கனடாவின் சமூக அமைப்பு

கனடாவின் சமூக அமைப்பு கட்டமைப்பை நோக்கினால், ஆங்கிலேயர்களே (ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வந்தவர்கள்) பணவசதி, அரசியல் அதிகாரம், சமூக முன்னுரிமை கொண்டவர்களாக விளங்குகின்றார்கள். அவர்களுக்கு அடுத்து, பிற ஐரோப்பியர்களும், யூதமக்களும் விளங்குகின்றார்கள்.


கனடாவிற்கு குடியேறிய ஆங்கிலேயர்களில் குறிப்பிடத்தக்க விழுக்காட்டினர், அமெரிக்கர்களை போலன்றி இங்கிலாந்துக்கு சார்பானவர்கள் (Loyalists) என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள், இங்கிலாந்து சமூக கட்டமைப்பின் மேல்வர்க்கம் எனலாம். மேலும், அமெரிக்கப் புரட்சியின் போது இங்கிலாந்துக்கு சார்பானோர் இங்கு வந்து குடியேறினர்.


தனியார் கல்விக்கூடங்கள், அரசு, வர்த்தகங்கள் மற்றும் ஊடகங்களை தங்கள் ஆளுமைக்குள் உட்படுத்துவதன் மூலம் அதிகார வர்க்கத்தினர் தங்களை நிலை நிறுத்திக் கொள்கின்றார்கள். மிகச் சிறிய எண்ணிக்கையான குடும்பங்களே கனடாவின் பெரும்பான்மையான செல்வத்தை கொண்டிருக்கின்றார்கள். மேலும், கனடிய சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வு அமெரிக்காவில் இருக்கும் ஏற்றத்தாழ்வை விட பெரியது என்பதும் குறிப்பிடத்தக்கது.


பொதுவாக, கனடாவிற்கு புதிதாக குடிவரும் சமூகம் அடிமட்ட பொருளாதார அடுக்கமைவில் இடம் வகிக்கும். நாளடைவில் பெரும்பாலானோர் பொது நீரோட்டத்தில் இணைவதற்கு வாய்ப்புகள் பல உண்டு. எனினும் சில சமூகங்கள் இதற்கு விதிவிலக்காக அமைவதும் உண்டு.


கனேடிய தொல்குடிகள் மிகவும் பின் தங்கிய சமூகங்களில் ஒன்று. தொல்குடிகள், ஐரோப்பியர் வருகையால் மிகவும் பாதிக்கப்பட்டு சுரண்டப்பட்டவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு தற்போது பல சிறப்புச் சலுகைகள், உரிமைகள் இருந்தாலும் இவர்கள் இன்னும் ஒரு பின் தங்கிய நிலையிலேயே இருக்கின்றார்கள்.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.