எத்தனால் நொதித்தல்

எத்தனோல் நொதித்தல் (Ethanol fermentation) என்பது சுக்ரோசு, குளுக்கோசு, பிரக்டோசு போன்ற எளிய வெல்லங்களில் உள்ள சக்தியைக் கொண்டு ATP வடிவில் அனுசேப சக்தியை உருவாக்கி எத்தனால், காபனீரொக்சைட்டு ஆகியவற்றைக் கழிவுகளாக உருவாக்கும் ஆக்சிசன் தேவைப்படாத அவசேபச் செயன்முறையாகும் (Catabolic process). இவ்வகை நொதித்தல் பொதுவாக மதுவக் கலங்களில் நடைபெறுகின்றது. இவ் உயிரிரசாயன்ச் செயன்முறைக்கு ஆக்சிசன் தேவைப்படாததால் இது ஒரு காற்றின்றிய செயன்முறையாகும். பல முக்கிய கைத்தொழில்ப் பயன்பாடுகளைக் கொண்டது. அற்கஹோல் குடிபான உற்பத்தி, பாண் உற்பத்தி, எரிபொருள்த் தர எத்தனோல் உற்பத்தி என்பன மதுவக் கலங்களில் நடைபெறும் எத்தனோல் நொதித்தலைக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றன.

வைன் குடிபானத் தயாரிப்புக்காக நொதித்தலுக்கு உட்படுத்தப்படும் திராட்சைப் பழங்கள்.

உயிரிரசாயனப் படிமுறைகள்

எத்தனோல் நொதித்தல் குழியவுருவில் உள்ள ஸைமேல் (Zymase) பல்நொதியச் சிக்கலால் ஊக்குவிக்கப்பட்டுப் பிரதானமாக மூன்று படிமுறைகளில் நிகழ்கின்றது. இதன் போது குளுக்கோசு மூலக்கூறுக்கு இரண்டு எத்தனோல், இரண்டு காபனீரொக்சைட்டு, 2 ATP என்பன விளைவுகளாகப் பெறப்படுகின்றன.

  1. கிளைக்கோபகுப்பு
  2. காபொக்சைலகற்றல்
  3. கீழ்ப்படை தாழ்த்தப்படல்

நொதித்தல் ஆரம்பிக்க முன்னர் சுக்ரோசு போன்ற இருசக்கரைட்டுக்கள் நொதிய ஊக்கலுடன் நீர்ப்பகுப்புக்கு உட்பட்டு குளுக்கோசு போன்ற எளிய வெல்லங்கள் உருவாக்கப்படுகின்றன.

C12H22O11 + H2O + invertase → 2 C6H12O6

கிளைக்கோபகுப்பின் போது பல தொடரான நொதிய ஊக்கலுடன் கூடிய தாக்கங்களினூடாக குளுக்கோசு படிப்படியாக ஏவப்பட்டு, உடைக்கப்பட்டு, ஒக்சியேற்றப்பட்டு, கீழ்ப்படை பொசுபோரிலேற்றத்துக்கு உட்படுத்தப்படுகின்றது.[1] இதன் போது விளைவுகளாக 2 பைருவேற் (pyruvate) (3 கார்பன் சேர்வை), 2 ATP, 2 NADH என்பன விளைவாக்கப்படுகின்றன.

C6H12O6 + 2 ADP + 2 Pi + 2 NAD+ → 2 CH3COCOO + 2 ATP + 2 NADH + 2 H2O + 2 H+

பின்னர் பைருவேற்று காபொக்சைலகற்றலுக்குட்பட்டு அசட்டல்டிகைட் (acetaldehyde)- 2C சேர்வை, காபனீரொக்சைட்டு (CO2) என்பன உருவாக்கப்படுகின்றன. தொடர்ந்து அடுத்த தாக்கத்துக்காக கிளைக்கோபகுப்பை முன்னெடுக்க ஐதரசன் ஏற்றுக்கொள்ளியாக NAD+ தேவைப்படுகின்றது. எனவே NAD+ ஐ மீளுருவாக்க அசெட்டல்டிகைட் கிளைக்கோபகுப்பின் போது உருவாக்கப்பட்ட NADH இனால் தாழ்த்தப்படுகின்றது. இதனால் NAD+ மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றது.

எத்தனோல் நொதித்தலுக்குரிய சிறப்பம்சங்கள்:

  • இறுதி இலத்திரன், ஐதரசன் வாங்கியாக அசட்டல்டிகைட் உள்ளமை.
  • இறுதி விளைவாக காபனீரொக்சைட்டு, எத்தனோல், 2 ATP சக்தி உருவாகின்றமை.
  • காபொக்சைலகற்றல் தாக்கம் நிகழ்கின்றமை.
  • கீழ்ப்படையாக காபோவைதரேற்றுக்கள் மாத்திரம் பயன்படுகின்றமை.
எத்தனோல் நொதித்தல் தாக்கங்கள்

மேற்கோள்கள்

  1. Stryer, Lubert (1975). Biochemistry. W. H. Freeman and Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7167-0174-X.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.