காவட்டனார்

காவட்டனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் அவரது பாடல்கள் 2 இடம்பெற்றுள்ளன. அவை அகநானூறு 376, புறநானூறு 359 எண் கொண்ட பாடல்கள்.

அகநானூறு 376 பாடல் தரும் செய்தி

நாட்டில் நடனம்

மகளிர் சூடிக்கொள்ளும் வகையில் வேங்கை பூத்தது. அதன் தாதுகள் உதிர்ந்தன. மயில் தோகை விரித்து ஆடியது. வருடை மான் தன் ஆண்துணையோடு கொம்புகளை மாட்டிச் சேர்த்து ஆடியது.

இந்த ஆட்டம் ஆடுகளத்தில் வயிரியர் ஆடுவது போல் இருந்தது.

பிரிவில் தலைவியை வருத்துவன

  • கருத்து மாறுபட்டு அன்னை அயரா நோக்கமொடு கண்காணித்தல்
  • வடந்தைக் காற்று வீசல்
  • பனிக் காலத்தில் ஞாயிறு குடகடலில் மாலையில் குளித்தல்

இப்படிப்பட்ட துன்பத்தை எப்படிப் பொறுத்துக்கொண்டிருக்கிறாய் என்று தோழி கேட்கத் தலைவி விடைகூறும் பாங்கில் இப் பாடல் அமைந்துள்ளது.

பிரிவில் தலைவிக்கு ஆறுதல் தருவன

தலைவன் நாட்டில் பலாப்பழத்தைக் கையில் வைத்துக்கொண்டு கடுவனும் மந்தியும் விளையாடுவது. (இதனைப் பார்க்கும்போது தனைவன் தன்னை நினைத்துகொண்டு வந்து மணந்துகொள்வான் எனத் தலைவி நம்புகிறாள்.)

புறநானூறு 359 பாடல் தரும் செய்தி

அந்துவன் கீரன்

சேர மன்னன் அந்துவன் கீரனுக்கு இப்புலவர் கூறும் அறிவுரைகள் இப் பாடலில் உள்ளன.

  • துறை - பெருங்காஞ்சி

நிலையாமை பற்றிக் கூறுவது பெருங்காஞ்சி.

'காடு முன்னினரே நாடு கொண்டோரும்'

பலநாடுகளை வென்ற வேந்தரும் சுடுகாடு சென்றுவிட்டனர். எனவே புகழைத் தேடு என்கிறார் புலவர்.

அறிவுரை

  • 'வசையும் நிற்கும், இசையும் நிற்கும், அதனால், வசை நீக்கி இசை வேண்டு'
  • 'நசை வேண்டாது நன்று மொழி'
  • களிறு, மா, தேர் இரவலர்களுக்குக் குறைவின்றி வழங்கு
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.