குப்பிச்சி

குப்பிச்சி என்பவன் சிறந்த வீரன். இவனது வல்லமையை விளக்கும் பாடல் ஒன்று கொங்கு மண்டல சதகம் என்னும் நூலில் உள்ளது. [1]

பாடல்

தேசுற்று இலகு விசய நகரத் திறலரசன்
வாசற் பணிக்கனை மண்கொளக் குத்தியம் மன்னனைக் கண்டு
ஏசற்படும் அசமாவினையாட்டி எவரும் மெச்ச
மாசற்ற நாடுகொள் குப்பிச்சியும் கொங்கு மண்டலமே. [2]

இந்தப் பாடல் இவனது சிறப்பினைக் கூறுகிறது.

விசயநகர மன்னரைக் கண்டது

மாட்டையாக் குப்பிச்சி என்பவன் மேல்கரைப் பூந்துறையில் வாழ்ந்துவந்தான். இவன் கொங்கு வேளாளர் காடை குலத்தைச் சேர்ந்தவன். இவன் விசயநகர மன்னனைக் காணச் சென்றான். வாயிலில் நுழைய முடியாமல் சங்கிலி ஒன்றைக் கட்டி, அதனைத் தன் ஒரு காலில் கட்டிக்கொண்டு வாயில் காவலன் நின்றான். உள்ளே செல்லவேண்டுமானால் அந்தக் காவலன் கால் கவட்டைக்குள் நுழைந்து செல்லவேண்டும். குப்பிச்சி அந்தக் காவலனோடு போரிட்டு அவனைக் கொன்றுவிட்டு உள்ளே சென்றான். மன்னன் வியந்தான்.

குதிரையை அடக்கியது

மன்னனிடம் பழக்கி வைக்கப்பட்ட குதிரை ஒன்று இருந்தது. அதில் ஏறிச் சவாரி செய்துவிட்டு வருமாறு குப்பிச்சியிடம் கூறினான். குப்பிச்சி ஒப்புக்கொண்டான். ஏறியதும் அந்தக் குதிரை ஒரு குளத்துக்குள் சென்று நீந்தும். அப்போது ஏறியிருப்பவர் சவாரி செய்ய முடியாது. இந்தச் செய்தியைக் குப்பிச்சி தெரிந்துகொண்டான். கொஞ்சம் சுண்ணாம்புக் கற்களை ஒரு பையில் போட்டு அந்தக் குதிரையின் அடிவயிற்றில் கட்டிவிட்டான். பின் ஏறிச் சவாரி செய்தான். குதிரை வழக்கம்போல் குளத்தில் இறங்கியது. சுண்ணாம்புக் கல் வெந்து வயிற்றைச் சுடவே திரும்பவும் கரைக்கு வந்துவிட்டது. குப்பிச்சி குதிரையை பல இடங்களில் அலைக்கடித்து மன்னனிடம் வந்து சேர்ந்தான். அதனைக் கண்டு பாராட்டிய அரசன் குப்பிச்சியைப் பாராட்டிப் பூந்துறை நாட்டை ஆளும் பொறுப்பினைக் குப்பிச்சியிடம் ஒப்படைத்தான்.

பிற சான்று

பூந்துறை அவினாசிக் கவுண்டர் இயற்றிய வண்டுவிடு தூது என்னும் நூலின் பாடல் பகுதி குப்பிச்சியை இவ்வாறு பாராட்டுகிறது. <poem>விசய நகரத்து மேவி இருக்கும் அசையா நரபதிதன் அன்பால் - இசைவு பெறக் கொங்குக்கு மேன்மை குறிப்பு மணியிழைத்த தங்கப்பொன் தண்டிகையும் தான்படைத்தோன்

பூந்துறை புட்பவன நாதர் கோயிலில் உள்ள பாகம் பிரியா நாயகி கருப்பக்கச் சுவரில் விசயநகர சதாசிவ ராயர் ராம ராசா கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் "திருப்பணிக்குக் குப்பன் [3] அழைப்பித்தான்" என்னும் குறிப்பு உள்ளது.

பூந்துறையில் கல் மேடை ஒன்று உள்ளது. அதன் பக்கங்களில் குதிரையைப் பிடித்தல், குதிரை வயிற்றில் கல் கட்டல், குதிரையில் சவாரி செய்தல் போன்ற குறிகள் வெட்டப்பட்டுள்ளன.

வாயில் காவலன் காலில் சங்கிலி கட்டிக்கொண்டு நிற்றல் அக்கால வழக்கம் என்பதை எட்டயபுரம் சமஸ்தானத்து வம்சமணி தீபிகை மூன்றாவது பிரகாரத்தில் குறிப்பிப்பட்டுள்ளது. வாயில் காவலனான சோமன் என்னும் மல்ல வீரன் காலில் சங்கிலி கட்டிக்கொண்டு நின்ற செய்தி கூறப்பட்டுள்ளது.

மேற்கோள்

  1. அனைத்துச் செய்திகளும் முனைவர் ந. ஆனந்தி, கொங்குமண்டல சதகம் மூலமும் தெளிவுரையும், சாரதா பதிப்பகம் வெளியீடு, 2008 பக்கம் 80-83
  2. கொங்கு மண்டல சதகம் - பாடல் 56
  3. குப்பிச்சி
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.