காவல் முல்லைப் பூதனார்

காவல் முல்லைப் பூதனார் சங்ககாலபு புலவர்களில் ஒருவர். அகநானூறு 21, 151, 241, 293, 391, குறுந்தொகை 104, 211, நற்றிணை 274 ஆகிய எட்டுப் பாடல்களைப் பாடியவர் இவர். இந்தப் பாடல்கள் அனைத்தும் பாலைத்திணைப் பாடல்கள்.

கோவலர் ஊறாது இட்ட உவலைக் கூவல்

செந்நாய்

பொருள் ஈட்டச் சென்ற தலைவன் வழியில் நினைத்துப் பார்க்கிறான்.

ஆடுமாடு மேய்க்கும் கோவலர் தண்ணீருக்காகக் கிணறு தோண்டுவர். அதற்குக் கூவல் என்று பெயர். வலிமையான வாயையுடைய உளியை வைத்துக் கணிச்சி என்னும் சம்மட்டியால் அடித்து அந்தக் கூவலை அவர்கள் தோண்டுவர். கோடைகாலத்தில் அதில் தண்ணீர் ஊறாது. அப்போது அதனை யானை விழும் மூடுபள்ளமாகப் பயன்படுத்திக்கொள்வர். இதற்கு இயவுக்குழி என்று பெயர். இதில் விழுந்த யானையை மீட்க மற்ற யானைகள் அக் குழியில் மண்ணைத் தள்ளித் தூர்க்குமாம். இலை உதிர்ந்த மரங்களில் பூ அரும்ப அந்த அரும்புகள் உதிரும்படி தென்றல் வீசும்போது அவ்வழியில் செல்லும் மள்ளர்களின் தலைமயிர் பறக்குமாம். ஓமைமரத்தில் பருந்துகள் இளைப்பாறுமாம். கருவுற்றிருக்கும் தன் பெண்ணின் பசியைப் போக்க ஆண்செந்நாய் கேழல் என்னும் காட்டுப் பன்றியை வேட்டையாடுமாம். இப்படிப்பட்ட வழியில் தலைவன் சென்றானாம். நொச்சிப் பூப் போலப் பல்வரிசை, தாழ்ந்த மெல்லிய கூந்தல், மூங்கில் போன்ற தோள் ஆகியவற்றைக் கொண்ட தலைவியின் நலம் அழிய விட்டுவிட்டுச் சென்றானாம். - இது தலைவியின் கவலை.

அகநானூறு 21

கணி வாய்ப் பல்லிய காடு

தலைமகள் சொல்கிறாள்.

செதுக்கிய பதுக்கைகளில் இருந்துகொண்டு பல்லி மணியைப்போல் ஒலித்துப் பாலைவழியில் செல்வோருக்குக் கணியம்(சோதிடம்) கூறுமாம். கலைமான் தலை போல் முருக்கிக்கொண்டிருக்கும்ருக்கும் உழிஞ்சில் நெற்றுக்கள் கூத்தாடும் பெண் பறை ஒலிப்பது போல் ஒலிக்குமாம். இத்தகைய காட்டில் அவர் பொருள் தேடச் செல்கிறாராம்.

பொருள் எதற்கு?

அவரை விரும்பி வாழ்வோருக்கும், அவரால் விரும்பப்படுவோருக்கும், உறவினர்களுக்கும், கெழீஇ வாழும் நண்பர்களுக்கும், நகைமுகம் காட்டமுடியாமல் வறுமையில் வாடுவோருக்கும் நல்கி அவர்களை வாழவைப்பதற்குப் பொருள் வேண்டுமாம். அதற்காக அவர் பொருளீட்டச் செல்கிறாராம்.

பொருள் நினைக்கும் நெஞ்சத்தில் அருள் இருக்குமா?

அகநானூறு 151

வட்டக் கழங்கு (வட்டாடும் கழங்கு விளையாட்டு)

தலைவி தோழியிடம் சொல்கிறாள். அவர் சினம் கொள்ளாத நட்பினை உடையவர். இனியவர். நல்குவர். என்கிறாய். செம்முக மந்தி நெல்லிக்கனியை வட்டாடுவது போல நிலத்தில் உதிர்க்கும் வளம் மாறி மந்திகளே உணவில்லாமல் புலம்புமாம். அங்கு வெயிலின் வெண்தேர்ப் பேய் மழை பெய்வது போல் தோன்றி ஓடுமாம். மூங்கில் நரநரவென நரலுமாம். அருவியில் நீர் இருக்காதாம். இப்படிப்பட்ட பாலைநில மலைவழியில் அவர் செல்கிறாராமே! இதனை எண்ணினால் கவலையில்லாமல் எப்படி இருக்கமுடியும்?

