ஒபாமாவுக்கான தமிழர்கள்

ஒபாமாவுக்கான தமிழர்கள் (Tamils for Obama) என்பது ஐக்கிய அமெரிக்காவில் இயங்கும் ஒரு தமிழர் அமைப்பாகும். இலங்கையின் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக அந்த அமைப்பு சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது. குறிப்பாக அரசியல் அமைப்பு ரீதியாக இலங்கையில் போரை முடிவுக்குக் கொண்டு வரும் விடயங்கள் பற்றி ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு ஆர்வம் காட்டி வருகின்றது. எத்தகைய விதமான அரசாங்கம் போரை முடிவுக்குக் கொண்டு வரும் என்பது பற்றியும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்காவின் பராக் ஒபாமாவின் புதிய நிர்வாகம் உதவுவதற்கு எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது பற்றியும் அவர்கள் இணையத்தளம் மூலம் கேள்வியெழுப்பி வருகின்றனர். தமிழ் மக்களே தமது எதிர்காலத்தை தீர்மானிப்பது குறித்துச் சிந்திக்க வேண்டும். இதுவே மக்களாட்சிக்கு அவசியமானது என்று ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு கூறுகின்றது. இந்த விடயமானது இலங்கையின் சிங்கள அரசாங்கமோ, இராணுவமோ தீர்மானிக்க வேண்டியதல்ல என்றும் அந்த அமைப்பு கருதுகிறது.

கருத்துக் கணிப்பு

ஈழத் தமிழர்கள் இன்று எதிர்நோக்கியிருக்கும் இனப் படுகொலை அபாயத்தையும் கருத்தில் கொண்டு இலங்கைப் பிரச்சினையில் தாமதமின்றி தலையிட்டு, தமிழினப் படுகொலையை நிறுத்தி தமிழர்களுக்கு நீதி கிடைக்க உடனடியாக வழி வகுக்கக் கோரி அமெரிக்காவில் இயங்கும் "ஒபாமாவுக்கான தமிழர்கள்" என்ற அமைப்பு, அமெரிக்க அரச தலைவராகத் தேர்வாகியுள்ள பராக் ஓபாமாவுக்கும் அமெரிக்க வெளியுறவுச் செயலராக நியமனம் பெறுகின்ற இலரி கிளின்டன் அம்மையாருக்கும் அனுப்புவதற்கான ஒரு கருத்துக் கணிப்பு வாக்கடுப்பை இணையத்தளம் ஊடாக நடத்தியிருந்தனர். டிசம்பர் 31, 2008 நள்ளிரவு வரை இந்த வாக்கெடுப்புத் தொடர்ந்து இடம்பெற்றது. இந்தக் கருத்துக் கணிப்பில் இருநூறுக்கும் அதிகமான நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வாக்களித்துள்ளனர். அதில் 90 வீதத்திற்கும் அதிகமானோர் "தமிழீழத் தனியரசே" இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்ற தீர்மானத்திற்கு வாக்களித்துள்ளதை வாக்குக்கணிப்பு முடிவுகள் ஊடாக அறியக் கூடியதாக உள்ளது[1].

கையெழுத்துக் கடிதம்

மேலும் பராக் ஒபாமா இலரி கிளின்டன் மற்றும் தென்னாசியா தொடர்பான ஏனைய செயலர்களுக்கும் கொடுக்கவென "ஒபாமாவுக்கான தமிழர்கள்" அமைப்பினால் ஒரு கடிதம் தயாரிக்கப்பட்டிருந்தது.

இக் கடிதம் தமிழ், பிரெஞ்சு, ஜேர்மன், ஆங்கில போன்ற மொழிகளில் வெளியிடப்பட்டு கையெழுத்துக்கள் கோரப்பட்டது[2].

இந்த கடிதத்தில் உலகெங்குமிருந்து அதிக எண்ணிக்கையிலானத் தமிழர்கள் தொடர்ந்தும் கையெழுத்துக்களை இட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்

  1. கருத்துக் கணிப்பு முடிவுகள்
  2. கையெழுத்துக் கடிதம்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.