ஓங்காரேஸ்வரர் கோயில், சிவபுரி

ஓங்காரேஸ்வரர் கோயில், சிவபுரி, இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள காண்ட்வா மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இது உஜ்ஜைனிக்கு தெற்கே 100 கி.மீ தொலைவில், நர்மதை ஆற்றின் வடகரையில் நர்மதையும் காவிரி ஆறும் கலக்கும் சங்கமத்துறையில் உள்ள சிவபுரி அல்லது மாண்டாத்தா என்னும் தீவில் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும். இது மத்தியப் பிரதேசத்திலுள்ள மோர்ட்டக்கா என்னும் இடத்திலிருந்து 12 மைல் (20 கிமீ) தொலைவில் உள்ளது. இத் தீவின் வடிவத்தை இந்துக் குறியீடான என்பதுடன் இந்துக்கள் ஒப்பிட்டுக் காண்கிறார்கள். இத் தீவில் அமரேஸ்வரர் கோயில் என இன்னொரு கோயிலும் உள்ளது.[1] [2].[3]

ஓங்காரேஸ்வர் கோயில்

தொன்மம்

ஒரு காலத்தில் விந்தியமலையானது ஓங்கார ரூபமான யந்திரம் ஒன்றை வரைந்து அதில் மண்ணைப் பிடித்த சிவலிங்கத்தை வைத்து சிவனின் அருளை வேண்டி கடுந்தவம் மேற்கொண்டது. சிவபெருமான் அதன் தவத்தைக் கண்டு மகிழ்ந்து அதன்முன்பு ஓம்காரேஷ்வரர் மற்றும் அமரேஸ்வரர் ஆகிய இரு வடிவங்களில் தோன்றியதாக நம்பப்படுகிறது.   ஓம் என்ற வடிவில் மண் திட்டாக இந்த தீவு தோன்றியதால் ஓங்காரேஸவரர் என அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் பார்வதிக்கும் ஐந்து முகமுடைய பிள்ளையாருக்கும் சிற்றாலயங்கள் உள்ளன.[4]

ஆதி சங்கரர் தன் குருவான கோவிந்த பகவத் பாதரை சந்தித்த குகையானது இப்பகுதியில் உள்ளது. இந்தக் குகையில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட லிங்கத்தைக் கொண்ட கோயில் உள்ளது.[5]

கோயில் அமைப்பு

இக்கோயிலானது தரை மட்டத்தில் இருந்து சிலபடிகள் மேலேரிச் செல்லத்தக்கவகையில் உள்ளது. கோயிலின் முன்பு நந்தி மண்டபத்தில் பெரிய நந்தி அமைந்துள்ளது. கோயிலானது மூன்று அடுக்குகளாக அமைந்துள்ளது. முதல் தளத்தில் உள்ள குறுகலான கருவறையில் ஓங்காரேசுவரர் சிறிய லிங்கவடிவில் உள்ளார். இரண்டாவது தளத்துக்குப் படிக்கட்டுகள் வழியாகச் செல்லவேண்டும். இரண்டாவது தளத்தில் மாகாளர் லிங்கவடிவில் உள்ளார். அதன் எதிரே ஒரு மண்டபம் உள்ளது. அங்கே இராமனின் மூதாதையரான மாந்தாதா வழிப்பட்ட லிங்கமாகும் அவரின் சிலையும் உள்ளது. மூன்றாவது தளத்தில் சித்தீசுவர லிங்கம் உள்ளது.

படக்காட்சியகம்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.