எழுத்துத் தமிழ்

எழுத்துத் தமிழ் என்பது, எழுதுவதற்காகப் பயன்படுத்தப்படும் தமிழின் வகை ஆகும். இது பேச்சுத் தமிழில் இருந்து வேறுபடுகின்றது. பேச்சுத் தமிழ் இடத்துக்கு இடமும், காலத்துக்குக் காலமும் வேறுபட்டுக் காணப்படுகிறது. ஆனால், எழுத்துத் தமிழ், எல்லாத் தமிழரும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் தரப்படுத்தப்பட்டது. எழுத்துத் தமிழ், பேச்சுத் தமிழைப்போல் விரைவாக மாற்றம் அடைவதில்லை. இதனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட நூல்களையும் இன்றும் வாசித்துப் புரிந்துகொள்ள முடிகிறது.

எழுத்துத் தமிழ் பெரும்பாலும், பல்வேறு வட்டார வழக்குகளைப் பேசுகிறவர்களும் புரிந்துகொள்ளக்கூடிய தகுமொழி (Standard Language) எனப்படும் பொதுத்தமிழை ஒட்டியே அமைந்திருக்கும்.[1] எழுதுவதற்கு மட்டுமன்றி, மேடைப்பேச்சு, சிலவகை நாடகங்கள் போன்றவற்றிலும் எழுத்துத் தமிழ் போன்றே பேசுவது உண்டு. அதேவேளை, எழுத்துத் தமிழிலும் சில காரணங்களுக்காக வட்டார வழக்குத் தமிழ் இடம்பெறுவதுண்டு. குறிப்பாகக் கதை எழுதுபவர்கள், கதை மாந்தர்களை அவர்களுடைய பின்னணியில் காட்டுவதற்காக இவ்வாறு எழுதுவர்.

குறிப்புகள்

  1. சண்முகம், செ. வை., 2005, பக். 17

உசாத்துணைகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.