காரவேலன்
காரவேலன் (கிமு 193 - 170) பண்டைய கலிங்க இராச்சியத்தை ஆண்ட மகாமேகவாகன வம்சத்தின் மூன்றாவதும் மிகச் சிறந்தவனுமான பேரரசன் ஆவான். காரவேலன் குறித்த முக்கியமான தகவல்கள் அவனது 17 வரிகளைக்கொண்ட ஆத்திகும்பா கல்வெட்டில் கிடைக்கின்றன. இக்கல்வெட்டு, ஒடிசாவின் புபனேசுவருக்கு அருகில் உள்ள உதயகிரிக் குன்றில் காணும் குகையொன்றில் காணப்படுகிறது.
காரவேலனின் பேரரசு ଖାରବେଳ | |||||
| |||||
தலைநகரம் | சிங்கபுரம் | ||||
சமயம் | சமணம்[1] | ||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||
வரலாறு | |||||
- | உருவாக்கம் | கிமு 193 | |||
- | குலைவு | கிமு 170 | |||
தற்போதைய பகுதிகள் | ![]() ![]() ![]() | ||||
மௌரியப் பேரரசன் அசோகன் காலத்தில் வலுவிழந்த கலிங்க இராச்சியத்தின் படை வலிமையைக் காரவேலன் மீண்டும் மீட்டெடுத்தான். காரவேலனின் தலைமையின் கீழ் கலிங்கம் குறிப்பிடத்தக்க கடல் ஆதிக்கம் கொண்டிருந்தது. சிங்களம் (இலங்கை), பர்மா (மியன்மார்), சியாம் (தாய்லாந்து), வியட்நாம், கம்போஜம் (கம்போடியா), மலேசியா, போர்னியோ, பாலி, சுமாத்திரா, ஜாவா ஆகிய நாடுகளுடன் கலிங்கத்துக்கு வணிகத் தொடர்புகள் இருந்தன. காரவேலன், மகத, அங்க, சாதவாகன அரசுகள் மீது படையெடுத்து வெற்றி கண்டுள்ளதுடன், தெற்கே பாண்டியப் பேரரசு வரை அவனது செல்வாக்கு இருந்தது. இவற்றின் மூலம் காரவேலன், கலிங்கத்தை ஒரு மிகப்பெரிய பேரரசாகக் கட்டியெழுப்பினான். இவன் தெற்கேயிருந்த தமிழ் அரசுகளின் கூட்டணியையும், மேற்கிலிருந்த வல்லரசுகளையும், பக்ட்ரியாவின் இந்திய-கிரேக்க அரசன் டெமெட்ரியசையும் தோற்கடித்துள்ளான்.
காரவேலன் சமயப் பொறையைக் கடைப்பிடித்தாலும், சமண சமயத்துக்கு ஆதரவு வழங்கினான்.[1][2]
பெயர்
காரவேலன் என்னும் பெயரின் சொற்பிறப்புக் குறித்துப் பல ஐயங்கள் இருந்தாலும், இது திராவிட மூலத்தைக் கொண்டது என்பது பெரிதும் ஏற்கப்பட்டுள்ளது.[3] தமிழில் வேலன் என்பது வேலை ஏந்தியவன் என்னும் பொருள் கொண்டது.[3]
மூலங்கள்
காரவேலன் குறித்து அறிந்து கொள்வதற்கான முக்கிய மூலம் புபனேசுவருக்கு அண்மையில் உள்ள உதயகிரிக் குன்றின் குகையொன்றில் காணப்படும் ஆத்திகும்பா கல்வெட்டு ஆகும். இக்கல்வெட்டை ஆராய்ந்த சிலர் காரவேலன் "செதி" குலத்தைச் சேர்ந்தவன் என்கின்றனர். ஆனாலும் இது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இக்கல்வெட்டு காரவேலன் முனி அரசனான வசுவின் மரபில் வந்தவன் என்கிறது. இவ்வாறான தொன்மம் சார்ந்த மரபுவழி ஒரு புறம் இருக்கப் பல ஆய்வாளர்கள் இவனது மூலத்தைக் கண்டறிய முயன்றுள்ளனர். எனினும் எதுவும் பொதுவாக ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.
காலம்
காரவேலனின் காலத்தைக் கணிப்பது விவாதத்துக்கும், சர்ச்சைகளுக்கும் உரியதாக உள்ளது. வரலாற்றுக் காலவரிசையில், காரவேலனின் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தது, ஆட்சிக்காலம் என்பவற்றைத் துல்லியமாக அறிந்துகொள்வது சவாலாகவே உள்ளது. ஆத்திகும்பா கல்வெட்டிலிருந்து கிடைக்கும் உட்சான்றுகளின்படி காரவேலனின் ஆட்சிக்காலம் கிமு முதலாம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதிக்குள் அடங்குவதாகத் தெரிகிறது. வேறு சான்றுகள் கிடைக்கும் வரை இவனது ஆட்சிக்காலம் குறித்த சர்ச்சைகள் தொடரும். இந்திய நாணயவியலாளரான பி. எல். குப்தா ஆத்திகும்பா கல்வெட்டு கிபி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருத்து வெளியிட்டுள்ளார். தொல்லெழுத்தியலின்படி இக்கல்வெட்டை கிபி முதலாம் நூற்றாண்டுக்குப் பின்தள்ளுவதில் சிக்கல்கள் உள்ளன. இந்திய எழுத்தியலாளர் இக்கல்வெட்டை கிமு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதவே விரும்புகின்றனர்.
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- "Maharaja Kharavela". பார்த்த நாள் 2012-01-16.
- "Maharaja Kharavela's Family". பார்த்த நாள் 2012-01-16.
- Mazumdar, B. C. (1925). Orissa in the making. University of Calcutta. பக். 21.