எதிர்மின்னி இரட்டை

எதிர்மின்னி இரட்டை அல்லது லுாயிசு இரட்டை (Electron pair) என்பது வேதியியலில் ஒரே மூலக்கூறு ஆர்பிட்டாலைச் சேர்ந்த எதிரெதிர் சுழற்சிகளைக் கொண்ட இரண்டு எதிர்மின்னிகளைக் கொண்டுள்ள நிலையாகும்.  எதிர்மின்னி இரட்டை தொடர்பான கருத்துரு முதன் முதலில் 1916 ஆம் ஆண்டில் கில்பர்ட் என். லுாயிசு என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.[1]

ஈரணு மூலக்கூறுகளில் காணப்படும் சகப்பிணைப்பு (இடது) மற்றும் முனைவுறு சகப்பிணைப்பு (வலது) ஆகியவற்றை விளக்கும் மூலக்கூறு ஆர்பிட்டால் வரைபடம். இரண்டு வகைகளிலும் ஒரு பிணைப்பானது எதிர்மின்னிகளின் இரட்டையாலேயே உருவாவது குறிப்பிடத்தக்கது.

எதிர்மின்னிகள் பெர்மியான்களாக இருக்கும் காரணத்தால், பவுலி தவிர்ப்புத் தத்துவத்தின் படி எந்த இரு எதிர்மின்னிகளும் ஒரே விதமான நான்கு சக்திச் சொட்டெண்களையும் கொண்டிருக்க முடியாது என்பதால் இவை இரண்டும் ஒரே ஆர்பிட்டாலில் இருந்தாலும் எதிரெதிர் சுழற்சிகளைக் கொண்டிருக்கும். அதாவது இரு எதிர்மின்னிகளும் ஒரே வகையான ஆர்பிட்டால் சக்திச் சொட்டெண்ணையும், வெவ்வேறு சுழற்சி சக்திச் சொட்டெண்ணையும் கொண்டிருக்கும். இது ஒரு ஆர்பிட்டாலில் இருக்கும் அதிகபட்ச எதிர்மின்னிகளின் எண்ணிக்கையை இரண்டு என வரையறுக்கிறது.

எதிரெதிர் சுழற்சி உள்ள எதிர்மின்னிகள் இணையாதல் ஆற்றல்ரீதியாகவும் விரும்பத்தகுந்ததாக உள்ளது. ஆகவே எதிர்மின்னிகள் இணையாதல் என்பது வேதியியலில் மிக முக்கியப் பங்கினை வகிக்கிறது. எதிர் மின்னிகள் இணையாதல் இரு அணுக்களுக்கிடையே ஒரு வேதிப்பிணைப்பு உருவாகக் காரணமாக உள்ளது அல்லது எதிர்மின்னிகளின் இரட்டை தனித்த எதிர்மின்னி இரட்டையாகவோ (lone pair) அல்லது இணைதிறன் எதிர்மின்னிகளாகவோ கூட இருக்கலாம். அணுவின் உட்பகுதியில் உள்ள ஆர்பிட்டால்களைக் கூட இந்த எதிர்மின்னிகளின் இரட்டை நிரப்பலாம்.

எதிரெதிர் சுழற்சி உடைய எதிர்மின்னிகள் இணையாவதால், எதிர்மின்னிகளின் காந்தத் திருப்புத் திறன் காந்தவியல் பண்புகளில் இணையின் பங்களிப்பானது நீக்கப்பட்டு விடுகிறது. இதன் காரணமாக ஒரு இணையாகாத தனித்த எதிர்மின்னி அற்ற எதிர்மின்னிகளின் இரட்டையைக் கொண்டுள்ள அணு டயாகாந்தத்தன்மையை வெளிப்படுத்துகிறது.

வேதியியலில் எதிர்மின்னியின் இரட்டை உருவாவதற்கான வலிமையான போக்கு காணப்பட்டாலும் தனித்த அல்லது இணையாகாத எதிர்மின்னிகள் உருவாவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன.

உலோகப் பிணைப்புகளைப் பொறுத்தவரை காந்தத் திருப்புத் திறன்களும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு பிணைப்பு உருவாகக் காரணமாக இருக்கின்றன. ஆனால், பிணைப்பு என்பது மிகவும் ஒட்டுமொத்தமானதாக உள்ளது. எதிர்மின்னிகளின் இரட்டைகளைத் தனித்தனியாக பிரித்தறிய முடியாது. எனவே, எதிர்மின்னிகளை ஒட்டுமொத்தமாக எதிர்மின்னிகளின் பெருங்கடலாகக் கருதுவது நல்லதாக உள்ளது. இவற்றையெல்லாம் தவிர்த்தும் ஒரு மிகச் சிறப்பு வகையான எதிர்மின்னி இரட்டையானது மீக்கடத்துதிறன் சார்ந்து உருவாகிறது. அதாவது தாமிர இணைகள் உருவாதலின் போது இது நிகழ்கிறது.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.