மும்மலங்கள்

மும்மலங்கள் பாசத்தின் கூறுகள் என இந்து சமயத்தின் ஒரு தத்துவப் பிரிவாகிய சைவசித்தாந்தம் கூறுகிறது. சித்தாந்தத்தின் உண்மைப் பொருள்கள் பதி பசு பாசம் என்பனவாகும். இவற்றுள் மலங்கள் மூன்று வகையாக உள்ளன. இவை மூன்றையும் ஒருமித்து மும்மலங்கள் என்பது வழக்கம். சைவ சித்தாந்தத்தின்படி இறைவன், உயிர்கள், மலங்கள் ஆகிய மூன்றும் எப்பொழுதும் நிலைத்திருப்பவை. இவற்றுள் எதுவுமே மற்றொன்றால் படைக்கப்பட்டது அல்ல என்கிறது இத்தத்துவம். இறைவனைச் சென்றடைவதே உயிர்களின் நோக்கம். ஆயினும் குறையுள்ள அறிவு கொண்ட உயிர்கள் இறைவனைச் சேரவிடாமல் உயிர்களின் அறிவை, அறிவற்ற சடப்பொருள்களான மலங்கள் மறைத்துக் கொண்டிருக்கின்றன. இதனால் ஏற்படுகின்ற அறியாமையே உயிர்களின் துன்பங்களுக்குக் காரணம் என்பது சைவ சித்தாந்தக் கருத்து. உயிர்களை மலங்களின் பிணைப்பிலிருந்து விடுவித்துத் தன்னுடன் சேர்த்துக்கொள்ள இறைவனின் அருள் வேண்டும்,மும்மலம் என்பது மூன்று கழிவுப்பொருள்கள்.

முன்னோர் விளக்கம்

உண்ட உணவு மலமாகி வெளிப்படுவதை அறிவோம். இது ஒரு கழிவுப்பொருள். வியர்வை, சிறுநீர், மலம் என்னும் மூன்றும் உடல் வெளிப்படுத்தும் மலங்கள். அதுபோல உணர்வு வெளிப்படுத்தும் மலங்கள் மூன்று. அவற்றைப் பொதுநெறிச் சிந்தனையாளர்கள் காமம், வெகுளி, மயக்கம் எனக் காட்டினர்.[1][2][3]

சமயநெறி இவற்றை மும்மலம் (ஆணவம், கன்மம், மாயை) எனக் காட்டியது. இதற்கு விளக்கம் சொல்லும் சங்கராச்சாரியார் சூரபன்மன் காமத்தால் அழிந்தான், சிங்கமுகன் கன்மத்தால் அழிந்தான், தாரகன் மாயையால் அழிந்தான் என விளக்குகிறார்.

சைவ சமயம் ஆணவம் என்பது நெல்லிலுள்ள உமி போன்றது, கன்மம் நெல்லிலிள்ள முளை போன்றது, மாயை நெல்லிலுள்ள தவிடு போன்றது என்கிறது.

சிவஞான சித்தியார் உரை [4] ஆணவம் தவிடு போன்றது, கன்மம் முளை போன்றது, மாயை உமி போன்றது என்று உவமைகளை மாற்றிக் காட்டுகிறது. [5]

சிவபெருமான் திரிசூலம் இம்மூன்றையும் அழிக்கும் ஆயுதம் என்கின்றனர். சிவபெருமான் முப்புரம் எரித்தான் என்பது இந்த மும்மலங்களை அழித்தான் என்பதைக் காட்டும் மறைநெறி என்கின்றனர்.

சமயநெறி விளக்கம்

  • ஆணவம் = பாசம்,
  • கன்மம் என்பது ஆகாமியம், சஞ்சிதம், பிராரர்த்தம் என மூன்று வகை.
  • மாயை என்பது உள்ளதும் அன்று இல்லதும் அன்று. இறைவனின் வேறானது அன்று. உலகம் மாயை அன்று. அணுவின் உண்மையினை மறைக்கும் பொய்யை மெய்போல் காட்டும். [6]

சொல்நெறி விளக்கம்

  • ஆணவம் – ஆள்வதும், ஆள நினைப்பதும் ஆண்மை. இது மனத் திமிர். இது அவம். தவமல்லாச் செயல்.[7] இந்த மனமலம் அகற்றப்பட வேண்டும்.
  • கன்மம் – உயிரினத்தோடு கல் போல் மறைந்து கிடப்பது. இதனை உயிரினத்தோடு ஊழ்த்து வளரும் ஊழ் என்பர்.
  • மாயை – கற்பனை நினைவுகள்.

அறிவுக்கண் பார்வை

  • ஆணவம் – காட்டில் திரியும் ஆண்விலங்கு, தன் ஆண்மையை வெளிப்படுத்தித் தன் கூட்டத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். இப்படி மற்றவரையெல்லாம் அடக்கி ஆளும் ஆணவ மலத்தை மனித இனம் கழித்து எறியவேண்டும்.
  • கன்மம் – ஆசை, பொறாமை போன்ற குணங்கள் மனிதனோடு கூடப் பிறந்தவை. இவையும் கழிக்கப்படவேண்டிய மலம்.
  • தன்னைப்பற்றிய கற்பனையில் மிதப்பது எல்லாருக்கும் இயல்பு. இந்த மாயைக்கும் அளவில்லை. இறைநிலையை எய்த விரும்புவோர் மாயை மலத்தைக் கழிக்க வேண்டும்.

