ஒட்டுண்ணிப் புழு
ஒட்டுண்ணிப் புழு என்பது மெய்க்கருவுயிரி (eukaroytic) ஒட்டுண்ணிகளின் ஒரு பிரிவாகும். இது பேன்கள் போன்ற வெளிப்புற ஒட்டுண்ணிகளைப் போலன்றித் தாங்கள் தொற்றிக்கொள்ளும் ஓம்புயிர்களுக்கு உள்ளே வாழ்கின்றன. புழுக்கள் போன்ற இவ்வுயிரினங்கள் உயிருள்ள ஓம்புயிர்களிலிருந்து தமக்கு வேண்டிய உணவையும், பாதுகாப்பையும் பெற்றுக்கொள்கின்றன. அதேவேளை ஓம்புயிர்கள் உணவிலிருந்து தமக்குவேண்டிய ஊட்டச்சத்துக்களைப் பெற்றுக்கொள்வதில் பாதிப்பு ஏற்படுத்துவதுடன் அவை பலவீனம் ஆவதற்கும், நோயுறுவதற்கும் காரணமாக அமைகின்றன. சமிபாட்டுத் தொகுதிகளுள் வாழும் ஒட்டுண்ணிகள் குடல்வாழ் ஒட்டுண்ணிகள் எனப்படுகின்றன. இவை மனிதர்கள் அல்லது பிற விலங்குகளின் உடல்களுள் வாழக் கூடியன.
ஒட்டுண்ணிப் புழுக்கள் மற்றும் அவை ஓம்புயிர்களில் ஏற்படுத்தும் தாக்கங்கள் ஆகியவை பற்றிய ஆய்வு புழுஒட்டுண்ணியியல் (Helminthology) எனப்படுகின்றது. ஒட்டுண்ணிப் புழுக்கள் நாடாப் புழுக்கள், உருளைப் புழுக்கள், தட்டைப் புழுக்கள் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.