கிடங்கில் குலபதி நக்கண்ணனார்

கிடங்கில் குலபதி நக்கண்ணனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 252. இதில் அரிய தொடர்கள் உள்ளன.

குறுந்தொகை 252 பாடல்

நெடிய திரண்ட தோள்வளை நெகிழ்த்த
கொடியன் ஆகிய குன்று கெழு நாடன்
வருவதோர் காலை இன்முகம் திரியாது
கடவுள் கற்பின் அவன் எதிர் பேணி
மடவை மன்ற நீ எனக் கடவுபு
துனியல் வாழி தோழி சான்றோர்
புகழு முன்னர் நாணுப
பழி யாங்கு ஒல்பவோ காணுங்காலே.

குறுந்தொகை 252 பாடல் தரும் செய்தி

கொடியவனாகிப் பிரிந்து சென்று வந்தவனிடத்திலும் இன்முகம் காட்டுகிறாயே என்று கூறி வியந்த தோழிக்குத் தலைவி சொல்கிறாள்.

சான்றோர் புகழுக்காகவும் நாணுவர். நான் இன்முகம் காட்டாவிட்டால் தாம் பழி செய்துவிட்டதாக அவர் உணர்வர். அப்போது என்ன ஆவாரோ என்று எண்ணித்தான் இன்முகம் காட்டுகிறேன்.

கடவுள் கற்பு

அவள் உடலும் உள்ளமும் சோரும்படி விட்டுவிட்டுப் பிரிந்து சென்று மீண்டு வந்தாலும் இன்முகத்தோடு அவனை வரவேற்றுப் பேணுதல் கடவுள் கற்பு என்று போற்றப்படுகிறது.

கற்பு = கற்றுக்கொண்ட கடமை
கடவுள் = உலகியலைக் கடந்து உள்ள நிலைமை

சான்றோர் புகழு முன்னர் நாணுப

பிறர் தன்னைப் புகழத் தொடங்கும் முன்னரே நாணுவர். இது ஆண்களும் கொள்ளும் நாணம்.

பழந்தமிழ்

நிகழ்கால வினையெச்சம்

கடவுபு - கடவிக்கொண்டு
கடவுபு துனியல் = கேட்டுக்கொண்டு மாறுபட்டு நிற்காதே

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.