காற்றுமெத்தை உந்து

காற்றுமெத்தை உந்து அல்லது காற்றுமெத்தை ஊர்தி (Hovercraft), என்பது பொதுவாக நிலம் நீர் ஆகிய இருபரப்புகளிலும், அதிக மேடுபள்ளம் இல்லாமல் ஓரளவுக்குச் சமமாக இருக்கும் பொழுது, காற்றை கீழ்நோக்கி அழுத்தத்துடன் செலுத்தி முன் ஏகும் ஓர் ஊர்தி.

நிலம் நீர் ஆகிய இருபரப்பிலும் செலுத்தவல்ல காற்றுமெத்தை உந்து

வரலாறு

1716ல் முதல் முதலாக வரலாற்றில் பதிவான ஓரளவிற்கு காற்றுமெத்தை உந்துபோல் ஒன்றை ஆக்கியவர் இம்மானுவேல் ஸ்வீடன்பர்கு (manuel Swedenborg) என்னும் ஸ்வீடன் நாட்டவர் ஆவார். இவர் ஒரு பொறி சமைப்பாளரும், மெய்யியல் அறிஞரும், கடவுள்கொள்கை அறிஞரும் ஆவார். படகு ஒன்றை தலைகீழாக கவிழ்த்தது போல இருக்கும் ஓர் ஊர்தியில், கையால் துடுப்பு போன்ற ஒன்றால் காற்றை உந்தித்தள்ளுவது போன்று மைந்த ஒரு ஊர்தியை அறிவித்திருந்தார்.

1870களின் நடுவில் பிரித்தானியப் பொறியியலாளர் சர் ஜான் ஐசாக் தார்ணிகிராப்ட் அவர்கள் படகின் அடிப்பகுதியில் உராய்வைக் குறைக்க காற்றை செலுத்துமாறு ஒரு முறையை முன்வைத்தார். காற்றை உயவுப் பொருளாக (உராய்வைத் தடுக்கும் பொருளாக) பயன்படுத்தும் பல புதிய ஆக்கங்களுக்கான காப்புரிமங்களை 1877ல் பதிவு செய்தார் எனினும், செயல்முறையில் பயன்படத்தக்க ஆக்கங்கள் ஏதும் உருவாகவில்லை.

பயணிகளை ஏற்றிச் செல்லும் காற்றுமெத்தை ஊர்தி

பின்லாந்து பொறியாளர் டோய்வோ காரியோ என்பார் வால்டியொன் லெண்டோகோனெட்டேடாஸ் (Valtion Lentokonetehdas (VL) ) என்னும் வானூர்தி இயந்திரம் செய்யும் தொழிற்கூடத்தின் தலைவராய் இருந்தார்(. இவர் 1931ல் தரையின் மேல் பரப்பில் காற்றழுத்தத்தால் மிதக்கும் ஊர்தி ஒன்றை செய்து ஓட்டிக் காட்டினார். எனினும், போதிய பொருள் ஊக்கம் பெறாததினால் அம்முயற்சி மேலும் வளர்ச்சி அடையவில்லை. பின்லாந்தின் காப்புரிமம் எண்கள் 18630, 26122. ஆகியவை இவருடைய புதிய ஆக்கங்களை விரிக்கின்றது.

வடிவமைப்பு

காற்றுமெத்தை உந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விசைப்பொறியைக் கொண்டுள்ளது. பல விசைப்பொறிகள் உள்ள காற்றுமெத்தை உந்துகளில் ஒரு விசைப்பொறி விசிறியை இயக்கப்பயன்படுகிறது. இந்த விசிறியானது காற்றுமெத்தை உந்துவை அதிக அழுத்தத்துடன் தள்ள பயன்படுகிறது. கூடுதலான விசைப்பொறி உந்து சக்தியை கொடுக்கிறது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.