ஐம்பட்டகம்

ஐம்பட்டகம் என்பது ஐந்து பக்கங்கள் கொண்ட தெறிக்கும் பட்டகம் ஆகும். இது ஒளிக் கதிர் ஒன்றைத் 90° ஆல் திசை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. ஒளிக்கதிர் பட்டகத்தினுள் இரு முறை தெறிப்பதன் மூலம் ஒரு ஒரு பொருளின் விம்பத்தை,அதன் பக்கத்தை மாற்றாமல் செங்கோணத்தால் (right angle) திருப்பிவிடுகிறது.

ஒரு ஐம்பட்டகத்தின் செயற்பாடு
ஒரு கூரை ஐம்பட்டகத்தின் செயற்பாடு

ஒளிக்கதிர் அவதிக் கோணத்திலும் (critical angle) குறைவான கோணமொன்றில் இடைமுகத்தில் படுவதன் காரணமாக, பட்டகத்துள் நடைபெறும் தெறிப்பு முழுவுட் தெறிப்புக் (total internal reflection) காரணமாக ஏற்படுவதில்லை. தெறிப்பு ஏற்படும் பக்கங்கள் இரண்டும் பூச்சுக்கள் மூலம் தெறிக்கும் மேற்பரப்புகளாக ஆக்கப்படுவதனாலேயே தெறிப்பு உண்டாக்கப்படுகிறது. தேவையற்ற தெறிப்ப்பைத் தடுப்பதற்காக, ஒளியை உட்செல்லவிடும் பக்கங்கள் இரண்டிலும், வழக்கமாக தெறிப்புத் தடுப்புப் பூச்சுப் பூசப்பட்டிருக்கும். ஐந்தாவது பக்கம் ஒளியியல் ரீதியாகப் பயன்படுத்தப்படுவதில்லை.

ஒற்றை வில்லைத் தெறிப்பு நிழற்படக் கருவிகளில் (single-lens reflex camera) பயன்படும் கூரை ஐம்பட்டகம், இந்தப் பட்டகத்தின் ஒரு வேறுபாடு ஆகும். இங்கே நிழற்படக் கருவியிலுள்ள தெறிக்கும் ஆடி மூலம் கருவியின் குவியத் திரையில் உருவாக்கப்படும் விம்பமே பட்டகத்தினூடாகத் தெறிக்கப்படுவதால் விம்பம் இடம் வலமாக மாற்றப்படவேண்டியுள்ளது. பட்டகத்தின் தெறிக்கும் பக்கமொன்றை ஒன்றுக்கொன்று 90° கோணத்தில் அமைந்த இரண்டு பக்கங்களாக மாற்றுவதன் மூலம் இந்த நோக்கம் அடையப்படுகிறது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.