உத்தர கீதை

கண்ணன் அர்ஜுனனுக்கு போர்க்களத்தில் உபதேசித்த பகவத் கீதையைத் தவிர உத்தவ கீதை, ஹம்ச கீதை, பிட்சு கீதை, இராம கீதை போன்று பல கீதைகள் இந்துசமய நூல்களில் உள்ளன. அவைகளில் ஒன்றுதான் உத்தரகீதை. இதுவும் கண்ணன் அர்ஜுனனுக்குச் சொன்னதுதான். ஆனால் இது மகாபாரதப்போர் முடிந்து பாண்டவர்கள் அரசாண்டுகொண்டிருந்தபோது, அர்ஜுனன் திரும்பவும் கேட்கும் கேள்விகளுக்கு விடையாக கண்ணன் உபதேசித்த நூல்.

நூல்

இந்நூல் மகாபாரதத்தில் அடங்கியதாயினும் அச்சிடப்பட்ட எந்தப்பதிப்பிலும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் சென்னை, மும்பை முதலிய நகரங்களில் சில நூல்நிலையங்களில் அச்சிடப்பட்டதாகவும், கையெழுத்து பிரதியாகவும், சுவடிகளிலும் காணப்படுகிறது. இது மூன்று அத்தியாயங்களில் 119 வடமொழி சுலோகங்கள் கொண்டது. உத்தவ கீதையென்று வேறொன்று உள்ளது. உத்தவர் கிருஷ்ணரிண் சிற்றப்பா மகனாவார் அவருக்கு வடமதுரையில் உள்ள கோவர்தன் மலையில் உபதேசம் வழங்கப்பட்டதையே உத்தவ கீதையாக கருதப்படுகிறது. அது வேறு, உத்தர கீதை வேறு. 'உத்தர' என்றால், பின்னால் வருவது. மகாபாரதப் போர்க்களத்தில் சொல்லப்பட்டதற்குப் பின்னால் வெகு காலத்திற்குப் பிறகு அதே அர்ஜுனனுக்கு சொல்லப்பட்ட கீதை உத்தர கீதை.

முதல் அத்தியாயம்

முதல் அத்தியாயத்திலுள்ள 56 சுலோகத்தில் உள்ள கருத்துக்கள்:

  • ஓம் என்ற பிரணவ மந்திரம் உபாசனை.
  • தியான முறை
  • ஆன்மதத்துவத்தை உணர்ந்தறிந்தவனுக்கு செய்யவேண்டியதொன்றுமில்லை.
  • தத்துவஞானிகளுடைய இலக்கணம்
  • பிந்து, நாதம், கலை
  • முயற்சிகள் எதுவரை?

இரண்டாவது அத்தியாயக் கருத்துக்கள்

இரண்டாவது அத்தியாயத்தில் 46 சுலோகங்கள் உள்ளன. அவைகளில் உள்ள கருத்துக்கள்:

  • பரமனுடன் இரண்ட்றக்கலத்தல் யாது?
  • ஞானியின் முக்திநிலை
  • இளா, பிங்களா, சுஷும்னா நாடிகள்
  • உலகமனைத்தும் உடலில் உள்ளது
  • அவைகளின் லயம்
  • உடல் வேறுபடினும் ஆன்மா ஒன்றே

முடிவு

ஆன்மவிசாரம் (ஆன்மாவைப் பற்றிய உள்வினவல்) ஒன்றே வழி. கல்வி அறிவு பிரஹ்ம உபாசனத்திற்கு (மெய்யறிவிற்கு) இடையூறே. யோகநிலையை அடைய விரும்பும் யோகி இடையில் ஏற்படும் யோகசித்திகளை விரும்பாது பிரஹ்மத்திலேயே நிலைக்கவேண்டும்.

ஒரு சுலோகம்

அனந்த சாஸ்த்ரம் பஹு வேதிதவ்யம் அல்பஸ்ச காலோ பஹவஸ்ச விக்னாஹ் /
யத்ஸாரபூதம் ததுபாஸிதவ்யம் ஹம்ஸோ யதா க்ஷீரமிவம்புமிஸ்ரம் //

பொருள்: விவேகியான யோகி நூல்களனைத்திலும் சாரமான அத்யாத்மநூல்களையே எடுத்துக்கொள்ளவேண்டும். சாஸ்திரங்கள் எல்லையில்லாதவை. அறிய்வேண்டியவை கடலளவு. காலமோ குறைவு. இடையூறுகள் பல. அதனால் அன்னப்பறவை எவ்விதம் நீரோடு கலந்திருப்பினும் பாலை மாத்திரம் ஏற்றுக்கொள்கிறதோ அதுபோல் சாஸ்திரங்களை நன்கு கடைந்து எடுத்து சாரத்தை மட்டும் ஏற்கவேண்டும்.

துணைநூல்கள்

  • உத்தரகீதை. தமிழ் மொழிபெயர்ப்பு: ஸ்ரீராஜகோபால சர்மா. 'அண்ணா' எழுதிய ஆங்கில கருத்துரையுடன் கூடியது. ஸ்ரீராம கோசஸ்தானம், 54, அப்பர்சுவாமி கோயில் தெரு. சென்னை 4. 1962
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.