கரும்பொருள் (இயற்பியல்)
கரும்பொருள் (black body) என்பது தன் மீது விழும் அனைத்து மின்காந்த கதிர்வீச்சையும் ஈர்த்துக் கொள்ளும் தன்மையுடைய ஒரு பொருளாகும். இது ஓர் இயற்பியல் கருத்துருவாகும்.


முழுக்கரும்பொருள் (perfect black body), அதன்மீது விழுகின்ற அனைத்து அலைநீளங்களும் உடைய வெப்பக் கதிர்வீச்சினை முழுமையாக உட்கர்கிறது. மற்றும் சூடேற்றப்படும்போது அனைத்து அலைநீளங்களையும் வெளிவிடுகிறது.முழுக்கரும்பொருள் எந்த வெப்பக்கதிர்வீச்சினையும் எதிரொளிப்பது அல்லது கடத்துவது இல்லை என்பதால் முழுக்கரும்பொருளின் உட்கவர்திறன் மதிப்பு ஒன்று ஆகும்.
எந்த ஒரு மின்காந்தக் கதிர்வீச்சும் கரும்பொருளின் வழியே கடப்பதோ அல்லது பிரதிபலிப்பதோ இல்லை. கட்புலனாகும் ஒளி (மின்காந்த கதிர்) பிரதிபலிப்பது அல்லது கடத்தப்படுவது இல்லை என்பதால் குளிர்ச்சியாக உள்ளபோது அது கருமையாகக் காட்சியளிக்கிறது. எனினும், கரும்பொருளானது கதிர்வீச்சின் நிறமாலைக்கு ஏற்ப வெப்பநிலையை உமிழ்கிறது. இந்த வெப்பக் கதிர்வீசலுக்கு கரும்பொருள் கதிர்வீச்சு என்று பெயர்.
அறை வெப்பநிலையில் கரும்பொருளானது பெரும்பாலும் அகச்சிவப்புக் கதிர்களையே உமிழ்கிறது. ஆனால் வெப்ப நிலையானது சில நூறு டிகிரி செல்சியசைத் தாண்டும் போதும் கட்புலனாகும் அலைநீளம் கொண்ட சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், வெண்மை மற்றும் நீல நிறக் கதிர்களை உமிழ்கிறது. வெண்மை நிறமாக அப் பொருள் இருந்தால் அது பெரும்பாலும் புற ஊதாக் கதிர்களை உமிழும்.
கரும்பொருள் என்று குஸ்தாவ் கிர்க்காஃப் என்ற அறிவியல் அறிஞர் 1860 ஆம் ஆண்டு பெயரிட்டார். கரும்பொருட்களால் வெப்பச் சமநிலையின் கூறுகளை சோதனை செய்ய முடியும். கரும்பொருட்களைப் பற்றிய ஆய்வானது குவாண்டம் விசையியல் என்ற துறைக்கு வழி வகுத்தது.