ஒட்டுமொத்தப் போர்

ஒட்டுமொத்தப் போர் (Total war) என்பது ஒரு போரியல் கோட்பாடு. போரில் ஈடுபடும் ஒரு தரப்பு எதிரியை அழிக்க தனது அனைத்து வகை வளங்கள் மொத்ததையும் முடிவிலாப் போர் புரிவதற்காகப் பயன்படுத்துவது ஒட்டுமொத்த போர் எனப்படுகிறது. வரலாற்றில் பல நூற்றாண்டுகளாக ஒட்டுமொத்த போர் நடவடிக்கைகள் நடைமுறையில் இருந்தாலும் 19ம் நூற்றாண்டின் மத்தியில் தான் போர் கோட்பாட்டாளர்களும் வரலாற்றளர்களும் இக்கோட்பாட்டை தனித்துவ போர்முறையாக வரையறுத்தனர். இக்கோட்பாட்டின் எதிர்மறை வரையறுக்கப்பட்ட போர் (limited war) எனப்படுகிறது.

ஒட்டுமொத்த போர் முறையில் ஈடுபடும் தரப்பில் குடிசார் மற்றும் படைத்துறை வளங்களுக்கிடையேயான வேறுபாடு மறைந்து போகின்றது. ஒரு நாட்டின் அனைத்து வளங்களும் - மாந்தர், தொழில் உற்பத்தி, அறிவு, படை, இயற்கை வளங்கள், போக்குவரத்து என அனைத்தும் போர் முயற்சிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. 19ம் நூற்றாண்டு போர்க் கோட்பாட்டாளர் வோன் கிளாசுவிட்சின் “போரைப் பற்றி” (On war) நூலில் இக்கோட்பாடு பற்றி முதன்முதலாக விரிவாக அலசப்பட்டது. ஆனால் ஒட்டுமொத்த போர் என்ற சொற்றொடர் 1936ல் ஜெர்மானிய தளபதி எரிக் லுடன்டார்ஃபின் முதலாம் உலகப் போர் நினைவுகளின் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.