அகநானூறு 241

தாய் பிரித்து யாத்த நெஞ்சு அமர் குழவி

கோவலர் தாயிடமிருந்து பிரித்து அதன் கன்றைக் கட்டிவைப்பர். அதுபோல அவர் என்னைப் பிரித்துக் கட்டிவைத்துவிட்டு அவர்மட்டும் காட்டு வழியில் செல்ல நினைக்கிறார். அதனை இன்னா மொழியாகக் கூறவும் செய்கிறார். நான் நொந்து நொந்து மயங்குகிறேன் - என்கிறாள் தலைவி.

வேனில் வெஞ்சுரம்

சிலம்பி

இலை உதிர்ந்து கொம்புகள் காய்ந்திருக்கும் மரங்கள். அவற்றில் வலை விரித்தது போல் சிலம்பிக் கூடுகள். வெயில் விரித்து ஆடும் நிலம். உகாப் பழம் உதிர்ந்து கிடக்கும் பரப்பு. இப்படிப்பட்டதுதான் கோடைகாலத்துக் கொடிய பாலைவழி.

உகாஅ இருங்கனி

குயிலின் கண்ணைப் போலப் பிஞ்சுவிட்டு மணிக்காசு போல் கருமையாகப் பழுத்திருக்கும் நாவல் பழம்.

துகிலாய் செய்கைப் பா விரித்தல்

ஆடை நெய்வோர் பாவோட்டி விரிப்பது போல் இலையில்லாத மரக் கிளைகளின் நிழல் தரையில் விழுந்திருக்குமாம்.

அகநானூறு 293

பொதிமாண் முச்சி

தலைவி தோழியிடம் சொல்கிறாள். அவன் என்னைப் புணர்ந்தான். அதிரல் பூவும் முல்லைப் பூவும் சூடியிருந்த என் கூந்தல் கலைந்துபோயிற்று. அதனை அவன் முச்சியாக வாரி முடித்துவிட்டான். சில நாள்தான் வந்து இதனைச் செய்தான். இந்தப் பழமையை நான் நினைத்துக்கொள்கிறேன். அவன் சுட்டெரிக்கும் வெயிலில் பாலைநில வழியில் செல்கிறான். யானை தன் கொம்பால் குத்திப் பொளித்த மரப்பட்டைகளைத் தன் கை வலியோடு எடுத்து மலைக்குள் புகும் பாம்பு போலத் தன் வாய்க்குள் திணிக்கும் பாலைநிலத்தில் செல்கிறான். இவற்றை எண்ணி என் கண் மூட மறுக்கிறது. - என்கிறாள்.

அகநானூறு 391

தாளித் தண்பவர்

தாளித் தண் பவர்

தலைவி தோழியிடம் சொல்கிறாள். நான் தாளிச்சட்டியில் கொடி வளர்த்தேன். அதனைப் பட்டப்பகலில் நான் வளர்க்கும் பசுவே மேய்ந்துவிட்டது. (அதுபோல என்னை மேய்ந்துவிட்டு) அவர் பிரிந்து சென்ற நாள் ஒன்றிரண்டு அல்ல, பல. - என்கிறாள்.

குறுந்தொகை 104

ஆராது பெயரும் தும்பி

தும்பி

அவர் அருளின்றி பிரிந்தாரே என்று சொல்லிக் கவலைப்படுகிறாள் தலைவி. தோழி அவளைத் தேற்றுகிறாள். இலை இல்லாத மரங்களைச் சுற்றிவிட்டு தும்பி என்னும் வண்டினம் வயிறு நிரம்பாமல் மீளும் பாலைநில வழி அது. வண்டு போல அவரும் மீண்டு வந்துவிடுவார். கவலைப்படாதே என்கிறாள் தோழி.

குறுந்தொகை 211

எம்மொடு வருதியோ

பொம்மல் ஓதி! (பொங்கும் கூந்தலை உடையவளே!) மான் விளையாடிக்கொண்டு வந்து உன்னை மோதினால் உன் காசுமணியிலுள்ள முத்துக்கள் சிதறி விழுவது போல, குமிழம் பழங்கள் கொட்டும் வழியில் நீ எட்டமொடு வருகிறாயா என்று அவர் கேட்டதுண்டு. ஆனால் அது புலி நடமாடும் மலைநிலப் பாலையாயிற்றே என்று சொல்லி விட்டுவிட்டுப் போய்விட்டார் என்கிறாள் தலைவி.

நற்றிணை 274
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.