எஸ். இராமநாதன்

எஸ். இராமநாதன் (30 திசம்பர் 1895-9 மார்ச்சு 1970) தன்மான இயக்க முன்னோடிகளில் ஒருவரும் தந்தை பெரியாரின் வலக்கையாக இயங்கியவரும் ஆவார். தன்மான இயக்கம் தொடங்கும்போது பெரியாருக்குத் துணையாக நின்றார். அறிவாளராகவும் வழக்கறிஞராகவும் விளங்கினார்.

பிறப்பும் கல்வித் தகுதியும்

தஞ்சை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், கொடை விளாகம் என்னும் சிற்றூரில் சைவ வேளாளர் குடும்பத்தில் பிறந்தார். சென்னைப் பச்சையப்பன் கல்லூரி, கிறித்தவக் கல்லூரி, சட்டக் கல்லூரி ஆகியவற்றில் பயின்று முதுகலையிலும் சட்டத்திலும் பட்டங்கள் பெற்றுத் தேறினார். தமிழிலும் ஆங்கிலத்திலும் சரளமாகப் பேசியும் எழுதியும் வந்தார்.

பொது வாழ்க்கை

காங்கிரசுக் கட்சித் தொண்டு

சட்டக் கல்லூரியில் பயின்றபோது காங்கிரசுக் கட்சியில் சேர்ந்து செயல்பட்டார். அந்தக் காலத்தில் பெரியார் காங்கிரசில் இருந்த காரணத்தால் அவரோடு இணைந்து வ. வே. சு ஐயரின் சேரன்மாதேவி குருகுல அமைப்பை எதிர்த்துப் போராடினார். 1925 ஆம் ஆண்டு மே திங்களில் நடந்த காங்கிரசுக் குழுக் கூட்டத்தில் "பிறப்பு அடிப்படையில் வேறுபாடு காட்டுதல் கூடாது" என்னும் தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.

1925 ஆம் ஆண்டு நவம்பர்த் திங்களில் காங்கிரசுக் கட்சியின் மாநில மாநாட்டில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறைக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பெரியார் தீர்மானம் கொண்டுவந்தார். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டபோது பெரியார் அம்மாநாட்டை விட்டும் காங்கிரசை விட்டும் வெளியேறினார். பெரியாருடன் இராமநாதனும் பிறரும் வெளியேறினர்.

சுயமரியாதை இயக்கத் தொண்டு

1926 ஆம் ஆண்டு சூன் திங்களில் தன்மான இயக்கம் பெரியாரால் தொடங்கப் பட்டபோது அதன் செயலாளர் பொறுப்பை இராமநாதன் ஏற்றார். தமிழ் நாடு முழுக்கப் பயணம் செய்து பரப்புரை செய்தார். ரிவோல்டு என்னும் ஆங்கில வார ஏட்டை பெரியார் தொடங்கினார். அவ்விதழை நடத்துவதற்கு இராமநாதன் துணை நின்றார். 1927 ஆம் ஆண்டில் காந்தியடிகள் பெங்களுருவுக்கு வந்தபோது பெரியார் அவரைச் சந்தித்துப் பேசினார். அப்பேச்சின் போது இராமநாதனும் கலந்துகொண்டார். 1929ஆம் ஆண்டு பிப்பிரவரி 17, 18 நாள்களில் செங்கல்பட்டில் சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு நடந்தது. அம்மாநாட்டில் பெரியார், இராமநாதன் சவுந்தரபாண்டியன் பாவேந்தர் பாரதிதாசன் போன்றோர் கலந்து கொண்டார்கள். இம்மாநாட்டின் விளைவாகப் பலர் சாதிப் பட்டப் பெயர்களைத் துறந்தனர். பார்ப்பனக் குருமார்களைப் புறக்கணித்தார்கள். 1930 ஆம் ஆண்டு மே மாதம் 10 11 நாள்களில் சுயமரியாதை இயக்கத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஈரோட்டில் நடந்தது. இம்மாநாட்டில் வருணாச்சிர தருமமுறையை கண்டித்தும் தீண்டாமையைக் கண்டித்தும் சுய மரியாதைத் திருமணங்களையும் சாதிமறுப்புத் திருமணங்களையும் ஊக்குவித்தும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

வெளிநாடுகள் சுற்றுப்பயணம்

1929 திசம்பர் 15இல் பெரியார் மலேசியா சுற்றுப் பயணம் சென்றபோது இராமநாதனும் உடன் சென்று கொள்கைப் பரப்புரை செய்தார். 1931 ஆம் ஆண்டு பெரியார் தம் ஐரோப்பியச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். அவருடன் இராமநாதனும் ஈரோடு இராமுவும் உடன் சென்றார்கள். ஏறத்தாழ 11 மாதங்கள் இரசியா, இங்கிலாந்து, செருமனி, பிரான்சு, போர்ச்சுகல் முதலிய நாடுகளில் நடைபெற்ற விவாதங்களிலும் பொதுக் கூட்டங்களிலும் பெரியாருக்குப் பெருந்துணையாக இருந்து செயல்பட்டார். பயணத்தின் போது இலெனின் எழுதிய மதம் என்னும் நூலைப் பெரியாருடன் சேர்ந்து தமிழில் மொழிபெயர்த்தார்.

காந்தியுடன் சந்திப்பு

1933 ஆம் ஆண்டு திசம்பர்த் திங்களில் காந்தியடிகள் சென்னைக்கு வந்தபோது பிற தோழர்களோடு அவரைச் சந்தித்துப் பேசினார். அப்போது பகுத்தறிவு, சாதி ஒழிப்பு தீண்டாமை ஒழிப்பு ஆகியன விவாதிக்கப்பட்டன.

அமைச்சர் பதவி

1937 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரசு வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று இராசகோபாலாச்சாரி தலைமையில் அமைந்த அமைச்சரவையில் அமைச்சர் பொறுப்பை ஏற்றுப் பணி புரிந்தார். தமது இறுதிக் காலத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் சேராமல் இருந்தார்.

சான்றுகள்

  • பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்-(தொகுத்துப் பதித்தவர் வே.ஆனைமுத்து)
  • பாசறை முரசு இதழ்-மார்ச்சு,ஏப்பிரல் 2014

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.