உந்தி பறத்தல்

உந்தி-பறத்தல் தமிழக நாட்டுப்புறச் சிறுமியரின் விளையாட்டுகளில் ஒன்று.

உந்தீ பற

உந்தி என்பது வயிற்றுக் கொப்புள். கொப்புள் பறக்கும்படி சுழல்வது உந்தி பறத்தல். உந்தி-பறத்தல் விளையாட்டை எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகர் தன் திருவாசகத்தில் குறிப்பிடுகிறார். பாடிக்கொண்டே பறப்பது உந்தி-பறத்தல்.

இரண்டு சிறுமியர் ஒருவர் கையை மற்றொருவர் பிடித்துக்கொண்டும், கால்களால் ஒருவரை ஒருவர் உதைந்துகொண்டும் சுற்றுவது உந்திப்பறத்தல். கைகளைப் பிடிக்கும்போது வலக்கையை வலக்கையாலும், இடக்கையை இடக்கையாலும் எதிரெதிர் நின்று பிடித்துக்கொள்வர். இதனால் கைகள் பின்னலிட்டது போல் இருக்கும். பின்னர் வலப்புறமாகச் சிறிது நேரமும், இடப்புறமாகச் சிறிது நேரமும் சுழல்வர். இப்படிச் சுழலும்போது பாட்டுப் பாடிக்கொண்டே சுழல்வர்.

திருவாசகப் பாடல்

திருவாசத்தில் திருவுந்தியார் என்னும் தலைப்பில் உந்தி பறத்தலின் விளையாட்டுப் பாடல்கள் 19 உள்ளன. அவற்றுள் ஒன்று இந்தப் பாடல். இது முதல் பாடல்.

வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புறம் உந்தீ பற
ஒருங்குடன் வெந்தவாறு உந்தீ பற

முதல் இரண்டு அடிகளை ஒரு சிறுமி பாடுகிறாள். மூன்றாம் அடியை மற்றொரு சிறுமி பாடுகிறாள்.

சிவபெருமானின் வில் வளைந்தது. அதனால் பூசல் நேர்ந்தது. விளைவு முப்புறம் தீப்பற்றி எறிந்த்து. – இந்தச் செய்தியை ஒருத்தி பாடுகிறாள். முப்புறமும் ஒன்றுசேர்ந்து வேவது போல் உந்தி பறக்கும்படி சுழல் – இப்படி அடுத்தவள் சொல்கிறாள். இருவரும் சேர்ந்து சுழல்கின்றனர்.

ராட்டு-பூட்டு

ராட்டு பூட்டி விளையாட்டு

இந்த விளையாட்டு அண்மைக் காலம் வரையில் ராட்டு-பூட்டு என்னும் பெயருடன் விளையாடப்பட்டு-வந்தது. இராட்டினம் பூட்டியது போல் சுழலும் ஆட்டத்தை ராட்டு-பூட்டு என்றனர். ராட்டு பூட்டு விளையாட்டில் மற்றொரு வகையும் உண்டு. படத்தில் உள்ளது போல் ஒருவரோடொருவர் தோளில் கைகளைக் கோத்துக்கொண்டு சொழல்வர். இது உந்தி பறத்தல் அன்று.

பிஸ்ஸாலே பறத்தல்

இரண்டு பேர் ஆட்டம் இது. ஒருவர் மற்றொருவர் கைகளைப் பிடித்துக்கொள்வார். இருவரும் தம் கால்களால் மற்றவர் கால்களில் உதைந்துகொள்வர். வட்டமாகச் சுற்றுவர்.[1]

மேலும் பார்க்கலாம்

அடிக்குறிப்பு

  1. இரா.பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.