கணியர்

கணியர் என்பவர்கள் தமிழ்நாட்டில் வானியலிலும் அதனடிப்படையிலெழுந்த சோதிடத்திலும் வல்லவர்கள். இவர்கள் அறிவர், அறிவன், கணி, கணியன் என்றும் அழைக்கப்பட்டனர். அரசர்களின் அவையில் பெருங்கணிகள் இருந்தனர்.

தொல்காப்பியம் காட்டும் கணியர்

காலத்தை கணிப்பவர்கள்

"மூவகைக் காலமும் நெறியினாற்றும் அறிவர்"

—பு-இயல் 74

களவியல் சந்தேகங்களை தீர்க்கும் மக்களுள் இக்கணியரும் ஒரு வகையினர்

"பாணன், கூத்தன், விறலி, பரத்தை,
ஆணம் சான்ற அறிவர் கண்டோர்"

மதுரையில் கணியர் தெரு

மதுரையில் வாழ்ந்த கணியர் முக்காலமும் உணர்ந்தவர். வானுலக, மண்ணுலக வாழ்க்கை பற்றி நன்கு உணர்ந்து அடக்கத்துடன் நன்னெறி பிறழாமல் வாழ்பவர்கள்.[1]

சேரன் செங்குட்டுவனுடன் இருந்த கணி

  • வஞ்சியில் தன் விருப்பப்படி அமைக்கப்பட்ட பத்தினிக் கோட்டத்தைச் செங்குட்டுவன் காணச் சென்றபோது அறக்களத்து அந்தணர், ஆசான், பெருங்கணி, சிறப்புடைக் கம்மியர் ஆகியோரை உடன் அழைத்துச் செல்கிறான்.[2]
  • செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை செய்ய இமயத்திலிருந்து கொண்டுவந்த கல்லைக் கங்கையில் நீராட்டியபின்னர் பாடி வீட்டில் தங்கியிருந்தபோது மாடலன் மாதவி துறவு, பாண்டிநாட்டில் வெற்றிவேற் செழியன் ஆட்சி முதலான செய்திகளைச் செங்குட்டுவனுக்கு எடுத்துரைக்கிறான். அப்போது செங்குட்டுவன் வானத்துப் பிறையைப் பார்க்கிறான். அப்போது அங்கிருந்த கணியன் வஞ்சி நீங்கி எண்ணான்கு மதியம் சென்றது எனக் கூறுகிறான்.[3]

புள் நிமித்தம் சொன்ன கணி

  • வேட்டுவர் கரந்தைப் போரில் வென்று கவர்ந்து வந்த ஆனிரைகளை முனபு தனக்குக் கடனாகக் கள்விற்ற மூதாட்டின் முற்றமும், புள் பார்த்துச் சொன்ன கணியின் முற்றமும் நிறையும்படி நிறுத்தினார்களாம் [4]
சில கணியர்கள்
  1. கணியன் பூங்குன்றனார்
  2. கணிமேதாவியார்

மேற்கோள்

  1. சென்ற காலமும் வரூஉம் அமையமும் இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து
    வானமும் நிலனும் தாம் முழுது உணரும்
    சான்ற கொள்கை சாயா யாக்கை
    ஆன்று அடங்கு அறிஞர் செறிந்தனர் - மதுரைக்காஞ்சி 477 முதல்
  2. சிலப்பதிகாரம் நடுகற்காதை
  3. சிலப்பதிகாரம் நீர்ப்படைக்காதை
  4. சிலப்பதிகாரம் வேட்டுவ வரி
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.