உலக நோயாளர் நாள்

உலக நோயாளர் நாள் (World Day of the Sick) என்பது கத்தோலிக்க திருச்சபை ஒவ்வொரு ஆண்டும் பெப்ருவரி மாதம் 11ஆம் நாள் கொண்டாடுகின்ற ஒரு சிறப்பு நினைவு ஆகும். இந்நாள் கொண்டாட்டத்தைத் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 1992ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் நாள் ஏற்படுத்தி, ஒவ்வொரு ஆண்டும் பெப்ருவரி மாதம் 11ஆம் நாள் கடைப்பிடிக்குமாறு பணித்தார்.[1]

அன்னை மரியா காட்சியளித்த லூர்து குகை
Grotto of Our Lady of Lourdes
புனித லூர்து அன்னை
முக்கிய திருத்தலங்கள்லூர்து; உலகின் பல பகுதிகள்
திருவிழாபெப்ரவரி 11
பாதுகாவல்நோயாளர்

நோயாளர் மட்டில் திருச்சபையின் கரிசனை

உலக நோயாளர் நாள் என்றொரு கொண்டாட்டத்தைத் திருத்தந்தை இரண்டாம் பவுல் மே 13ஆம் நாள் ஏற்படுத்தி, ஒவ்வொரு ஆண்டும் பெப்ருவரி 11ஆம் நாள் கடைப்பிடிக்க வழிவகுத்தற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. மே மாதம் 13ஆம் நாள் (1917ஆம் ஆண்டு) அன்னை மரியா (இயேசுவின் தாய்) போர்த்துகல் நாட்டு பாத்திமா நகரில் மூன்று சிறுவர்களுக்குக் காட்சியளித்தார். மே மாதம் 13ஆம் நாள் (1981ஆம் ஆண்டு) தம்மைத் தாக்கிய துப்பாக்கிக் குண்டுகளிலிருந்து தம் உயிரைக் காத்தது அன்னை மரியாவின் அருளே என்று திருத்தந்தை இரண்டாம் பவுல் பின்னர் கூறினார். அந்த அன்னையின் நினைவாக மே 13ஆம் நாளைத் தேர்ந்தெடுத்து, அன்று 1992ஆம் ஆண்டில் திருத்தந்தை "உலக நோயாளர் நாள்" கொண்டாட்டத்தை ஏற்படுத்தினார்.

பெப்ருவரி 11ஆம் நாள் கத்தோலிக்க திருச்சபை பிரான்சு நாட்டு லூர்து நகரில் அன்னை மரியா (இயேசுவின் தாய்) பெர்னதெத் சுபீரு என்னும் பெண்மணிக்குக் காட்சியளித்த நாளைத் திருவிழாவாகக் கொண்டாடுகிறது. லூர்து நகரில் அன்னை மரியாவிடம் வேண்டுதல் செய்வோர் நோய்களிலிருந்து விடுபட்டுக் குணம் பெற்றதாகச் சான்று பகர்ந்துள்ளார்கள். எனவே திருத்தந்தை இரண்டாம் பவுல் பெப்ருவரி 11ஆம் நாள் "உலக நோயாளர் நாள்" என்று கொண்டாடுவது பொருத்தமே என்று அறிவித்தார்.

மேலும், 1991ஆம் ஆண்டில் திருத்தந்தை இரண்டாம் பவுல் பார்க்கின்சன்ஸ் நோயால் பீடிக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் தெரிந்தன (2001இல் தான் அச்செய்தி மருத்துவர்களால் உறுதியாக்கப்பட்டு, 2003இல் வத்திக்கான் நிர்வாகத்தால் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது). எனவே, தாம் நோய்வாய்ப்பட்டிருந்த வேளையில் திருத்தந்தை "உலக நோயாளர் நாள்" என்றொரு ஆண்டு நினைவை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கதே.

உலக நோயாளர் நாள் கொண்டாட்டத்தின் பொருள்

உலக நோயாளர் நாளை நிறுவிய திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அந்நாளின் பொருளைப் பின்வருமாறு விளக்கினார்:

ஒவ்வொரு ஆண்டும் லூர்து அன்னையின் விழா நாளாகிய பெப்ருவரி 11ஆம் நாளன்று, உலக நோயாளர் நாளாகக் கொண்டாடப்படவேண்டும் என்று அறிவிக்கின்றேன். இறைமக்களும் உலக சமுதாயமும் நோயாளர் மட்டில் கரிசனை கொண்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது எத்துணை முக்கியமானது என்பதை நினைவூட்டவும், நோயாளருக்காக இறைவேண்டல் செய்யவும் தூண்டுதலாக இந்த உலக நோயாளர் நாள் அமைய வேண்டும்.

