குன்றம் பூதனார்

குன்றம்பூதனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் முருகப் பெருமானைப் பாடிய இரண்டு பாடல்கள் பரிபாடல் நூலில் உள்ளன. அவை இந்நூலில் 9, 18 எண் கொண்ட பாடல்களாக அமைக்கப்பட்டுள்ளன.

குன்றம்பூதனார் பாடல்களுக்கு இசை

  • 9ஆம் பாடலை மருத்துவன் நல்லச்சுதனார் என்னும் இசைவாணர் பாலைப்பண்ணில் இசையமைத்துப் பாடினார்.
  • 18ஆம் பாடலை நல்லச்சுதனார் என்னும் இசைவாணர் இசையமைத்துக் காந்தாரப்பண்ணால பாடினார்.

குன்றம் பூதனாரின் வேண்டுதல்

  • முருகா! நாங்கள் உன் அடியில் உறைய நினைக்கத்தான் முடியும். நீ அதன் பயனாக எங்களுக்குள் சிறந்து விளங்குவாயாக! (9)
  • முருகா! நான் உன் அடியில் உறைகின்றேன். நீ ஊரிலுள்ள என் சுற்றத்தார் நெஞ்சிலெல்லாம் பிரியாது இருந்தருள வேண்டும். (18)

ஊடல்

வள்ளி, தெய்வானை மோதல்

  • தெய்வானை: வஞ்சகனே! வாழ்க. வாடிய சோலை மழையைப் பற்று இன்புறுவது போல உன்னைக் கூடினேன். நின்பால் தவறு இல்லை. நின்னை அடையும் பேறு பெற்றவரின் தோளை அணைத்துவந்த உன்னைத் தழுவமாட்டேன்.
  • முருகன்: (முருகன் தெய்வானை காலில் விழுந்து வணங்கினான்) இனி வருந்தாதே (என்று சொல்லிக்கொண்டு அணைத்தான்)
  • வள்ளி: (பார்த்துவிட்டாள்) இனி தெய்வானையிடம் செல்லாதே (முருகனின் கையைப் பிடித்து இழுத்தாள். தன் மாலையைப் கழற்றி முருகனை அடித்தாள்)
  • தெய்வானையின் மயிலும், வள்ளியின் மயிலும் ஒன்றோடொன்று போரிட்டுக்கொண்டன.
  • தெய்வானையின் கிளியும், வள்ளியின் கிளியும் எதிர்மழலை பேசிக்கொண்டன.
  • வள்ளிக் குன்றத்து வண்டு தெய்வானையின் கொண்டையிலிருந்த பூவைத் தாக்கியது.
  • அவர்களது தோழிமார் பந்தால் அடித்து மோதிக்கொண்டனர். தம் மார்புக் கச்சுகளை அவிழ்த்து அடித்துக்கொண்டனர். மயிரைப் பிடித்து இழுத்துக்கொண்டனர்.
  • பின்னர் வள்ளியின் தோழிமார் தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, வில்வீரர், வாள்வீரர், சக்கரப்படையினர் முதலானோர் தாக்குவது போலத் தாக்கினர்.
  • தாக்குப்பிடிக்க முடியாத இந்திரன் மகளின் தோழிமார் முருகனைச் சூழ்ந்துகொண்டு சுனையில் மறைந்து நீராடினர்.
  • இதனை அறிந்த வள்ளியின் தோழிமார் சினைப்பூவை மொய்க்கும் வண்டு போலவும், சுனைக்கரையில் ஆடும் மயில் போலவும், சுனையைச் சூழ்ந்து கூவும் மயில் போலவும் மொய்த்தும், ஆடியும், கூவியும் இன்னல் விளைவித்தனர்.

இவையெல்லாம் திருப்பரங்குன்றத்தில் நடைவெறும் பட்டிமன்றம் போலத் தோன்றின.

திருப்பரங்குன்றத்தில் மக்கள் ஊடல்

  • காதலன் மயில் ஆடுவதைப் பார்த்து மகிழ்ந்துகொண்டிருந்தான். காதலி என்னைப் பார்க்காமல் மயிலைப் பார்ப்பது ஏன் என்று ஊடினாள். காதலன் சொன்னான்: உன் நடையை இந்த மயில் கற்றுக்கொண்டாலும் அதற்குச் சரியாக ஆடத் தெரியவில்லையே என்று பார்த்துக்கொண்டிருந்தேன்.

