காசிபன் கீரன்

காசிபன் கீரன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். கீரனார் என்று கூறப்படாமல் கீரன் என்று இவரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமையால் இவரை அரசன் புலவர் எனக் கொள்வது முறைமை. கீரன் என்னும் இந்த அரசப் புலவரின் தந்தை காசிபன்.[1] இவரது பாடல் ஒன்றே ஒன்று மட்டும் உள்ளது. அது நற்றிணை 248 எண் கொண்ட பாடலாக உள்ளது.

பாடல் தரும் செய்தி

இவரது இந்தப் பாடல் [2] முல்லைத் திணையைச் சேர்ந்தது.

மழை பொழிய இடி முழங்குகிறது. கார்காலத்துக்கு முன் திரும்பிவிடுவதாகச் சொல்லிச் சென்ற தலைவன் திரும்பவில்லை. தலைவி கவலைப்படுகிறாள். தோழி பொய் இடியை நம்பி மயில் ஏமாந்தது போல நானும் ஏமாறுவேனா என்று மழையைப் பார்த்துச் சொல்வது போலத் தேற்றுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

இவர் பயன்படுத்தியுள்ள அரிய சொற்கள்

புகர் = புள்ளி
ஆஞர் = துன்பம்
காணியர் - வினையெச்சம்
செத்து = போல

அடிக்குறிப்பு

  1. இந்தப் புலவரைக் காசிபன் கீரனார் எனக் குறிப்பிடும் பாட வேறுபாடும் உண்டு
  2. சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ,
    பொறி வரி நல் மான் புகர் முகம் கடுப்ப,
    தண் புதல் அணிபெற மலர, வண் பெயல்
    கார் வரு பருவம் என்றனர்மன்-இனி,
    பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர்,
    அன்பு இன்மையின் பண்பு இல பயிற்றும்
    பொய் இடி அதிர் குரல் வாய் செத்து ஆலும்
    இன மயில் மடக் கணம் போல,
    நினை மருள்வேனோ? வாழியர், மழையே! (நற்றிணை 248)

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.