிக்குறிப்பு
- பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாது உண் பறவை பேதுறல் அஞ்சி,
மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன், (அகம் 4) - புலம் பயிர் அருந்த அண்ணல் ஏற்றொடு
நிலம் தூங்கு அணல வீங்கு முலை செருத்தல்
பால் வார்பு, குழவி உள்ளி, நிரை இறந்து,
ஊர்வயின் பெயரும் புன்கண் மாலை
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.