உள்ளக வளிப் பண்பு

உள்ளக வளிப் பண்பு (Indoor Air Quality) என்பது, கட்டிடங்களுக்கு உள்ளே இருக்கும் வளியின் தரம் தொடர்பானது ஆகும். இது, உள்ளக வளியில் கலந்திருக்கக் கூடிய, மனிதரின் உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடிய, பல்வேறு வகையான அம்சங்களைப் பற்றிக் கவனத்துக்கு எடுக்கிறது. உள்ளக வளியில், நுண்ணுயிரிகள் (பூஞ்சணம், பாக்டீரியா), வேதியியல் பொருட்கள் (காபனோரொட்சைட்டு, ரேடான்), மற்றும் பல வகையான, உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்கள் கலக்கின்றன. அண்மைக்கால ஆய்வுகள் உள்ளக வளி, வெளியே இருக்கும் வளியைவிட அதிக மாசடைந்தது எனக் காட்டுகின்றன. உண்மையில் உள்ளக வளி, வெளிப்புற வளியைவிட, உடற் தீங்கு விளைவிப்பதற்கான அதிக வாய்ப்புக்களைக் கொண்டது. காற்றோட்டத்தின் மூலம் மாசுகளின் செறிவைக் குறைத்தல், வடித்தல், மாசுகள் உருவாகக் கூடிய இடங்களிலேயே அவற்றைத் தடுத்தல் அல்லது குறைத்தல் என்பன உள்ளக வளிப் பண்பை மேம்படுத்துவதற்கான அடிப்படை வழிமுறைகள் ஆகும்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.