எண்ணிமத் தொலைக்காட்சி

எண்ணிமத் தொலைக்காட்சி (Digital television, DTV) அல்லது எண்மருவித் தொலைக்காட்சி எனப்படுவது ஒளித மற்றும் ஒலித தகவலோடை எண்ணிம செய்முறையில் அனுப்பப்படுவதாகும். இது முழுமையும் அலைமருவி செய்முறையில் தனித்தனி அலைவரிசைகளில் அனுப்பப்படும் அலைமருவித் தொலைக்காட்சிக்கு எதிரானதாகும். தொலைக்காட்சித் தொழினுட்பத்தில் 1950களில் வண்ணத் தொலைக்காட்சி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இது கருதப்படுகிறது.[1] இதனால் வானொலி அலைக்கற்றை சேமிக்கப்படுவதால் உலகின் பல நாடுகளும் அலைமருவித் தொலைக்காட்சி பரப்புகையிலிருந்து எண்ணிமத் தொலைக்காட்சிக்கு மாறி வருகின்றன. ஆனால் உலகின் பல பகுதிகளிலும் ஒரே சீர்தரம் பேணப்படாது வெவ்வேறு சீர்தரங்கள் நிலுவையில் உள்ளன:

முன்னேறிய தொலைக்காட்சி முறைமைக் குழு (Advanced Television System Committee, ATSC) சீர்தரம் புவிப்புற பரப்புகையில் ஐக்கிய அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
எண்ணிம ஒளிதப் பரப்புகை-புவிப்புறம் (DVB-T) ஐரோப்பாவிலும் ஆத்திரேலியாவிலும் கையாளப்படுகிறது.
புவிப்புற ஒருங்கிணைந்த சேவைகள் எண்ணிம பரப்புகை (ISDB-T) மிகுந்த முன்னேற்றமான தொழினுட்பமாக விளங்குகிறது. இதன்மூலம் நிலைத்துள்ள தொலைக்காட்சிப் பெட்டிகளைத் தவிர எடுத்துச்செல்ல வல்ல அல்லது நகர்பேசி தொலைக்காட்சிப் பெட்டிகளிலும் நல்ல முறையில் வழங்க முடியும். இது பல கட்ட பரப்புகையை ஆதரிப்பதுடன் முன்னேறிய ஒளித, ஒலித குறியீடுக் கருவிகளைக் கொண்டுள்ளது.இந்தச் சீர்தரம் சப்பானிலும் தென் அமெரிக்காவிலும் பயன்படுத்தப்படுகிறது.
எண்ணிம புவிப்புற பல்லூடக பரப்புகை (DTMB) ஒத்தியங்கு நேரப்பகுப்பு (TDS)- செங்குத்து அதிர்வுப்பகுப்பு சேர்த்தனுப்பும் தொழினுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இந்தச் சீர்தரம் ஆங்கொங், மக்காவ் உள்ளிட்ட சீன மக்கள் குடியரசால் பாவிக்கப்படுகிறது.[2]

சான்றுகோள்கள்

  1. Kruger, L. G. (2001). Digital Television: An Overview. Hauppauge, New York: Nova Publishers.
  2. Ong, C. Y., Song, J., Pan, C., & Li, Y.(2010, May). Technology and Standards of Digital Television Terrestrial Multimedia Broadcasting [Topics in Wireless Communications], Communications Magazine, IEEE , 48(5),119-127

கூடுதல் படிப்பிற்கு

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.