கத்தோலிக்க அருட்சாதனங்கள்

கத்தோலிக்கத் திருச்சபையின் வரையறையின்படி கத்தோலிக்க அருட்சாதனங்கள் என்பவை, "கிறிஸ்துவால் ஏற்படுத்தப்பட்டு, திருச்சபையிடம் ஒப்படைக்கப்பட்ட இறை வாழ்வில் நமக்குப் பங்களிக்கும் பயன்மிகு அருளின் அடையாளங்கள் ஆகும். வெளிப்படையாக கொண்டாடப்படும் அருட்சாதன வழிபாடுகள், அருட்சாதனங்கள் வழியாக வழங்கப்படும் அருளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றன. அருட்சாதனங்களைப் பெறுவோரின் விருப்பத்துக்கு ஏற்ப, அவை அவர்களில் கனி தருகின்றன."[1] மூன்று புகுமுக அருட்சாதனங்கள், இரண்டு குணமளிக்கும் அருட்சாதனங்கள், இரண்டு பணி வாழ்வின் அருட்சாதனங்கள் என மொத்தம் ஏழு அருள்சாதனங்கள் கத்தோலிக்க திருச்சபையில் வழங்கப்படுகின்றன.

ரோஜியர் வான் டர் வேடென் வரைந்த ஏழு அருட்சாதனங்கள் (சுமார். 1448)

புகுமுக அருட்சாதனங்கள்

ஜோஹன்னஸ் ஹாப்ஃப் வரைந்த கத்தோலிக்க அருட்சாதனங்களின் வழியாக அருள் பகிர்வு (1615க்கு முன்)

கிறிஸ்தவ வாழ்வுக்கு அடித்தளம் அமைக்கின்ற அருட்சாதனங்களே புகுமுக அருட்சாதனங்கள் என்று அழைக்கப்படுகின்றன.[2] திருமுழுக்கு, உறுதி பூசுதல், நற்கருணை ஆகிய மூன்றும் புகுமுக அருட்சாதனங்கள் ஆகும்.

திருமுழுக்கு

திருமுழுக்கு என்பது கிறிஸ்தவ புகுமுக அருட்சாதனங்களில் முதன்மையானது ஆகும். பிறப்புநிலைப் பாவத்தையும் செயல்வழிப் பாவத்தையும் போக்கி, இயேசு கிறிஸ்துவோடு நம்மை இணைத்து, கடவுளின் பிள்ளைகளாகவும் திருச்சபையின் உறுப்பினர்களாகவும் ஆக்குகின்ற அருள்சாதனமே திருமுழுக்கு ஆகும். கத்தோலிக்க திருச்சபையில், "தந்தை, மகன், தூய ஆவியார் பெயராலே" திருமுழுக்கு வழங்கப்படுகிறது.[3]

உறுதி பூசுதல்

உறுதி பூசுதல் என்பது கிறிஸ்தவ புகுமுக அருட்சாதனங்களில் இரண்டாவது ஆகும்.[4] தூய ஆவியாராலும் அவருடைய கொடைகளாலும் நம்மை நிரப்பி, திருச்சபையின் பணிகளில் கடமை உணர்வோடு ஈடுபட நமக்கு ஆற்றலைத் தருகிற அருள்சாதனமே உறுதிபூசுதல் ஆகும்.

மேலும் காண்க: Catechism of the Catholic Church, 12851321

நற்கருணை

நற்கருணை என்பது கிறிஸ்தவ புகுமுக அருட்சாதனங்களில் மூன்றாவதும்,[5] நிறைவானதும்[6] ஆகும். அப்ப இரச குணங்களுக்குள், இயேசு கிறிஸ்துவின் திருஉடலும் திருஇரத்தமும் அவருடைய இறை இயல்பும் மனித இயல்பும் அடங்கி இருக்கிற அருள்சாதனமே நற்கருணை ஆகும்.

See also Catechism of the Catholic Church, 13221419

குணமளிக்கும் அருட்சாதனங்கள்

கிறிஸ்தவ வாழ்வில் குணமாக்கும் செயலைச் செய்பவை குணமளிக்கும் அருட்சாதனங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஒப்புரவு, நோயில் பூசுதல் ஆகியவை குணமளிக்கும் அருட்சாதனங்கள் ஆகும்.

ஒப்புரவு

ஒப்புரவு என்பது, குணமளிக்கும் அருட்சாதனங்களில் முதலாவது ஆகும். இது பாவ சங்கீர்த்தனம் என்றப் பெயராலும் அழைக்கப்படுகிறது.[7] திருமுழுக்குப் பெற்ற பின் நாம் செய்யும் பாவங்களை எல்லாம் போக்கி, நம்மைக் கடவுளோடும் பிறரோடும் மீண்டும் இணைக்கிற அருள்சாதனமே ஒப்புரவு ஆகும்.

