கட்டமைப்பியம்

கட்டமைப்பியம் (Structuralism) அல்லது அமைப்பியல் என்பது, ஒரு குறிப்பிட்ட துறையை ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள பகுதிகளைக் கொண்ட சிக்கலான ஒன்றாக எடுத்துக்கொண்டு பகுத்தாய்வு செய்ய முயலும் மனித அறிவியல் சார்ந்த ஒரு அணுகுமுறை ஆகும். இது மொழியியலில் பேர்டினண்ட் டி சோசர் (1857-1913) என்பவர் செய்த ஆய்வுகளிலிருந்து தொடங்கியது. எனினும் பிரெஞ்சு அறிஞர்கள் இது பலதுறைகளிலுமான பரந்த பயன்பாட்டுக்கு உகந்தது என்பதை உணர்ந்து கொண்டனர். வெகு விரைவிலேயே இந்த மாதிரி மானிடவியல், உளவியல், உளப்பகுப்பாய்வியல், கட்டிடக்கலை போன்ற பல துறை ஆய்வுகளிலும் பயன்படலாயிற்று. இது கட்டமைப்பியம் ஒரு வழிமுறையாக மட்டுமன்றி ஒரு அறிவுசார் இயக்கமாகவே உருவாவதைக் கோடிகாட்டியது. இது 1960களில் பிரான்சில் இருப்பியலியம் (existentialism) வகித்த இடத்தைப் பிடித்துக்கொண்டது.[1]

1970களில் இது திறனாய்வாளர்களின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானது. இவர்கள் இக் கொள்கை இறுக்கமானது எனவும் வரலாற்றுப் போக்குக்கு முரணானது எனவும் குற்றஞ்சாட்டினர். எனினும் மைக்கேல் போக்கல்ட், ஜாக் லாக்கான் போன்ற பல கட்டமைப்பியக் கோட்பாட்டாளர்கள் தொடர்ந்தும் கண்ட ஐரோப்பிய மெய்யியலில் செல்வாக்குச் செலுத்தி வந்தனர். அத்துடன் இக் கோட்பாட்டைக் கண்டித்தவர்களின், முக்கியமாக பின்கட்டமைப்பிய வாதிகளின், பெரும்பாலான அடிப்படை எடுகோள்கள் கட்டமைப்பியத்தின் தொடர்ச்சியே அன்றி வேறல்ல.[1]

அலிசன் அசிட்டர் என்பவருடைய கருத்துப்படி, அறிவுசார் போக்கை உருவாக்கிய கட்டமைப்பியம் தொடர்பில் நான்கு பொது எண்ணக்கருக்கள் உள்ளன.

  1. முழுமையொன்றின் பகுதிகளின் அமைவிடத்தைத் தீர்மானிப்பது அதன் கட்டமைப்பு ஆகும்.
  2. கட்டமைப்பிய வாதிகள் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு கட்டமைப்பு உண்டு என நம்புகின்றனர்.
  3. கட்டமைப்பிய வாதிகள், ஒருமித்து இருப்பதற்கான கட்டமைப்பு விதிகள் குறித்தே கவனம் செலுத்துகின்றனரேயன்றி மாற்றங்கள் குறித்து அல்ல.
  4. மேற்பரப்புக்கு அல்லது பொருள் தருவதுபோல் தோற்றமளிப்பதற்குப் பின்னணியில் இருக்கும் உண்மையான பொருள் கட்டமைப்பு ஆகும்.[2]

வரலாறு

கட்டமைப்பியம் 20 ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் தொடங்கி, மொழி, பண்பாடு, சமூகம் போன்றவற்றை ஆய்வு செய்யும் துறைகளில் ஒரு புகழ் பெற்ற அணுகுமுறையாக வளர்ச்சியடைந்தது. மொழியியல் தொடர்பாக பேர்டினண்ட் டி சோசர் செய்த ஆய்வுகளே கட்டமைப்பியத்தின் தொடக்கமாகக் கொள்ளப்படுகின்றது. கட்டமைப்பியம் என்பதற்கு ஈடான ஆங்கிலச் சொல்லான "structuralism" என்பதை, பிரான்சு நாட்டவரான மானிடவியலாளர் குளோட் லெவி-இசுட்ராசு (Claude Lévi-Strauss) என்பவரின் ஆக்கங்களில் முதலில் கையாளப்பட்டது. இது பிரான்சில் கட்டமைப்பிய இயக்கத்தின் தோற்றத்துக்கு வித்திட்டதுடன், லூயிசு அல்தூசர், உளப்பகுப்பாய்வாளர் ஜாக் லாக்கன், கட்டமைப்பிய மார்க்சியவாதி நிக்காசு போலன்டாசு போன்ற சிந்தனையாளர்களுடைய ஆக்கங்களுக்கும் உந்து சக்தியாக அமைந்தது. கட்டமைப்பியம் குறியியலோடு (semiotics) நெருக்கமான தொடர்பு கொண்டது.

மொழியியலில் கட்டமைப்பியம்

மனிதப் பண்பாட்டைக் குறிகளின் தொகுதியாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்று கட்டமைப்பியம் கூறுகின்றது. கட்டமைப்பியவாதிகள் ஒரு குறித்தொகுதியை உருவாக்க முயற்சி செய்தனர்.

மானிடவியலிலும் சமூகவியலிலும் கட்டமைப்பியம்

மானிடவியலிலும், சமூகவியலிலும் உள்ள கட்டமைப்பியக் கோட்பாடுகளின் படி, ஒரு பண்பாட்டில் பல்வேறு செய்கைகள், தோற்றப்பாடுகள், செயற்பாடுகள் என்பவற்றின் மூலமாக பொருள் விளக்கங்கள் உருவாக்கப்படுகின்றன.

குறிப்புக்கள்

  1. John Sturrock, Structuralism and Since, Introduction.
  2. Assiter, A 1984, 'Althusser and structuralism', The British journal of sociology, vol. 35, no. 2, Blackwell Publishing, pp.272-296.

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.