கமரெட்டி
கமரெட்டி என்பது இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் கமரெட்டி மாவட்டத்தின் ஒரு நகரம் மற்றும் தலைமையகம் ஆகும்.
புவியியல்
இந்த நகரம் 18.3167 ° வடக்கு 78.3500 ° கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில் அமைந்துள்ளது.[1] இது 14.11 கிமீ 2 பரப்பளவைக் கொண்டுள்ளது.[2] இது மாநில தலைநகரான ஐதராபாத்தில் இருந்து வடக்கே 110 கி.மீ தொலைவிலும், நிஜாமாபாத்தின் முந்தைய மாவட்ட தலைமையகத்திலிருந்து 55 கி.மீ தெற்கிலும் உள்ளது. 2014 ஆம் ஆண்டில் தெலுங்கானா மாநிலம் உருவான பிறகு, கமரெட்டி மாவட்ட தலைமையகமாக ஆனது.
புள்ளிவிபரங்கள்
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பு மற்றும் தெலுங்கானா அரசாங்கத்தின் புள்ளிவிவர தகவல்களின்படி இப்பகுதியில் 1,04,235 மக்கள் வசிக்கின்றனர். கமரெட்டியின் மொத்த மக்கட் தொகையில் ஆண்கள் 51% வீதமாகவும், பெண்கள் 49% வீதமாகவும் உள்ளனர். மக்களின் சராசரி கல்வியறிவு விகிதம் 65% வீதத்திற்கும் அதிகமாகவும், ஆண்களின் கல்வியறிவு 74% வீதத்திற்கு அதிகமாகவும், பெண்களின் கல்வியறிவு 56% வீதத்திற்கு அதிகமாகவும் உள்ளது. கமரெட்டி மக்கட் தொகையில் 13% வீதமானோர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்கள்.[3]
இந்த பகுதியில் பேசப்படும் முக்கிய மொழிகளாக தெலுங்கு , இந்தி, உருது, லம்பாடி, ஆங்கிலம் மற்றும் மராத்தி என்பன காணப்படுகின்றன.
நிர்வாகம்
கமரெட்டி நகராட்சி 1987 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இந்த நகராட்சி 33 தேர்தல் வார்டுகளைக் கொண்ட இரண்டாம் தர நகராட்சியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந் நகராட்சி அமைப்பின் அதிகார வரம்பு 14.10 கிமீ 2 (5.44 சதுர மைல்) பரப்பளவில் பரவியுள்ளது. தெலுங்கானாவின் பொதுத் தேர்தல்களுக்குப் பிறகு கிராமங்களைச் சுற்றியுள்ள கிராமங்கள் காமரெட்டி நகராட்சியில் இணைக்கப்பட்டன. அட்லூர், டெக்ரியால், லிங்காபூர், தேவுனிபள்ளி, சரம்பள்ளி மற்றும் சின்னமல்லாரெடி என்பன கமரேட்டி நகராட்சியில் சேர்க்கப்பட்டன.
கமரெட்டி ஜஹிராபாத் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வருகிறது. 17 அறிவிக்கப்பட்ட சேரிகளில் 35,172 மக்கள் மற்றும் 4,835 குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கின்றன.
பொருளாதாரம்
கமரெட்டியின் பொருளாதாரத்தில் விவசாயம் முக்கிய பங்கை வகிக்கின்றது. பெரும்பாலான குடும்பங்கள் விவசாயத்தை நம்பியுள்ளன. கமரெட்டியில் நெல், சர்க்கரை, வெல்லம், வெவ்வேறு காய்கறிகள், மக்காச்சோளம் மற்றும் மஞ்சள் என்பன உற்பத்தி செய்யப்படுகின்றன. சுமார் 300 ஜவுளி வணிக மையங்கள் உள்ளன. தெலுங்கானாவின் மிகப்பெரிய கோழி பண்ணைகள் காமரெட்டி கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ளன. ஒரு பெரிய விவசாய சந்தை வளாகமொன்று கமரெட்டியில் அமைந்துள்ளது. சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கான முக்கிய மையமாக கமரெட்டி திகழ்கின்றது. கமரெட்டி தெலுங்கானா மாநிலத்தில் ஒரு முக்கிய சந்தையாகும். காமரெட்டியில் சர்க்கரைகள் மற்றும் பல அரிசி ஆலைகள் உள்ளன. அவற்றில் பெரிய அளவில் சர்க்கரை, அரிசி மற்றும் பல தயாரிப்புகள் நடைப்பெறுகின்றன. மேலும் புதிய வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகள் நடைப்பெறுகின்றன.
போக்குவரத்து
கமரெட்டியில் இரு பேருந்து நிலையங்கள் அமைந்துள்ளன. மேலும் தெலுங்கானா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவின் பெரும்பாலான முக்கிய நகரங்களுடன் இணைப்புக்களைக் கொண்ட ஒரு ரயில் நிலையம் உள்ளது. இந்தியாவின் மிக நீளமான நெடுஞ்சாலையான என்எச்44 (பழைய என்எச்7) போன்ற முக்கிய நெடுஞ்சாலைகளுடன் கமரெட்டி இணைகிறது. கமரெட்டி இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களுடனும் இணைக்கும் முக்கிய சாலை வழியைக் கொண்டுள்ளது.
கமரெடிக்கு முக்கிய ரயில் பாதை செகந்திராபாத்-மன்மத் ரயில் பாதை ஆகும். கமரெட்டி ரயில் பாதை இந் நகரை இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் இணைகின்றது.