எழுத்து (யாப்பிலக்கணம்)

யாப்பிலக்கணத்தில் செய்யுள் அல்லது பாக்களுக்கு அடிப்படையாக அமையும் உறுப்பு எழுத்து ஆகும். இங்கே எழுத்து என்பது மொழியை எழுதுவதற்குப் பயன்படும் குறியீடுகளையன்றி அவற்றினால் குறிக்கப்படும் ஒலிகளையே குறித்து நிற்கின்றது. செய்யுள்களைப் பொறுத்தவரை மொழியின் ஒலிப் பண்புகள் சிறப்புப் பெறுகின்றன. இதனால் இந்த ஒலிப் பண்புகளுக்கு ஆதாரமாக அமையும் எழுத்துக்களை, அவற்றை ஒலிப்பதற்குத் தேவையான கால அளவுகளைக் கருத்தில் கொண்டு வகைகளாகப் பிரித்துள்ளார்கள்.

எழுத்து வகைகள்

தமிழில் எழுத்துக்கள் உயிரெழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள் என இரு பிரிவுகளாகப் பிரித்து அறியப்படுகின்றன. இவற்றுள் முதல் வரையான 12 உயிரெழுத்துக்கள் அவற்றுக்குரிய கால அளவுகளுக்கு அமைய குறில், நெடில் என இரண்டாக வகுக்கப்படுள்ளன. க் முதல் ன் வரையான 18 மெய்யெழுத்துக்களில் குறில், நெடில் என்ற வகைப்பாடு கிடையாது. மெய்யெழுத்துக்கள் உயிரெழுத்துக்களுடன் சேர்ந்து உருவாகும் 216 உயிர்மெய் எழுத்துக்கள், அவற்றில் அடங்கியுள்ள உயிரெழுத்துக்களின் வகையைப் பொறுத்துக் குறிலாகவோ நெடிலாகவோ அமைகின்றன. கீழேயுள்ள அட்டவணையில் இவை பற்றிய விபரங்கள் தரப்பட்டுள்ளன.

எழுத்துவகைஎழுத்துக்கள்
உயிரெழுத்துக்கள்-
1குறில்கள்அ, இ, உ, எ, ஒ
2நெடில்கள்ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ
மெய்யெழுத்துக்கள்க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்
உயிர்மெய் எழுத்துக்கள்-
1குறில்கள்உயிர்க்குறில்கள் சேர்ந்து உருவான உயிர்மெய்கள்
2நெடில்கள்உயிர்நெடில்கள் சேர்ந்து உருவான உயிர்மெய்கள்

எழுத்துக்களின் கால அளவுகள்

குறில் எழுத்துக்களின் ஒலி அளவு ஒரு மாத்திரை அளவினதாகக் கொள்ளப்படுகின்றது. இதன் அடிப்படையில் நெடில் எழுத்துக்களின் கால அளவு இரண்டு மாத்திரைகளாகவும், மெய்யெழுத்துக்களின் கால அளவு அரை மாத்திரைகளாகவும் உள்ளன. உயிர்மெய்க் குறில்களினதும், உயிர்மெய் நெடில்களினதும் கால அளவுகளும், முறையே ஒரு மாத்திரையாகவும், இரண்டு மாத்திரைகளாகவும் உள்ளன.

ஐகார, ஔகார எழுத்துக்கள் நெடில்களாகக் கொள்ளப்பட்டாலும், அவை சீர்களில் வரும்போது இரண்டு மாத்திரைகள் அளவுடன் ஒலிப்பதில்லை. இவ்விரு வகை எழுத்துக்களும் சீர் முதலெழுத்தாக வரும்போது ஒன்றரை மாத்திரைகள் அளவுடையனவாக அமைகின்றன. ஔகாரம் முதலெழுத்தாக மட்டுமே வரும். ஐகாரம் இடையிலோ அல்லது இறுதி எழுத்தாகவோ வரும்பொழுது குறில்களைப் போல ஒரு மாத்திரை அளவையே கொண்டிருக்கும். இவ்வாறு ஒலி குறைவுபட்டு வருதல் குறுக்கம் எனப்படுகின்றது. ஐகாரம் குறுகி வருதல் ஐகாரக் குறுக்கம் எனவும், ஔகாரம் குறுகி வருதல் ஔகாரக் குறுக்கம் எனவும் குறிப்பிடப்படுகின்றன. இவற்றைப்போலவே சில சந்தர்ப்பங்களில் இகர, உகரங்களும் மெய்யெழுத்தான மகரமும் குறுக்கம் அடைவதுண்டு. இவ்வாறு குறுக்கமடையும்போது இகரமும், உகரமும் அரை மாத்திரையையும், மகரமெய் கால் மாத்திரையையும் பெறுகின்றன. குறுகி ஒலிக்கும் இகர, உகரங்கள் முறையே குற்றியலிகரம் எனவும், குற்றியலுகரம் எனவும் அழைக்கப்படுகின்றன. மகரமெய் குறுகி ஒலித்தல் மகரக்குறுக்கம் எனப்படும்.

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.