எரிவளிச் சுழலி

எரிவளிச் சுழலி (Gas turbine) என்பது ஓர் உள்ளெரிப்பு எந்திரம். உயரழுத்தக் காற்றையும் எரிவளியையும் சேர்த்து எரிக்கும்போது உருவாகும் சூடான வளிமங்களில் இருந்து மின்னாற்றலை உற்பத்தி செய்ய உதவும் ஒரு சுழல் எந்திரம். அது தன் பணியில் நீராவிச்சுழலியை ஒத்த ஒன்று. எரிவளிச் சுழலியை மூன்று பாகங்கள் கொண்டதாகப் பார்க்கலாம். அவை முறையே:

  • காற்று அமுக்கி (air compressor)
  • எரிப்பகம் அல்லது எரிப்பு அறை (combustion chamber)
  • சுழலி (turbine)
எரிவளிச் சுழலியின் எளிய வரைபடம்

சூழ்வெளியில் இருக்கிற காற்றை உட்செலுத்தினால் காற்று அமுக்கியில் அதன் அழுத்தம் அதிகரிக்கும். இந்த உயரழுத்தக் காற்றை எரிப்பு அறைக்குள் செலுத்தி, அங்கே இயற்கை எரிவளி போன்ற எரிபொருளையும் கலந்து எரிக்கும்போது அதன் விளைவாக உயரழுத்த எரிப்பு வளிமங்கள் உருவாகும். அந்த எரிப்பு வளிமங்களைச் சுழலியினுள் செலுத்தி, அதன் தகடுகளால் வழிப்படுத்தினால் சுழலி சுற்றத் தொடங்கும். அவ்வாறு வெப்ப ஆற்றலை ஒரு வேலை செய்யப் பயன்படுத்திச் சுழல் ஆற்றலாய் மாற்றியபின் அந்தச் சுழல் ஆற்றலைப் பல வகைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். காட்டாக, விமானங்கள், இரயில், கப்பல் முதலியனவற்றை இயக்கவும், ஒரு மின்னாக்கியைப் (electrical generator) பயன்படுத்தி மின்னாற்றல் உருவாக்கவும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இயங்குமுறை

எரிவழிச் சுழலியின் எளிய வரைபடத்தைப் பார்க்கவும்.

  1. சூழ் வெப்ப நிலையில் இருக்கும் காற்று, அமுக்கியின் உள்ளே செலுத்தப்படும். அமுக்கியில் காற்று அதிக அழுத்தத்திற்கு அமுக்கப் படுகிறது. வேறு வெப்பம் ஊட்டவில்லை என்றாலும் இந்த அமுக்கத்தின் காரணமாகக் காற்றின் வெப்ப நிலை சற்று அதிகரிக்கிறது.
  2. பிறகு, "2" என்று குறிக்கப் பட்டுள்ள இடத்தில் உயரழுத்தக் காற்று எரிப்பகத்தினுள் செலுத்தப் படுகிறது. இதே இடத்தில் இயற்கை எரிவளி போன்ற எரிபொருளும் உட்செலுத்தப் படும். ஒரே அழுத்தநிலையில் காற்றும் எரிவளியும் சேர்ந்து எரியும். இதனால் உயரழுத்தத்தில் எரிப்பு வளிமங்கள் உருவாகும்.
  3. இவ்வாறு உருவான எரிப்பு வளிமங்கள் எரிப்பகத்தில் இருந்து வெளியேறி "3" என்று குறிப்பிட்டுள்ள இடத்தில் சுழலியின் வழியாகப் பாயும். இங்கே எரிப்பு வளிமங்களின் வெப்ப ஆற்றலானது ஒரு வேலையாக மாற்றப் படுகிறது. இவ்வேலையின் ஒரு பகுதி காற்று அமுக்கியை இயக்கப் பயன்படுத்தப் படுகிறது. மீதி வேலையை ஒரு மின்னாக்கி கொண்டு மின்னாற்றலாக வடிக்கலாம். பொதுவாக, சுழலியில் ஆக்கப்படும் வேலையில் பாதிக்கும் மேலானது காற்று அமுக்கியை இயக்கச் செலவாகிவிடும்.
  4. எரிப்பு வளி அல்லது கழிவு வளியானது சுழலியின் வழியாகப் பாய்ந்து, பிறகு ஒரு வெளிப்போக்கியின் (4) வழியாக வெளியேற்றப் படுகிறது.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.