உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்

உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார் என்பவர் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது அகநானூறு பாடல் எண் 69 (பாலைத் திணை)

புலவர் பெயர் விளக்கம்

பரங்கொற்றனாரின் தந்தை உமட்டூர் கிழார். உமட்டூர் என்பது குமட்டூர் போன்றதோர் ஊர்.

பாடல் சொல்லும் செய்தி

நிகழிடம்

பொருள் தேடச் சென்ற தலைவன் விரைவில் திரும்பிவிடுவான் என்று கூறித் தோழி தலைவியின் துன்பத்தை ஆறச்செய்மிறாள்.

செய்தி

மென்மைநலம் இழந்த மேனி, மலர்வனப்பு இழந்த கண்கள், உடலின் வண்ணம் மாறிச் சுருக்கங்களால் வரி விழுந்த உடல் ஆகியவற்றைப் பார்த்து நீ அழ வேண்டா.

பிறருக்கு ஈவதுதான் இன்பம் என்று எண்ணி அவர் பொருள் தேடச் சென்றுள்ளார். மான்கள் புளிக்கும் நெல்லிக்காய்களை மேயும் காட்டின் வழியாகச் சென்றிருக்கிறார். ஆரியர் தேர் நடந்த வழியில் சென்றிருக்கிறார். என்றாலும் அங்கு நீண்ட நாள் தங்கியிருக்க மாட்டார். ஆய் வள்ளலின் காட்டில் பூத்த மலர் போல் மணக்கும் உன் மார்பைத் தழுவிக்கொண்டு துயில்வதை அவர் மறக்கமாட்டார். - என்று சொல்லித் தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.

வரலாற்றுச் செய்தி

  1. மோரியர்

மோரியரில் ஒருசாரார் இயல்தேர் மோரியர் எனப்பட்டனர். இவர்கள் மலையைக் கடந்து வந்தனர். தேரில் வந்தனர். அவர்களது தேர்ச்சக்கரத்தில் இருந்த இரும்பாலான கட்டு அவர்கள் வந்த வழியைப் பள்ளமாக்கியது. பொருள் தேடச் சென்ற தலைவன் அந்தப் பள்ளப் பாதையின் வழியே அவர்கள் வந்த மலையைத் தாண்டிச் சென்றான்.

  1. ஆய்

(இங்குக் குறிப்பிடப்படும் ஆய் கடையெழு வள்ளல்களில் ஒருவன்)
ஆய் தன் கையில் மணிப்பூண் அணிந்திருந்தான். இவன் வயவர் பெருமகன் என்று போற்றப்படுகிறான். வயவர் என்போர் படைவீரர்கள். இவனது வயவர்கள் அரண்கள் பலவற்றைக் கடந்து வென்றவர்கள். கையில் மயில் பீலி கட்டிய வில்லும் அம்புமாகத் திரிவர்.

பழக்க வழக்கம்

வில்லில் மயில் பீலி; ஆய் அரசனின் வயவர் தம் அம்பின் நுனியில் மயில்கள் தாமே உதிர்த்த பீலியின் அடிநினியை நறுக்கிச் செருகியிருப்பர். ('மடமயில் ஒழித்த பீலி')

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.