மனித வாழ்க்கையில் நோய் நோக்காடுகளால் ஏற்படுகின்ற துன்பங்களைக் குறித்து திருத்தந்தை இரண்டாம் பவுல் பலமுறை உரையாற்றியும் எழுதியுமிருந்தார். மனிதர் தமக்கு ஏற்படும் துன்பங்களைப் பொறுமையோடும் இயேசுவின் துன்பங்களோடு இணைத்தும் ஏற்றுக் கொண்டால் அத்துன்பங்கள் வழியே கடவுளின் அருளைப் பெறுவர் என்று அவர் கற்பித்தார்[2][3].

2005ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட உலக நோயாளர் நாள் தனிப்பட்ட பொருள் வாய்ந்தது. அப்போது திருத்தந்தை நோய்வாய்ப்பட்டு, துன்புற்ற நிலையில் இருந்தார். மக்கள் கூட்டமாக ஒன்று கூடி, புனித பேதுரு பெருங்கோவில் வளாகம் சென்று, திருத்தந்தைக்காகச் சிறப்பு வேண்டுதல்கள் நிகழ்த்தினார்கள். அவர் 2005ஆம் ஆண்டு ஏப்பிரல் 2ஆம் நாள் இறந்தார்.

இரண்டாம் யோவான் பவுல் வெளியிட்ட உலக நோயாளர் நாள் செய்திகள்

உலக நோயாளர் நாள் நிறுவப்பட்டது (மே 13, 1992)

வரிசை எண்உலக நோயாளர் நாள் செய்திகொண்டாடப்பட்ட திருத்தலம்/நகரம்/நாடு
11993 உலக நோயாளர் நாள்லூர்து அன்னை திருத்தலம், பிரான்சு
21994 உலக நோயாளர் நாள்செஸ்டோகோவா அன்னை திருத்தலம், போலந்து
31995 உலக நோயாளர் நாள்யாமூஸ்ஸூக்ரோ அமைதியின் அன்னை திருத்தலம், ஐவரி கோஸ்ட்
41996 உலக நோயாளர் நாள்குவாடலூப்பே அன்னை திருத்தலம், மெக்சிகோ
51997 உலக நோயாளர் நாள்பாத்திமா அன்னை திருத்தலம், போர்த்துகல்
61998 உலக நோயாளர் நாள்லொரேத்தோ அன்னை திருத்தலம், இத்தாலியா
71999 உலக நோயாளர் நாள்ஹரிஸ்ஸா அன்னை திருத்தலம், பெய்ரூட், லெபனான்
82000 உலக நோயாளர் நாள்உரோமை, வத்திக்கான்
92001 உலக நோயாளர் நாள்அன்னை மரியா மறைமாவட்டக் கோவில், சிட்னி, ஆஸ்திரேலியா
102002 உலக நோயாளர் நாள்அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், தமிழ் நாடு, இந்தியா
112003 உலக நோயாளர் நாள்அமல அன்னை தேசிய திருத்தலம், வாஷிங்க்டன், ஐக்கிய அமெரிக்க நாடுகள்
122004 உலக நோயாளர் நாள்லூர்து அன்னை திருத்தலம், பிரான்சு
132005 உலக நோயாளர் நாள்திருத்தூதர்களின் அரசி திருத்தலம், யாவுண்டே, கமரூன்

பதினாறாம் பெனடிக்ட் வெளியிட்ட உலக நோயாளர் நாள் செய்திகள்

வரிசை எண்உலக நோயாளர் நாள் செய்திகொண்டாடப்பட்ட திருத்தலம்/நகரம்/நாடு
142006 உலக நோயாளர் நாள்புனித பிரான்சிஸ் சேவியர் கோவில், ஆடெலேய்ட், ஆஸ்திரேலியா
152007 உலக நோயாளர் நாள்சியோல், கொரியா
162008 உலக நோயாளர் நாள்லூர்து அன்னை திருத்தலம், பிரான்சு
172009 உலக நோயாளர் நாள்லூர்து அன்னை திருத்தலம், பிரான்சு
182010 உலக நோயாளர் நாள்புனித பேதுரு பெருங்கோவில், வத்திக்கான்
192011 உலக நோயாளர் நாள்லூர்து அன்னை திருத்தலம், பிரான்சு


ஆதாரங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.