ஐப்போத்தலாமசு
ஐப்போத்தலாமசு அல்லது முன்மூளை கீழுள்ளறை (hypothalamus) என்பது பல்வேறு செயல்களைச் செய்யக்கூடிய, பல சிறிய உட்கருக்களைக் கொண்ட, மூளையின் ஒரு பகுதியாகும். அகச்சுரப்பித் தொகுதியுடன் நரம்புத் தொகுதியை கபச் சுரப்பியின் வழியாக இணைப்பது ஐப்போத்தலாமசின் முதன்மையான பணிகளில் ஒன்றாகும். ஐப்போத்தலாமசு உவளகத்தின் (முன்மூளை உள்ளறை;Thalamus) அடியில் உணர்வு மண்டலத்தின் (limbic system) ஒரு பகுதியாக அமைந்துள்ளது[1]. ஐப்போத்தலாமசு நடுமூளையின் (diencephalon) கீழ்ப்புறப் பகுதியாக உள்ளது. அனைத்து முதுகெலும்பிகளின் மூளைகளிலும் ஐப்போத்தலாமசு உள்ளது. மனிதர்களில் ஐப்போத்தலாமசு வாதுமை அளவில் உள்ளது.

வளர்சிதைமாற்றம் போன்ற குறிப்பிட்ட உயிரியத் தொழிற்பாடுகளுக்கும், தன்னாட்சி நரம்புத்தொகுதியின் பிற செயற்பாடுகளுக்கும் ஐப்போத்தலாமசு பொறுப்பாக உள்ளது. குறிப்பிட்ட நரம்பு இயக்குநீர்களை (வெளியிடு இயக்குநீர்கள்) ஐப்போத்தலாமசு உற்பத்தி செய்து, சுரக்கிறது. இத்தகைய வெளியிடு இயக்குநீர்கள் கபச் சுரப்பி இயக்குநீர்கள் சுரப்பதைத் தூண்டவோ, தடுக்கவோ செய்கின்றன.
உடலின் வெப்ப நிலையைச் சீரமைத்தல், பசி, (பெற்றோர்) பேணுகையின் சில முக்கியமான கூறுகள், தாய்மைப்பற்றின் செயற்பாடுகள், தாகம்,[2] சோர்வு, தூக்கம், பருவ, பொழுது ஒழுங்கியல்புகள் (circadian rhythms) ஆகியவற்றை ஐப்போத்தலாமசு கட்டுப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
- Dr. Boeree, C. George. "The Emotional Nervous System".
- Definition of hypothalamus - NCI Dictionary of Cancer Terms