உடல்மலம் தானே கழியும். உள்ளத்தில் இருக்கும் இந்த மும்மலத்தை நாம்தான் கழிக்க வேண்டும். கழித்தால் வாழும்போதே தெய்வநிலை அடையலாம்.[8]

மலங்களின் வகைகள்

மலங்கள் மூன்று வகையாக உள்ளன. இவை ஆணவம், கன்மம், மாயை எனப்படுகின்றன.

ஆணவம்

மலங்களுள் முதன்மையானது ஆணவ மலம். இதனால் இது மூல மலம் என்றும் அழைக்கப்படுவது உண்டு. தமிழ் நூல்களில் இது இருள் என்ற பெயரிலும் வழங்கப்படுகிறது. ஆணவம் இரு வகைகளில் உயிர்களைப் பாதிக்கின்றது. ஒன்று, உயிரின் அறிவை முற்றாக மறைத்தல்; இரண்டாவது, அவற்றின் அறிவைக் கீழ் நிலைக்குக் கொண்டு செல்வது. உயிர்கள் உண்மையையும் பொய்யையும் பகுத்துணராது மயங்கும் நிலைக்குக் காரணம் இதுவே என்கிறது சைவசித்தாந்தம்.

கன்மம்

கன்மம் என்பது அவரவர் செய்யும் வினைகளின் பயன் ஆகும். இதனை வினை என்றும் அழைப்பர். செய்யும் வினை நல்வினை ஆனாலும், தீவினை ஆனாலும் அவற்றுக்குரிய பலனை அவற்றைச் செய்யும் உயிர்கள் அடைந்தே ஆகவேண்டியுள்ளது. இதனால் இப்பலன்களை நுகர்வதற்காக உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கின்றன. உயிர்கள் மீண்டும் பிறக்கும்போது, அவைகளுக்குரிய பலன்களை இறைவன் அவற்றிடம் சேர்க்கிறான் என்கிறது சைவசித்தாந்தம். வினைகளிலும் மூன்று வகை உண்டு. இவை:

  1. பழவினை (சஞ்சிதம்)
  2. நுகர்வினை (பிராரத்தம்)
  3. ஏறுவினை (ஆகாமியம்)

என்பனவாம். இவற்றுள், பழவினை என்பது முன்னைய பிறவிகளில் செய்த வினைகளுக்கான பலன்களாகும். நுகர்வினை, அந்தப் பிறவியிலேயே சேர்த்துக்கொணட வினைப் பயன்கள். ஏறுவினை என்பது வினைப்பயனை அனுபவிக்கும்போது உருவாகும் வினைப்பயன்களாகும்.

மாயை

மாயை என்பது உயிர்களின் நுகர்ச்சிக்குத் தேவையானவற்றைப் படைத்துக் கொடுப்பதற்காக உள்ளது ஆகும். உடல், உலகு மற்றும் உலகில் காணும் எல்லாப் பொருட்களையுமே மாயையைக் கொண்டே இறைவன் படைக்கிறான் என்கிறது சைவசித்தாந்தம். இது ஒரு மலம் என்றவகையில் உயிர்களுக்குப் பகையாகக் கருதப்பட்டாலும், ஆணவ மலத்தின் பீடிப்பினால் முழுதுமாக மறைக்கப்பட்டுள்ள அறிவைச் சிறிதளவு வெளிப்படுத்த உதவுவது இம் மாயை என்று சொல்லப்படுகின்றது. சூரியன் இல்லாத இருட்டில் வழிகாட்டும் சிறிய விளக்கின் சுவாலையை இதற்கு உவமையாகக் கூறுகின்றன சித்தாந்த நூல்கள்.

மாயை மிக நுண்ணியது என்றும், அது இறைவனடியிலேயே இருக்கிறது என்றும், ஒரு சிறு விதை எவ்வாறு பெரும் மரங்கள் உருவாவதற்குக் காரணமாக அமைகின்றதோ அது போலவே மாயையும் இந்தப் பெரும் அண்டத்தின் உற்பத்திக்குக் காரணமாக அமைகின்றது என விளக்குகிறது சைவசித்தாந்தம்.

மாயையும், தூய மாயை (சுத்த மாயை), தூய்மையில் மாயை (அசுத்த மாயை), பகுதி மாயை (பிரகிருதி மாயை) என மூன்று வகையாக உள்ளதாகக் கூறப்படுகின்றது.

உசாத்துணைகள்

  • மணி, சி. சு.; சைவ சித்தாந்தம்; ஞானன், செ., இ. எஸ். டி.; தத்துவ தரிசனங்கள்; மணிவாசகர் பதிப்பகம்; சென்னை; 1999.
  • கணபதி, டி. என்.; இந்து மதமும் இந்திய தத்துவமும் - ஒரு கண்ணோட்டம்; ரவி பப்ளிகேஷன்ஸ்; சென்னை; 2005.

அடிக்குறிப்பு

  1. காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
    நாமம் கெடக் கெடும் நோய் – திருக்குறள் 360
  2. மூன்று உள முக்குற்றம் முழுதும் நலிவன
    மான்று இருள் தூங்கு மயங்கிக் கிடந்தன (திருமந்திரம் 2435)
  3. காமம் வெகுளி மயக்கம் இவை கடிந்து
    ஏமம் பிடித்திருந்தேன் (திருமந்திரம் 2436)
  4. நூற்பா 2-86
  5. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், 2005, பக்கம் 36
  6. (இந்த மூன்றும்) சைவசித்தாந்த அகராதி, பேராசிரியர் அ.கி. மூர்த்தி, 1998
  7. தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்றையார்
    அவம் செய்வார் ஆசை உட்பட்டு (திருக்குறள் 266)
  8. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
    தெய்வத்துள் வைக்கப்படும். (திருக்குறள் 50)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.