எடக்கல் தமிழ் பிராமிக் கல்வெட்டுகள்

எடக்கல் தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் என்பன கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டம், கல்பற்றாவிற்கு 25 கிமீ தொலைவில் உள்ள எடக்கல் குகைகளில் கண்டுபிடிக்கபட்ட நான்கு தமிழ் பிராமிக் கல்வெட்டுக்களைக் குறிக்கும். ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் மலபார் மாவட்டத்தின் காவல் துறை அதிகாரியாக இருந்த போசெட் (Fawcett) என்பவர் 1894 ஆம் ஆண்டில் இதைக் கண்டு பிடித்தார்.[1] அவர் இவற்றைக் கவனமாக வரைபடமாக வரைந்துகொண்டதுடன் ஒளிப்படங்களையும் எடுத்து இந்திய தொல்லியல் துறையில் கல்வெட்டியலாளராக இருந்த ஹல்ச் (Hultzsch) என்பவரிடம் கையளித்தார். ஹல்ச் இதனைப் படியெடுத்து வெளியிட்டார். 1901 ஆம் ஆண்டில் போசெட்டும் இது குறித்துக் கட்டுரை ஒன்றை எழுதி வெளியிட்டார். ஹல்ச் இக் கல்வெட்டை வாசிக்க முயன்றாராயினும் அது வெற்றியளிக்கவில்லை. பின்னர் சுமார் 100 ஆண்டுகள் இது கவனிக்கப்படாமல் இருந்தது.

1995 ஆம் ஆண்டிலும், 1996 ஆம் ஆண்டிலும் ஐராவதம் மகாதேவன், அப்பகுதிக்குச் செல்லும் உல்லாசப் பயணிகளின் கிறுக்கல்களால் பழுதுபட்டுப் போயிருந்த அக் கல்வெட்டைப் பார்வையிட்டதுடன் அதை வாசித்து வெளிப்படுத்தினார். இவற்றில் ஒன்றில் "சேர" என்னும் சொல் காணப்படுகிறது. "சேர"என்ற சொல்லுக்கான மிகப்பழைய கல்வெட்டுச் சான்று இது என்பதால் இக்கல்வெட்டு முக்கியத்துவம் பெறுகிறது.[2]

இக்கல்வெட்டுக்கள் கி.பி மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.