கண்ணகனார்

கண்ணகனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடல்கள் இரண்டு உள்ளன.[1] இவர் சங்ககால இசை வல்லுநராகவும் திகழ்ந்தார்.

கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் நட்பு [2]

கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் வித் துணிந்தான். இது உறையூரில் நிகழ்ந்தது. கோப்பெருஞ்சோழனின் நண்பர் பிசிராந்தையார். பாண்டிய நாட்டிலிருந்த பிசிர் என்னும் ஊரில் வாழ்ந்த புலவர் பிசிராந்தையார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை. என்றாலும் உள்ளத்தால் ஒன்றுபட்ட நண்பர்களாக விளங்கினர். கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விடத் துணிந்தபோது தன் நடுகல்லுக்குப் பக்கத்தில் பிசிராந்தையாருக்கும் இடம் ஒதுக்குமாறு கூறிவிட்டு வடக்கிருந்தார்.

உணர்வால் ஒன்றுபட்டிருந்த பிசிராந்தையார் உள்ளம் துரப்ப (உந்த) நண்பரைக் காண உறையூர் வந்தார். நண்பர் வடக்கிருப்பதைப் பார்த்துத் தானும் அவர் அருகில் அமர்ந்து வடக்கிருந்தார். இருவரும் உயிர் துறந்தனர்.

இந்தக் காட்சியைக் கண்ட கண்ணகனார் பாடிய பாடல் இது.

பொன் நிலத்தடியில் கிடக்கும். மணி நித்தின்மேல் கிடக்கும். முத்து அதிக ஆழமில்லாத கடலில் கிடக்கும். துகிர் என்னும் பவளம் அதிக ஆழமான கடலுக்கடியில் கிடக்கும். என்றாலும் மாலையாகக் கோக்கப்படும்போது ஒன்றாகக் காணப்படும். அதுபோலச் சான்றோர் சான்றோர்பால் ஆவர். சால்பில்லாத சாலார் சாலார்பால் ஆவர் - என்கிறார் கண்ணகனார்.

கழங்கு விளையாட்டு[3]

  • ஈந்து என்பது ஒருவகைச் செடி. இதில் முள் இருக்கும். இக்காலத்தில் இந்தச் செடியை ஈந்துமுள் என்பர். இதன் பழம் முத்துப் போல் இருக்கும். அளவிலும், வெண்ணிறத்திலும் அது முத்தினை ஒத்திருக்கும்.
  • மகளிர் மணலில் கழங்கு விளையாடுவர். கழங்குக் காய்கள் முத்தாகவோ, முத்துப் போன்ற வண்ணிறக் கூழாங் கற்களாகவோ இருக்கும். மகளிர் அந்தக் கழங்குக் காய்களை மணலில் பாவி ஒன்றை ஒன்று தொடும்படி சுண்டி விளையாடுவர். இக்காலத்தில் இந்த விளாயாட்டை 'ஒண்ணாங்கல் இரண்டாங்கல்' என்றும், 'பாண்டி' என்றும் பெயர் கொண்ட விளையாட்டாக விளையாடுவர்.

மகளிர் மணலில் கழங்கு விளையாடுவது போல ஈந்துமுள் பழம் பாறைகளில் சிதறும் பாலை வழியே அவர் செல்வார். அவற்றைப் பார்க்கும்போது நாம் விளையாடும்போது பார்த்துக் காதல் கொண்டது அவர் நினைவுக்கு வருமல்லவா? - தோழி தன்னைப்பற்றிக் கவலைப்பட்டதற்கு மறுமொழியாக, நம் நினைவு வந்து விரைவில் திரும்புவார் என்று தலைவி விடை பகர்கின்றாள்.

பரிபாடலுக்கு இசை

நல்லச்சுதனார் என்னும் புலவர் இயற்றிய பரிபாடல் ஒன்றுக்கு [4] இவர் இசையமைத்துப் பாடியுள்ளார். இவர் பாடிய தமிழிசை காந்தாரம்.

அடிக்குறிப்பு

  1. ஒன்று புறநானூறு 218. மற்றொன்று நற்றிணை 79.
  2. புறநானூறு 218
  3. நற்றிணை 79
  4. எண் 21, செவ்வேள்மீது பாடப்பட்டது
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.