காற்றழுத்தவியல்

காற்றழுத்தவியல் (Pneumatics) என்ற தொழில்நுட்ப பிரிவில் இயந்திர இயக்க நோக்கத்துடன் அழுத்தத்தில் உள்ள வளிமம் குறித்த ஆய்வுகளும் அதன் பயன்பாடும் அடங்கும்.

1923ஆம் ஆண்டு இயங்கிய போர்ட்டர் லோகோமோட்டிவ் கம்பனியின் பாதுகாக்கப்பட்ட எண்.3920.

காற்றழுத்தவியல் அமைப்புக்கள் விரிவாக தொழிற்துறையில் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான தொழிற்சாலைகளில் அழுத்தத்தில் உள்ள காற்று அல்லது செயலறு வளிமக் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. மையமாக அமைக்கப்பட்டுள்ள மின்விசையால் இயங்கும் வாயு அழுத்தியிலிருந்து காற்றழுத்த உருளைகளுக்கும் மற்ற காற்றழுத்த கருவிகளுக்கும் வரிச்சுருள் ஊடிதழ் மூலமாக வழங்கப்படுகின்றன. பெரும் எண்ணிக்கையிலான மின்சார இயக்கிகளுக்கும் மின் ஏவிகளுக்கும் மாற்றாக இது குறைந்த செலவில் பாதுகாப்பான, நெகிழ்வுள்ள, நம்பத்தக்க வகையில் இயக்குவிசையை தொழிற்பட்டைகளுக்கு வழங்குகிறது.

காற்றழுத்தவியல் பல் மருத்துவம், கட்டுமானம், சுரங்கத் தொழில், போன்ற பிற துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

காற்றழுத்தவியல் கருவிகளுக்கான சில காட்டுகள்

  • காற்றழுத்த துளையிடுகருவி (ஜாக்ஹாம்மர்) - சாலைப்பணியாளர்களால் பயன்படுத்தப்படுகிறது
  • ஆணித் துப்பாக்கி
  • நிலைமாற்றி
  • காற்றழுத்த ஏவிகள்
  • வாயு அழுத்திகள்
  • வெற்றிட ஏற்றிகள்
  • பரோசுடார் அமைப்புகள்
  • கம்பிவட புகுத்திகள் - தரையடி தடக்குழாய்களில் கம்பிவடத்தை செலுத்திட
  • காற்றுத் தடுப்பான்கள் - பேருந்துகள், தொடருந்துகள் மற்றும் சரக்குந்துகள்

நீர்ம விசையியலுடன் ஒப்புநோக்கல்

காற்றழுத்தவியலும் நீர்ம விசையியலும் பாய்ம ஆற்றலின் பயன்பாடுகளே. காற்றழுத்தவியலில் காற்று அல்லது நெருக்கத்தகு வளிமம் ஒன்று பயன்படுத்தப்படுகிறது; நீர் விசையியலில் நீர் அல்லது எண்ணெய் போன்ற எளிதாக நெருக்கவியலா நீர்மங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

காற்றழுத்தவியலின் நன்மைகள்

  • இயக்கப்படும் பாய்மம் மிக கனமில்லாதது; எனவே ஏற்றிச்செல்லும் குழாய்கள் கனமின்றி இருக்கின்றன.
  • பெரும்பாலான நேரங்களில் இயங்கு வளிமம் காற்றாக இருப்பதனால் பயன்படுத்தப்பட்ட பாய்மத்தை திரும் எடுத்துச்செல்லும் குழாய்கள் தேவையில்லை; மேலும் கசிவுகள் பெரும் சிக்கலில்லை.
  • காற்று அழுத்தத்தில் இருப்பதால் அதிர்வினால் கருவி பாதிப்படைவதில்லை. காற்று அதிர்வுகளை வாங்கிக்கொண்டு கருவிக்கு சேதத்தை மட்டுப்படுத்துகிறது. நீர்ம விசையியலில், இதற்கு மாறாக, விசையை பாய்மம் நேரடியாக கருவிக்கு அல்லது இயக்குபவருக்கு மாற்றுகிறது.

நீர்ம விசையியலின் நன்மைகள்

  • உயர்ந்த ஆற்றல் அடர்த்தி - உயர்ந்த அழுத்தத்தை மேற்கொள்வதால்.
  • நீர்ம விசையியல் பாய்மம் அடிப்படையில் நெருக்கவியலா தன்மை உடையன; எனவே மிகக் குறைந்த சுருள்வில் செயல் ஏற்படுகின்றது. நீர்ம ஓட்டத்தை நிறுத்துகையில், மிகக்குறைவான இயக்கமும் பளுமீதான அழுத்தத்தைக் குறைக்கிறது. மற்றதைப்போல காற்றழுத்தத்தை "கசிவுறச் செய்ய" வேண்டியதில்லை.

மேற்சான்றுகள்

    • Compressed Air Operations Manual, ISBN 0-07-147526-5, McGraw Hill Book Company

    வெளி இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.