ஒளிவீச்சு (ஒளிநாடா சஞ்சிகை)
ஒளிவீச்சு தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பால் வெளியிடப்பட்ட தமிழீழத்தின் முதலாவது வீடியோ சஞ்சிகை ஆகும். இது நிதர்சனம் நிறுவனம் மூலம் மே 1993 இலிருந்து மாதாந்த ஒளிநாடா சஞ்சிகையாக வெளிவந்து கொண்டிருந்தது. 100 க்கு மேல் வெளியான இச் சஞ்சிகை சரியாக 75 நிமிடங்களைக் கொண்டது. சண்டைகள் நடக்கும் பொழுது போராளிகள், சக போராளிகளுடன் இணைந்து பல நேரடிச் சமர்களைப் படம் பிடித்து, உண்மையான காட்சிப் பதிவின் மூலம் பல ஆவணத் திரைப்படங்களை இச் சஞ்சிகையில் வெளியிட்டு வந்தது குறிப்பிடத் தக்கது.
ஒளிவீச்சு உருவாக்கம்
ஒளிவீச்சு சஞ்சிகையின் உருவாக்கத்திற்கு அடித்தளமாக இருந்தவர் மாமனிதர் சச்சிதானந்தம் (ஞானதரன்). இவருடன் இணைந்து செயற்பட்டவர் லெப்.கேணல் தவம் (தவா). மாமனிதர் வை. சச்சிதானந்தசிவம் (ஞானரதன்), லெப்.கேணல் தவம் (தவா) இருவரும் இணைந்து 1991 - 1992 காலப்பகுதியிலேயே ஒளிவீச்சு சஞ்சிகையைத் தயாரித்திருந்தனர். ஆனாலும் இதழின் தொழில்நுட்பத்தில் இருந்த குறைபாடு காரணமாக, 1993 இல் திருத்தித் தயாரிக்கப்பட்ட பின்னரே அது முதல் முதலாக வெளியிடப்பட்டது.
இதில் இடம்பெற்ற அம்சங்கள்
செய்திச்சரம்
செய்திச்சரம் பகுதியில் குறித்த மாதப்பகுதியில் தமிழீழத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளும், களத்தில் நேரடியாகப் பதிவு செய்யப்பட்ட போராட்டச் செய்திகள் அடங்கிய உள்நாட்டுச் செய்திகளும் இடம்பெறும்.
மாவீரர் நினைவு
மாவீரர் நினைவு என்னும் பகுதியில் குறிப்பிட்ட மாதப்பகுதியில் வீரமரணம் அடைந்த மாவீரர்களின் நினைவுப்படங்களும், அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெறும்.
மண்ணும் மக்களும்
மண்ணும் மக்களும் என்னும் பகுதியில் மக்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், தமிழீழ மண்ணில் நடைபெறும் விசேடவிழாக்கள் என்பவை காட்சிப்படுத்தப்படும்.
மருத்துவம்
மருத்துவம் பகுதியில் நோய்கள் பற்றிய விளக்கங்கள், தடுப்புமுறைகள், சிகிச்சைகள் போன்றன இடம் பெறும்.
விளையாட்டு
விளையாட்டு என்னும் பகுதியில் தமிழீழத்தின் பல பாகங்களிலும் நடைபெறும் விளையாட்டுகள் பற்றிய செய்திகள் இடம்பெறும்.
புதியவெளியீடுகள்
புதியவெளியீடுகள் என்ற பகுதியில் குறிப்பிட்ட மாதப்பகுதியில் புதிதாக வெளிவந்த நூல்கள், சஞ்சிகைகள் பற்றிய அறிமுகங்கள் இடம்பெறும்.
கலையும் மக்களும்
என்னும் பகுதியில் தமிழீழ மக்களின் கலை, பண்பாடு பற்றிய விளக்கக் கோலங்களும், விசேடமாக இடம்பெற்ற கலை நிகழ்வுகளும் இடம்பெறும்.
குறும்படங்கள்/விவரணங்கள்
இறுதிப்பகுதியான குறும்படங்கள் விவரணங்கள் பகுதியில் தமிழீழத்தில் வெளிவந்த குறும்படங்களில் ஒன்று அல்லது தமிழீழ மக்கள் சம்பந்தமான ஏதாவது ஒரு விவரணம் இடம் பெறும்.
ஒளிவீச்சில் வெளியிடப்பட்ட குறும்படங்களில் சில
- கண்ணீர் (மே 1993) [1]
- நேற்று (ஜூலை 1993)
- வீரசீலம் (லெப். சீலனின் இறுதிக்கணங்களை நினைவு கூரும் படம்)
வெளி இணைப்புகள்
மேற்சான்றுகள்
- எரிமலை (சஞ்சிகை) 1993 மார்கழி பக்கம் - 15 தமிழீழத்தின் முதலாவது வீடியோ சஞ்சிகை - ரகுராம்