ஏ. ஆர். அந்துலே
அப்துல் ரகுமான் அந்துலே (9 பெப்ரவரி 1929 – 2 திசம்பர் 2014) இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மகாராட்டிர முதலமைச்சராகவும் இந்திய நடுவண் அரசு அமைச்சரவையில் சிறுபான்மையினர் நல அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். பதினான்காவது மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். ஊழலுக்காக பம்பாய் உயர் நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
அப்துல் ரகுமான் அந்துலே अब्दुल रेहमान अंतुले | |
---|---|
8வது மகாராட்டிர முதலமைச்சர் | |
பதவியில் 9 சூன் 1980 – 12 சனவரி 1982 | |
முன்னவர் | சரத் பவார் |
பின்வந்தவர் | பாபாசாகேப் போசலே |
கொலாபா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1989–1998 | |
முன்னவர் | தின்கர் பாடீல் |
பின்வந்தவர் | இராம்சேத் தாக்கூர் |
பதவியில் 2004–2009 | |
முன்னவர் | இராம்சேத் தாக்கூர் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | பெப்ரவரி 9, 1929 |
இறப்பு | 2 திசம்பர் 2014 85) மும்பை, இந்தியா | (அகவை
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
சமயம் | இசுலாம் |
அந்துலே காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்தவர். 2009 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில், ராய்காட் மக்களவைத் தொகுதியில் ஆனந்த் கீத்தேயிடம் தோற்றார்.
வாழ்க்கை வரலாறு
மகாராட்டிரத்தின் ராய்கட் மாவட்டத்தில் அம்பேத் சிற்றூரில் அஃபீசு அப்துல் கஃபூருக்கும் சோராபிக்கும் மகனாகப் பிறந்தார். நர்கீசு அந்துலேயை திருமணம் புரிந்துள்ள அந்துலேக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் உள்ளனர். இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்த பின்னர் சட்டவியல் படித்தார். மும்பை பல்கலைக்கழகத்திலும்இலண்டனில் உள்ள லிங்கன் இன்னிலும் படித்தார்.
மகாராட்டிர சட்டமன்றத்தில் 1962இலிருந்து 1976 வரை பேரவை உறுப்பினராக இருந்துள்ளார்.[1] இந்தக் காலத்தில் சட்டம், நீதித்துறை துணை அமைச்சராகவும் துறைமுகங்கள், மீன்வளத்துறை அமைச்சராகவும் கட்டிடங்கள், குடியிருப்பு வசதிகள் அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். 1976 முதல் 1980 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார். 1980இல் மீண்டும் மகாராட்டிர சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, சூன் 1980 முதல் சனவரி 1982 வரை மகாராட்டிர முதலமைச்சராகப் பணியாற்றினார். ஊழல் மற்றும் மிரட்டிப் பணம்பறித்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து முதலமைச்சர் பதவியிலிருந்து விலக நேரிட்டது.[2] 1985இல் மீண்டும் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] 1989இல் ஒன்பதாவது மக்களவைக்கும் 1991இல் பத்தாவது மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சூன் 1995 முதல் மே 1996 வரை நடுவண் அரசில் நலவாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சராகப் பணியாற்றிய அந்துலே, பெப்ரவரி 1996 முதல் மே வரை நீர்வளத்துறை கூடுதல் பொறுப்பையும் கவனித்துக் கொண்டார். 1996இல் பதினோராவது மக்களவைக்கும், 2004இல் பதினான்காவது மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மன்மோகன் சிங் அரசில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.[4]
மேற்சான்றுகள்
- http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1962/StatRep_Maharastra_1962.pdf
- "AROUND THE WORLD; A Top Official in India Is Convicted of Extortion", Associated Press (The New York Times), January 13, 1982.
- State Elections 2004 - Partywise Comparison for 13 - Shriwardhan Constituency of Maharashtra
- Official biographical sketch in Parliament of India website.