குடபுலவியனார்

குடபுலவியனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல்கள் இரண்டு மட்டும் புறநானூறு 18[1], 19[2] எண் கொண்ட பாடல்களாக இடம் பெற்றுள்ளன. இரண்டு பாடல்களும் பாண்டியன் நெடுஞ்செழியன் பற்றியவை.

குடபுலம் என்பது சேரநாட்டைக் குறிக்கும். பாணர்களின் இசைக் கருவிகளை இயம் என்பர். எனவே இயனார் என்னும் சொல் இசைவாணரைக் குறிக்கும். இவற்றால் இந்தப் புலவர் சேரநாட்டு இசைக்கலைஞர் எனத் தெரியவருகிறது.

பெயர் விளக்கம்

இயம் என்னும் சொல் இசைக் கருவிகளை உணர்த்தும்.[3] இயனார் என்பவர் இசைக்கருவிகளை முழக்குபவர். குடபுலம் நாட்டுப்பகுதியிலிருந்து வந்தவர் ஆகையால் இவரைக் குடபுலவியனார் என்றனர்.

புறநானூறு 18 சொல்லும் செய்தி

  • துறை - முதுமொழிக்காஞ்சி. (முதுமொழி என்பது அறிவு முதிர்ச்சியில் மொழியும் சொல்)

முதுமொழி

'நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம், உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே, உண்டி முதற்றே உணவின் பிண்டம். உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே, நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு, உடம்பும் உயிரும் படைத்திசினோரே'

உடம்பானது உணவால் அமைந்த பிண்டம். உடம்பில் உயிர் இருக்கவேண்டும் என்றால் உணவு வேண்டும். உண்ணும் உணவு நிலமும் நீரும் இணைந்த கூட்டுப்பொருள். நிலத்தில் நீரைச் சேர்த்து வைத்தால் உணவுப்பொருளின் விளைச்சலைப் பெருக்கலாம். எனவே நிலத்தில் நீர் தங்கும்படி சேமித்து வைத்தவர் உடலில் உயிரைப் படைத்தவர் ஆவார்.

அறிவுரை

வானம் பார்த்து விளையும் நிலம் உடம்பில் உயிரைப் படைக்கும் இறைவனாகிய உழவனின் முயற்சிக்குப் பயன்படாது. நிலத்தில் நீர் தேங்கச் செய்தால் உழவனாகிய இறைவனுக்குப் பயன்படும்.

எனவே நிலம் நெளிந்து குழிபட்டுள்ள பகுதிகளில் நீரைத் தடுத்து நிறுத்த வேண்டும். (அது பயிர்களுக்குப் பாய்ச்சப் பயன்படும். அதனால் விளைச்சல் அதிகமாகும்)

புகழ்

மற்றவர்கள் பெறும் புகழை விட நீர்நிலைகளைப் பெருக்கியவரின் பெயர் இவ்வுலகில் உயிர் கொடுத்தோர் பட்டியலில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

செல்லும் உலகத்துச் செல்வம்

இந்த உலகத்துச் செல்வம் நாம் துய்ப்பது. இறந்தபின் அடையும் உலகத்துச் செல்வம் இந்த உலகில் நம் புகழ் நிலைத்திருப்பது.

இரண்டு உலகங்களின் செல்வத்தையும் ஒருங்கு பெறவேண்டுமென்றால் நிலத்தில் நீர்நிலைகளைப் பெருகச் செய்க என்று குடபுலவியனார் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு அறிவுரை கூறுகிறார்.

புறநானூறு 19 சொல்லும் செய்தி

  • துறை; அரசவாகை

வாகைப் பூ சூடி அரசன் தன் வெற்றியைக் கொண்டாடும் நிகழ்ச்சி வாகை எனப்படும். இந்தப் புலவர் முந்தைய பாடலில் போர் வெற்றியைப் புறந்தள்ளியவர்.

எழுவரை அடக்கிய வெற்றி

(தலையாலங்கானம் என்னுமிடத்தில்) தம்மை எதிர்த்த ஏழு அரசர்களின் கொட்டத்தை நெடுஞ்செழியன் அடக்கினான்.

இது வெற்றியா

இந்த வெற்றியை 'இன்ன விறலும் உளதுகொல்' என்று புலவர் ஏளனம் செய்கிறார். இது வெட்டியாகாது என்பதற்குப் புலவர் காட்டும் காரணங்கள் இவை.

  1. 'தமிழ் தலைமயங்கிய தலையாலங்கானம்' தமிழ்நாட்டு மன்னர்களைத் தமிழ்நாட்டு மன்னரே வெல்வது வெற்றியாகாது. பிறநாட்டு மன்னரை வென்றிருந்தால் அது வெற்றி.
  2. பெருங்கல் அடார் என்னும் பொறி வைத்துப் புலியைப் பிடிப்பது போல ஏழு பேரையும் மாட்டவைத்துப் பிடிப்பது வெற்றியாகாது.
  3. யானைகளின் துதிக்கைகளைத் துண்டாக்கி நிலத்தில் கலப்பை போலப் புரளும்படி செய்த கொலை வெற்றி ஆகாது.
  4. மூதில் பெண்டிர் உள்ளம் தம் கணவரையும், புதல்வரையும் பறிகொடுத்துவிட்டுக் கசிந்து அழும்படிச் செய்த்தால் வெற்றி ஆகாது.

உவமை

  • எமன் ஒருவன் பல உயிர்களைக் கொல்வது போல யெடுஞ்செழியன் பல உயிர்களைக் கொன்றான்.
  • பெரிய கல்லைத் தூக்கி வைத்து புலியை 'பெருங்கல் அடார்' என்னும் பொறியால் கொல்வது போலக் கொன்றான்.
  • வானத்தில் குருவிகள் பறப்பது போலப் போர்க்களத்தில் அம்புகள் பறந்தன.
  • துண்டுபட்டுக் கிடந்த யானையின் துதிக்கைகள் கலப்பைகள் போலக் கிடந்தன.

வெளி இணைப்புகள்

  1. குடபுலவியனார் பாடல் புறநானூறு 18
  2. குடபுலவியனார் பாடல் புறநானூறு 19
  3. இன்னிசை அருவியோடு இன் இயம் கறங்க - திருமுருகாற்றுப்படை 240
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.