குண்டலினி யோகம்

குண்டலினி யோகம் என்பது யோகாசனங்களில் அம்மக்களின் சீர்படுத்துவதற்காகச் செய்யும் பயிற்சியாகும். சீர்படுத்துவதற்காகச் =குண்டம்(நெருப்பு) + அலி(பாலின வேறுபாடுக்கு உட்படாத) + னி(உயிர்). இவ்வண்டம் எவ்வாறு ஐமூல சக்திகளால் (பஞ்சபூதங்கள்) ஆனதோ அதைப்போலவே மனித உடம்பும் ஐமூல சக்திகளால் ஆனது; ஐந்து முறைகளைக் கொண்டு இயங்குகிறதென்பது யோகக் கலையின் அடிப்படை. அதில் ஆகாய சக்திக்கு உரிய யோகாவே குண்டலினி.

குண்டலினி என்பது சரீரம் சார்ந்த சக்தி.[1] இது முதுகெலும்பின் அடியில் இருக்கும்.[1][2][3] இதை மூலாதாரத்தில் இருந்து ஆக்கினைக்கு ஏற்றும் போது ஒரு குட்டிப்பாம்பு ஊர்வது போல் மேலே ஏறும்[4]

குண்டலினி யோகா குறியீடு

தத்துவம்

பொதுவாக யோக சாஸ்திரங்களில் சிவபெருமான் பரம்பொருளின் உருவ வடிவமாகக் கருதப்படுகிறார். சிவனின் சக்தியாக அன்னை உமையன்னை பேரறிவிற்கும், மனத்தின் ஆற்றலுக்கும், செயலில் ஆற்றலுக்கும் அடையாளமாகக் கருதப்படுகிறார். இந்தச் சக்தி உடலில் குண்டலினி சக்தி என்றும் அறியப்படுகிறது. இதே சக்திதான் அண்ட சராசரங்களை இயக்கும் பிரபஞ்ச சக்தியாகவும் அவற்றிலுள்ள அனைத்து சேதன, அசேதனப் பொருள்களிலும் உறையும் சக்தியாகக் கருதப் படுகிறது. உமையன்னை இந்த பிரபஞ்சத்தின் தாயாகக் கருதப்படுகிறார். ஒவ்வொரு ஜீவனிலும் உறையும் இந்தச் சக்தி அதன் எல்லைகளால் தூங்கும் அரவமாய்ச் செயலற்றுக் கிடக்கிறது. உமையன்னை தன் சேயின்பால் கொண்ட அன்பால், ஜீவனது தளைகளைக் களையும் அறிவாக போதித்த நுட்பங்கள் தான் யோக சாத்திரங்கள் என சொல்லப்படுகிறது.

யோக சாத்திரங்களில் மனமானது கவனத்தினை ஒருமுகப் படுத்திடும் இடங்களாக "சக்கர"ங்கள் சொல்லப்படுகின்றன. சக்கரம் என்ற சொல் வட்டமான வடிவத்தினை குறித்தாலும், யோகாவில் அதற்கு பொருத்தமான சொல்லாக "சுழல் மையம்" என்று சொல்லலாம். ஆற்று நீரில் பார்க்கும் சுழல் போல - உடல் பகுதிகளில் ப்ராண சக்தியின் சுழல் ஏற்படுகையில் அச்சுழல் மையங்கள் சக்கரங்கள் என வழங்கப்படுகிறது. இச்சுழல் மையங்கள் சாதரணமாக மந்தமாகவும் செயலற்றும் இருக்கின்றன. யோகப் பயிற்சிகள் இந்த மையங்கள் மீது மனத்தினை ஒருமுகப் படுத்துகையில், ஏற்படும் சக்தி ஓட்டத்தினால், மன அமைப்புகளின் திறமைகள் விழிப்புறச் செய்வதனால், சாதாரண நிலையினில் அடைய முடியாத உயர் மட்ட உணர்வுகளை அனுபவிக்க இடமளிக்கிறது.

குண்டலினி சக்தி உடம்பில் சக்தி அம்சமாக உள்ளது (மூலாதாரம்). உச்சந்தலையில் சிவா அம்சம் (துரியம் அல்லது ஆக்கினை) உள்ளது. சக்தி சிவத்தைச் சேரும் இன்பமே பேரின்பமான குண்டலினி யோகம்.இந்த அனுபவத்தை சித்தர்கள் நிறையவே தங்கள் பாடல்களில் பதிந்துள்ளனர்.

எளியமுறை குண்டலினி

குண்டலினி யோகா சக்கரங்கள்
  • வேதாத்திரி மகரிசி அவர்களால் வடிவமைக்கப்பட்ட எளிய முறை குண்டலினி யோகத்தில் தேர்ந்த ஒரு வல்லவர் விரும்பினால் ஒருவருடைய குண்டலினி சக்தியை ஒரே நிமிடத்தில் புருவ மையத்திற்கு இடம் மாற்றி அமைத்து விடலாம். காந்தத்தைக் கொண்டு இரும்பை இழுப்பது போல தனது தவ ஆற்றலைக் கொண்டு மற்றொருவர் குண்டலினியை எழுப்பி மாற்றி அமைத்து விடலாம். புருவ மையம் வந்த உடனே குண்டலினி இயக்கம் நன்றாக உணரப் பெறும். ஆக்கினை சக்கரம் என்று கூறுவது வழக்கு. அவ்விடத்திலேயே மனதைக் குண்டலினியில் பழக உயிருக்கும் மனதுக்கும் இடையே உள்ள தொடர்பு விளங்கும்.[5]

செய்முறை

  • இதை தகுந்த ஆசிரியரிடம் பயிற்சி பெறாமல் செய்யக்கூடாது.
  • முதலில் மூலபந்த நிலையில் உட்கார வேண்டும். (மல உறுப்பைச் சுருக்குதல்)
  • அந்த நிலையிலேயே சுவாசத்தைக் கவனிக்க வேண்டும்.
  • பின்னர் சுவாதிசுடானம், மனிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினை ஆகிய ஒவ்வொரு சக்கரங்களிலும் எண்ணத்தை நிறுத்தி சுவாசத்தைக் கவனிக்க வேண்டும்.
  • கடைசியாக துரியத்தில் எண்ணத்தை நிலைபெறச் செய்ய வேண்டும்.
  • உயிர் சக்தியைத் துரியம் அல்லது ஆக்கினையில் நிலைபெறச் செய்வதே குண்டலினி யோகம் எனப்படும்.

மற்ற முறைகள்

  • பிரணாயாமம் மூலம் ஏற்றுதல்.
  • மந்திரங்கள் மூலம் ஏற்றுதல்.
  • காந்தப்பயிற்சி மூலம் ஏற்றுதல்.
  • அதிர்வுகள் மூலம் ஏற்றுதல்.
  • காயகற்பம் மூலம் ஏற்றுதல்.

மற்றும் பல உள்ளன.

மேற்கோள்

  1. For kundalini as "corporeal energy" see: Flood (1996), p. 96.
  2. Flood (1996), p. 99.
  3. Harper et al. (2002), p. 94
  4. McDaniel (2004), p.103
  5. http://www.skysociety.org.sg/tamil/sky.htm

உசாத்துணை

  1. Bio-Magnetism, வேதாத்திரி மகரிசி
  2. Philosophy of Universal Magnetism, வேதாத்திரி மகரிசி

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.