ஓரவை முறைமை

அரசாங்கம் ஒன்றில், ஓரவை முறைமை (unicameralism) என்பது ஒரு சட்டவாக்க அவையை மட்டும் கொண்ட நாடாளுமன்ற முறைமையைக் குறிக்கிறது. இந்த ஓரவை முறைமை பொதுவாக சிறிய அல்லது ஒரு சீரான ஒற்றையாட்சி நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இரண்டாவது சட்டவாக்க அவை இவ்வாறான நாடுகளுக்குத் தேவையற்றது எனக் கருதப்படுகிறது.

  ஈரவை முறையுள்ள நாடுகள்.
  ஓரவை முறை உள்ள நாடுகள்.
  எந்த அவைகளும் இல்லாத நாடுகள்.

கோட்பாடு

சமூகம் ஒன்றின் பல்வேறு சமூகங்களினதும் எதிர்பார்ப்புகளைக் கவனத்தில் கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட சட்டவாக்க அவைகள் சில நாடுகளில் ஏற்படுத்தப்பட்டன. இதன் மூலம் வேறுபட்ட சமூகங்களின் பிரதிநிதிகள் (ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம், பிரான்சு போன்றவை), இனங்கள் மற்றும் பிராந்தியங்களின் பிரதிநிதிகள், அல்லது கூட்டாட்சி ஒன்றின் துணைக்கட்சிகளின் பிரதிநிதிகள் இவ்வவைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தினர். இவ்வாறான பிரதிநிதித்துவம் முக்கியமல்லாமல் போகும் நாடுகளில் ஓரவை ஆட்சி முறை நடைமுறையில் உள்ளது. இலங்கை, நியூசிலாந்து, டென்மார்க் போன்ற நாடுகளில் இரண்டாவது சட்டவாக்க அவையான மேலவை அகற்றப்பட்டது. சுவீடன் போன்ற நாடுகளில் இரண்டு அவைகள் இணைக்கப்படு ஓரவை ஆனது. வேறும் சில நாடுகளில் ஓரவை முறையே எப்போதும் இருந்து வந்துள்ளது.

பொதுவாக, சீன மக்கள் குடியரசு, கியூபா போன்ற பொதுவுடைமை நாடுகளில் ஓரவை முறையே நடைமுறையில் உள்ளது. இதே போல் முன்னாள் பொதுவுடைமை நாடுகளான உக்ரைன், மல்தோவா, செர்பியா போன்றவை ஓரவை முறையிலேயே தொடர்ந்து இயங்குகின்றன. அதே வேளையில், உருசியா, போலந்து போன்றவை கம்யூனிசத்தின் வீழ்ச்சியின் பின்னர் ஈரவை முறையைத் தேர்ந்தெடுத்தன. சோசலிசக் கண்ணோட்டத்தின் படி மேலவை முறை பழமைவாத அடிப்படையிலானது எனக் கருதப்படுகிறது. இவற்றில் சமூகத்தின் மேல் வகுப்பினரின் விருப்புகளையே இவை நிறைவேற்றுவதாக சோசலிசவாதிகள் கருதுகின்றனர்.

ஓரவை முறையில் சட்டவாக்கம் மிகவும் செயல்திறன் மிக்கதாக உள்ளது இம்முறையின் நன்மையாகும். இங்கு சட்டவாக்க நடைமுறை மிகவும் எளிமையானது. சட்ட முடக்கம் இம்முறையில் ஏற்பட மாட்டாது. இம்முறையில் செலவீனம் மிகவும் குறைவு என்பதாக இதன் ஆதரவாளர்கள் கருத்கின்றனர். இம்முறை மூலம் பெரும்பான்மையினத்தின் ஆதிக்கம் அதிகமாக இருப்பது இதன் முக்கிய குறைபாடு ஆகும், குறிப்பாக நாடாளுமன்ற முறைகளில் நாடாளுமன்றப் பெரும்பான்மையினரே செயலாட்சியிலும் பெரும்பான்மையாக இருப்பது. சமூகத்தின் சில முக்கிய பகுதிகளைச் சேர்ந்தவர்களின் பங்களிப்பு இவ்வாட்சி முறையில் குறைவாக உள்ளமையும் இதன் முக்கிய குறைபாடாகும்.

இவற்றையும் பார்க்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.