பரிபாடல் 9 தரும் செய்தி

களவுமணம் கற்புமணத்தைவிடச் சிறந்தது

நான்மறைப் புலவர்கள் கற்புமணந்தான் சிறந்தது என்றனர். அதனை மறுத்துக் களவுமணமே சிறந்தது உன்று இப்பாடலில் இப்புலவர் நிலையாட்டிகிறார். முருகன் களவுமணத்தால் வள்ளியை மணந்தத்தையும் இவர் அதற்கு மேற்கோளாக ஆக்கிக்கொள்கிறார்.

  • காமத்தில் சிறந்தது காதலையுடைய களவுமணம். அதில் உடலுறவு கொள்ளாத இருவர் உள்ளத்தால் அன்பு ஒத்து ஊழால் ஒன்றுபட்டு உடலுறவு கொள்கின்றனர். கற்புமணத்தில் அன்பு ஒத்துப்போவதில்லை. அறிவு ஒத்துபோய் நிகழ்கிறது.
  • கற்புமணத்தில் தலைவி தன் பூப்புக் காலத்தை அறிவிக்கத் தன் தோழி ஒருத்தியைச் சிவந்த ஆடை உடுத்திப் பரத்தையோடு வாழும் தலைவன்பால் தூது அனுப்புகிறாள். அதனால் தலைவன் தலைவியைக் கூடுகிறான். இதனைப் பரத்தையர் பழிக்கின்றனர். அத்துடன் கற்புமணத்தில் இன்பம் ஊடலால் கிட்டுகிறது. (களவுமணத்தில் ஊடல் இல்லை.)
  • கற்புமணத்தில் பரத்தை இல்லத்துக்குப் பிரிதல் நிகழ்கிறது. (இது நல்லொழுக்கம் அன்று) (களவுமணத்தில் தலைவன் பொருளுக்காகப் பிரிதல் நல்லொழுக்கம்.)
தள்ளாப் பொருளியல்பின் தண்டமிழ்

தமிழில் உள்ள அகத்திணைப் பொருளியலானது களவு கற்பு என்னும் இருவகையான உறவுமுறைகளைக் கொண்டது. இவற்றில் எந்த நெறியைப் பின்பற்றி வாழ்பவராயினும் அவர் தவறிலர். எனவே இப்பொருளியல்பு தள்ளப்படாத் தன்மை உடையது.

திருப்பரங்குன்றத்தில் பட்டிமன்றங்கள்

  • பட்டிமன்றங்களில் போரிடுதலைச் 'செறு' என்றனர். எனவே இது 'செறுமன்றம்'.

ஆடல் வல்லாரின் ஆடல்செறு, பாணரின் பாடல்செறு, கற்று வல்லாரின் கல்விச்செறு, கல்லாதவரின் வாய்ச்செறு என்றெல்லாம் பலவகையான பட்டிமன்றங்கள் நடைபெற்றன.

பரிபாடல் 18 தரும் செய்தி

வரலாறு

திருப்பரங்குன்றத்தில் சித்திரச்சாலை ஒன்று இருந்தது. அது காமவேள் படைக்கொட்டில் போல அழகுடன் திகழ்ந்தது.

உவமை

  • முருகன் கடல் நடுவில் சூரபன்மாவைக் கொன்றது எழிலிமேகம் கடலை முகந்துசெல்வது போன்றிருந்தது.
  • திருப்பரங்குன்றத்தில் இருந்த சித்திரக்கூடம் காமவேளின் படைக்கொட்டில் போல இருந்தது. அங்கிருந்த சோலைகளும் சுனைகளும் அவனது அம்பறாத்தூணி போன்றன. குன்றத்தில் பூத்திருக்கும் காந்தள் மலர்கள் முருகனிடம் போரில் தோற்றுக் கட்டுண்டார் போன்றிருந்தன. காந்தள் இதழ்கள் யாழ் மீட்டுவோர் விரல்கள் போல் இருந்தன. மலையில் பூத்திருக்கும் மலர்கள் வானவில் சொரியும் நீர்த்திவலைகள் போல் இருந்தன. அங்கு முழங்கும் மேளதாள ஒலிகள் மேக முழக்கம் போல் இருந்தன. மலையில் ஒழுகும் அருவி முருகனின் முத்தாரம் போல் இருந்தது.

குன்றம்பூதனாரின் தமிழ்நடை

குன்றம்பூதனார் எதுகை நலத்துடன் கூடிய நடையைப் போற்றுபவர்.
ஐவளம்(வியக்கத்தக்க வளம்) பூத்த குன்று
மைவளம் பூத்த மகளிர் கண்
கைவளம் பூத்த மகளிரின் கையணைப்பு
மெய்வளம் பூத்த தழுவல்
நைவளம்(பண்) பூத்த யாழ்

- போன்றவை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.