ஊசியிலை மரம்
இவை உலகத்திலுள்ள மிகப் பெரிய மரங்கள் என்று பெயர் பெற்றவை. இவற்றின் தண்டு நேராக உயர்ந்து வளர்ந்து ,கீழ் நோக்கி சற்றுச் சாய்வாக கிளைகளைப் பரப்புகின்றன. கிட்டத்தட்ட 8 -12 அடி வரை விட்டமுள்ள தண்டுடன் 300 அடிக்கு மேல் உயர்ந்து வளர்கின்றன. இந்த அசாதாரண உயரத்தினால். வேர்களினால் உரிஞ்சப் படும் நீர் உச்சிவரை செலுத்தப் படுவதில்லை. இதன் உச்சியில் காணப்படும் ஊசி முனைகள் அங்கே படியும் பனியைத் தேக்கி வைத்து உறிஞ்சும் தன்மையுள்ளன. இதனால் பனி கொட்டும் பிரதேசங்களில் தான் இந்த மரங்கள் பெருகிக் காணப்படுகின்றன. 20 வீதம் விதைகளாலும், 80 வீதம் இயற்கைப் பதியத்தாலும் இவை இனத்தைப் பெருக்குகின்றன.

இந்த மரங்களில் சில டைனசர் இருந்த காலங்களிலிருந்து உயிர் வாழ்கின்றன. உலகில் பல இடங்களில் காணப்பட்டாலும் சில பாரிய, பழைய மரங்கள் கலிபோனியாவிலும், நெவேடா மலையடிகளிலும், சீனாவிலும் காணப்படுகின்றன.
இந்த மரத்தின் பட்டை மிகத் தடிப்பானது. நெருப்பினால் அழியாதவண்ணம் ஒரு கவசம் போல் இது காக்கின்றது. தண்ணீராலும் இந்த மரங்கள் இலகுவில் உக்கிப் போவதில்லை. இந்தப் பட்டையின் சுவை பூச்சிகளினால் விரும்பப்படாததாகவும், நச்சுத் தன்மையுள்ளதாகவும் இருப்பதால், இந்த மரம் பூச்சிகளினால் பாதிக்கப்படுவதில்லை. இதனால் தளபாடங்கள் செய்யவும், விசேடமாக கட்டட வேளைகளில் விரும்பிப் பாவிக்கப்படுகிறது. அமிலங்களைத் தாங்கக் கூடிய சக்தியுள்ளவை என்பதால், 1930-1960 கால கட்டத்தில் விமானங்களில் பட்டரிகளில் இவை பாவிக்கப்பட்டனவாம்.