கடிகார மனிதர்கள்
கடிகார மனிதர்கள் (Kadikara Manithargal) அறிமுக இயக்குனர் வைகறை பாலன் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பிரதீப் ஜோஸ் தயாரிப்பில், சாம் சி.எஸ். இசை அமைப்பில் 3 ஆகஸ்ட் 2018 ஆம் தேதி வெளியானது. கிஷோர், லதா ராவ், கருணாகரன் (நடிகர்), பாலா சிங், வாசு விக்ரம் மற்றும் பலர் நடித்துள்ளனர். இரண்டு ஆண்டுகள் தயாரிப்பு தாமதத்திற்கு பிறகு வெளியான இப்படம், கலந்த விமர்சனத்தை பெற்றது.[1][2][3][4]
நடிகர்கள்
கிஷோர், லதா ராவ், கருணாகரன், பாலா சிங், வாசு விக்ரம், மனோகர், பிரதீப் ஜோஸ், ஷெரின் பிள்ளகள், ஷீலா, கோபி.
கதைச்சுருக்கம்
பேக்கரி ஒன்றில் வேலை பார்க்கும் மாறன் (கிஷோர்) பற்றிய கதையாகும். அவனும் அவனது மனைவியும் (லதா ராவ்) வாடகைக்கு வீடு தேடினர். ஒரு வீட்டு தரகர் வாயிலாக மாறன் பொருளாதாரத்திற்கேற்ப வீடு ஒன்று கிடைத்தது. ஆனால் அந்த வீட்டில் குடிபுக பல கட்டளைகள் இருந்தன. அதில் 4 நபர்கள் கொண்ட குடும்பம் மட்டும் தான் குடிவர முடியும் என்ற கட்டளையும் அடக்கம். ஆனால் மாறனின் மூன்று குழந்தைகளையும் சேர்த்தால் மொத்தம் 5 நபர்கள். அந்த வீட்டில் குடிபுக தனக்கு 2 குழந்தைகள் என்று பொய் சொல்லுகிறான் மாறன். மறைத்த மூன்றாவது குழந்தையை தனது மிதிவண்டி டப்பாவில் மூடி, தினமும் பள்ளிக்கு அனுப்புகிறான். அந்த குழந்தையை மறைக்க பல வழிகளை கையாளுகிறான். பின்னர் என்னவானது என்பது தான் மீதிக் கதை.[5]
தயாரிப்பு
இந்தப் படத்தின் தயாரிப்பு 2016 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. சாம். சி. எஸ் படத்தின் இசை அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார். படத்தின் முன்னோட்டம் 2016 ஆம் ஆண்டு வெளியானது.[6][7]
ஒலிப்பதிவு
இந்தத் திரைப்படத்தின் பின்னணி மற்றும் பாடல்களின் இசையை அமைத்தவர் சாம் சி. எஸ் ஆவார். 4 பாடல்களை கொண்ட ஒலித்தொகுப்பு 19 டிசம்பர் 2016 ஆம் தேதி வெளியானது. சாம் சி. எஸ்., நா. முத்துக்குமார், கார்க்கி பாவா ஆகியோர் பாடல்களின் வரிகளை எழுதினர்.[8][9]
வெளியீடு
2017 ஆம் ஆண்டு வெளியாகியிருக்க வேண்டிய கடிகார மனிதர்கள் 3 ஆகஸ்ட் 2018 ஆம் தேதி வெளியானது. அதே நாளில் மேலும் 11 மற்ற தமிழ்த் திரைப்படங்களும் வெளியாயின. தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஒரே நாளில் குறைந்தது பத்து திரைப்படங்கள் வெளியிட திட்டமிடப்பட்டதும் அன்று தான்.[10][11]
மேற்கோள்கள்
- "https://timesofindia.indiatimes.com".
- "https://in.bookmyshow.com".
- "https://www.maalaimalar.com".
- "http://cinema.dinamalar.com".
- "https://cinema.vikatan.com".
- "https://m.timesofindia.com".
- "https://www.moviebuff.com".
- "http://milliblog.com".
- "https://open.spotify.com".
- "http://www.bollywoodlife.com".
- "https://m.timesofindia.com".