மனித உரிமைகள் நாள்

ஐக்கிய நாடுகள் அவை 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் உலக மனித உரிமைப் பேரறிக்கை என உலக மக்கள் அனைவருக்குமான வாழ்வுரிமைகளை பிரகடனப்படுத்தியது. அந்த நாளைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 10 ஆம் தேதி உலக நாடுகள் அனைத்தாலும் ”மனித உரிமை நாள்” கொண்டாடப்படுகிறது.

1948 டிசம்பர் 10ஆம் நாள் ஒன்றுக்கூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா.வின் பொது அவை நாடுகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 1950 முதல், டிசம்பர் 10 ஆம் நாள் மனித உரிமைகள் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் அவையின் நிகழ்வுகளில் முதன்மையான இந்நாளில், நியூயார்கில் அமைந்துள்ள அதன் தலைமைப்பீடத்தில் முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கமாகும். இந்நாளில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் பரிசு வழங்கப்படும். மேலும் பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளில் பல முக்கிய நிகழ்வுகளை நடத்துவது வழக்கமாகும்.

நோக்கம்

ஒவ்வொரு தனி மனிதனும் தான் வாழ்வதற்கான உரிமையை பெறுவதும், மற்ற மனிதரையும் வாழ விடும் நெறிமுறையை உணர்த்துவதே இப்பிரகடனத்தின் முக்கியக் கருத்தாகும். எல்லா மனிதர்களும் சுதந்திரமானவர்களாகவும், உரிமையிலும், கண்ணியத்திலும் ஒருவருக்கொருவர் சமமானவர்கள் என்பதை இப்பிரகடனம் வலியுறுத்துகிறது. இனம், நிறம், பாலினம், மொழி, மதம், அரசியல், நாடு, சமுதாய தோன்றல், சொத்து, பிறப்பு அல்லது சமூக உயர்வு போன்ற எந்த வித வேறுபாடுகளும் இன்றி ஒவ்வொரு மனிதனும் வாழ்வதன் அவசியத்தையும் உணர்த்தவே இந்நாள் கொண்டாடப்படுகிறது.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.