கண்ணூறு

பிறரது பார்வை காரணமாக ஒருவருக்கோ, ஒருநிறுவனத்திற்கோ, கட்டமைப்புக்கோ அல்லது உறவுநிலைக்கோ ஏற்படுவதாகக் கருதப்படும் ஊறு கண்ணூறு எனப்படும். இது தமிழர் உள்ளிட்ட சில பண்பாடுகளில் காணப்படும் நம்பிக்கை ஆகும். கண்ணூறு ஏற்பட்ட ஒருவர் நோய்வாய்ப்படுவதாகவும், மனச்சஞ்சலத்திற்கு உள்ளாவதாகவும் தீய நிகழ்வுகளுக்கு உள்ளாவதாகவும் நம்பப்படுகின்றது.

இந்துப் பண்பாட்டில் கண்ணூறு, நாவூறு, காற்றணவு என்பன மூவகைத் திருஷ்டிகளாகக் கூறப்படுகின்றது. இதில் நாவூறு என்பது பிறர் நாவால் சபிப்பதால் வரும் தீவிளைவு எனவும் காற்றணவு என்பது காற்றில் உள்ள தீயவாயுக்களின் விளைவாகவும் கொள்ளப்படுகின்றது.


கண்ணூறு நீக்கம்

கண்ணேறு பொம்மைகள்
கறுப்பு பொட்டுடன் சிறுவன்

கண்ணூறு அடைவதைத் தடுப்பதற்கான பல்வேறு நடைமுறைகள் இந்துப் பண்பாட்டில் காணப்படுகின்றன. வீடுகளில் நீற்றுப் பூசணிக்காய் (சாம்பல் பூசணிக்காய்) கட்டுவது, கண்திருஷ்டி கணபதி படங்களை வைப்பது, கண்ணேறு பொம்மைகளை வைப்பது என்பன இவற்றில் சிலவாகும். குழந்தைகளுக்கு கண்ணூறு படாமல் பெரிய் கருப்புப் பொட்டு நெற்றியிலும் கன்னத்திலும் இடப்படுகின்றது.

ஏற்பட்ட கண்ணூறை சாந்திப்படுத்த கண்ணூறு கழிக்கப்படும். தூர இடங்களில் இருந்து வீட்டுக்கு வந்தாலோ அல்லது திருமண வரவேற்பின் போது திருட்டி கழிக்கப்படுவது வழக்கம். புதுமனை புகுதல், பூப்புனித நீராட்டல் முதலான நிகழ்வுகளில் கண்ணூறு கழித்தல் ஒரு சடங்காகக் கொண்டாடப்படுகின்றது.

கண்ணூறு நீக்க முறைகள்

இந்த கண்ணூறு நீக்குவதற்கு எண்ணற்ற முறைகள் இந்துகளால் செய்யப்படுகின்றன. வீடுகள், அலுவலகங்கள் போன்றவற்றுக்கு அந்தக் கட்டிடத்தின் முன்பு நீர்பூசணி கட்டுதல், மிளகாய்-எலுமிச்சை மாலை கட்டுதல், கத்தாழையை தொங்கவிடுதல், அரக்க பொம்மைகளை தொங்கவிடுதல், நீர்ப்பூசணியில் அரக்க பொம்மை வரைந்து தொங்கவிடுதல் போன்ற சடங்குகளை செய்கின்றார்கள்.

இவையன்றி சூரத்தேங்காய் உடைத்தல், பூசணி உடைத்தல், எலுமிச்சை பழத்தினை அறுத்து சிவப்பு தடவி வைத்தல் போன்றவற்றையும் செய்கின்றார்கள்.

மனிதர்களுக்கும், நாய் மற்றும் பசு போன்ற விலங்குகளுக்கும் ஆராத்தி எடுத்தல், கற்பூரம் வைத்த வெற்றிலையைச் சுற்றி எறிதல் போன்ற சடங்குகளை கையாளுகின்றார்கள்.

இலக்கியத்தில் கண்ணூறு

  • கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பது பழமொழி.


திவசங்கள் தொறும்கொண்டிடு தீமைப் பிணிதீரும்

பவசங்கடம் அறுமிவ்விக பரமும் புகழ்பரவும்

கவசங்கள் எனச்சூழ்ந்துறு கண்ணேறது தவிரும்

சிவசண்முக எனவேஅருள் திருநீறணிந் திடிலே.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.