மேலும் காண்க: Catechism of the Catholic Church, 14221498

நோயில் பூசுதல்

நோயில் பூசுதல் என்பது, குணமளிக்கும் அருட்சாதனங்களில் இரண்டாவது ஆகும். நலம் தரும் மருத்துவராகிய கிறிஸ்துவைச் சந்திக்க வைத்து, நம் பாவங்களையும் அவற்றிற்கு உரிய தண்டனைகளையும் போக்கி, நம்மை விண்ணக வாழ்விற்குத் தயாரிக்கிற அருள்சாதனமே நோயில்பூசுதல் ஆகும்.

பணி வாழ்வின் அருட்சாதனங்கள்

கிறிஸ்தவ வாழ்வின் பணியைத் தொடங்க உதவுபவையே பணி வாழ்வின் அருட்சாதனங்கள் என்று அழைக்கப்படுகின்றன. குருத்துவம், திருமணம் ஆகியவை பணி வாழ்வின் அருட்சாதனங்கள் ஆகும்.

குருத்துவம்

குருத்துவம் என்பது கடவுளுக்கும், மக்களுக்கும் பணி செய்யும் பொறுப்பை வழங்கும் அருட்சாதனம் ஆகும். திருப்பலி மற்றும் அருள்சாதனங்களை நிறைவேற்றவும், நற்செய்தி அறிவிக்கவும், இறைமக்களை வழி நடத்தி உருவாக்கவும் உரிமை அளிக்கிற அருள்சாதனமே குருத்துவம் ஆகும். குருத்துவத்தின் நிறைவு ஆயர்நிலை ஆகும்.

மேலும் காண்க: Catechism of the Catholic Church, 15361600

திருமணம்

திருமணம் என்பது இல்லற வாழ்விற்கானப் பொறுப்பை வழங்கும் அருட்சாதனம் ஆகும். ஆணையும் பெண்ணையும் கணவன் மனைவியாக இணைத்து, அவர்கள் ஒருவர் ஒருவரை இறுதிவரை அன்பு செய்யவும், தம் பிள்ளைகளைக் கிறிஸ்துவ நெறியில் வளர்க்கவும், இல்லத் திருச்சபையை உருவாக்கவும் இறையருளை அளிக்கிற அருள்சாதனமே திருமணம் ஆகும்.

அருட்சாதனப் பணியாளர்கள்

கத்தோலிக்க திருச்சபையில் அருட்சாதனங்களை நிறைவேற்றும் சாதாரண மற்றும் அசாதாரணப் பணியாளர்கள்
அருட்சாதனம் சாதாரணப் பணியாளர்கள் அசாதாரணப் பணியாளர்கள்
திருமுழுக்கு ஆயர், குரு அல்லது திருத்தொண்டர், பொதுவாக பங்கு குரு[8]
  • ஆயரிடம் அதிகாரம் பெற்ற பொதுநிலையினர்[9]
  • அவசரத் தேவையின்போது: கிறிஸ்தவ நம்பிக்கை உள்ள எவரும் வழங்கலாம்[10]
உறுதி பூசுதல் ஆயர் சிறப்பு அனுமதி பெற்ற குரு
நற்கருணை
  • ஒப்புக்கொடுத்தல்: ஆயர் அல்லது குரு
  • வழங்குதல்: ஆயர், குரு, அல்லது திருத்தொண்டர்
  • எழுந்தேற்றம் செய்வித்தல்: ஆயர், குரு, அல்லது திருத்தொண்டர்
  • ஒப்புக்கொடுத்தல்: வேறு யாருமில்லை
  • வழங்குதல்: அனுமதி பெற்ற துறவறத்தார் அல்லது பொதுநிலையினர்[11]
  • எழுந்தேற்றம் செய்வித்தல்: அனுமதி பெற்ற துறவறத்தார்
ஒப்புரவு ஆயர் அல்லது குரு வேறு யாருமில்லை
நோயில் பூசுதல் ஆயர் அல்லது குரு வேறு யாருமில்லை
குருத்துவம்
  • குருநிலைத் திருப்பொழிவுக்கு குறைந்தது ஒரு ஆயர் தேவை
  • ஆயர்நிலைத் திருப்பொழிவுக்கு குறைந்தது 3 ஆயர்கள் தேவை
சில வேளைகளில் திருத்தந்தையின் அனுமதியுடன் ஆயர்நிலைத் திருப்பொழிவை ஒரு ஆயர் மட்டுமே தனியாக நிறைவேற்றலாம்
திருமணம் மணமகனும் மணமகளும் ஒருவருக்கொருவர் (திருப்பணியாளரின் முன்னிலையில்) அருட்சாதனத்தை நிறைவேற்றுகின்றனர்[12] கீழைத் திருச்சபை சட்டப்படி, மரணம் போன்ற அபாயச் சூழல்களில் திருப்பணியாளர் இன்றியும் இந்த அருட்சாதனத்தை நிறைவேற்றலாம்[13]

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.