ஈரானியப் பீடபூமி

பாரசிக பீடபூமி (Persian Plateau)[1][2] அல்லது ஈரானியப் பீடபூமி (Iranian Plateau) தென்மேற்கு ஆசியா, நடு ஆசியாவில் உருவாகியுள்ள நிலவியல் அமைப்பாகும். இது அராபிய, இந்தியத் தட்டுப் புவிப்பொறைகளுக்கு இடையே சிக்கியுள்ள யூரேசியத் தட்டுப் புவிப்பொறையின் அங்கமாகும். மேற்கில் சாக்ரோசு மலைகளும் வடக்கில் காசுப்பியன் கடலும் கோபெட் தாகு மலைகளும் வடமேற்கில் ஆர்மேனிய மேட்டுநிலங்களும் காக்கசசு மலைத்தொடரும் தெற்கில் ஓர்மூசு நீரிணையும் பாரசீக வளைகுடாவும் கிழக்கில் பாக்கித்தானின் சிந்து ஆறும் எல்லைகளாக உள்ளன.

இந்திய, அராபிய, யூரேசியத் தட்டுப்பாறைகளின் எல்லைகளை விளக்கும் வரைபடம்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பகுதியில் ஈரானின் பார்த்தியா, மீடெசு, பெர்சிசு பகுதிகளும் தற்போது இழந்துள்ள பகுதிகளும் அடங்கியுள்ளன.[3] மேற்கு எல்லையாக உள்ள சாக்ரோசு மலைகளின் கிழக்குச் சரிவையும் இதன் பகுதியாகக் கொள்ளப்படலாம். "தாழ்நில குசெசுத்தானை" வெளிப்படையாக பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் நீக்கி[4] ஈலாத்தை "மெசபொடோமிய சமவெளியிலிருந்து ஈரானியப் பீடபூமி வரை பரந்திருந்த" பகுதியாக வரையறுக்கின்றது.[5]

ஈரானியப் பீடபூமி வடமேற்கில் காசுப்பியனிலிருந்து தென்கிழக்கே பலுச்சிசுத்தானம் வரை கிட்டத்தட்ட 2,000 கிமீக்கு பரந்துள்ளது. இது ஈரானின் பெரும்பகுதி, ஆப்கானித்தான் மற்றும் சிந்து ஆற்றுக்கு மேற்கிலுள்ள பாக்கித்தான் நாட்டுப் பகுதிகளில் அமைந்துள்ளது. 3,700,000 சதுர கிலோமீட்டர்கள் (1,400,000 sq mi) பரப்பளவுள்ள இந்தப் பீடபூமி கிட்டத்தட்ட தப்ரோசு, சிராசு, பெசாவர் மற்றும் குவெட்டா நகரங்களைக் கொண்டமைந்த நாற்கோணத்தில் அடங்கியுள்ளது. இது பீடபூமி என்று அழைக்கப்பட்டாலும் இது சமதளமாக இல்லாது பல மலைத் தொடர்களை அடக்கியுள்ளது; அல்போர்சில் உள்ள தமாவந்து சிகரம் மிக உயரமாக 5610 மீட்டரிலும் மத்திய ஈரானின் லுட் வடிநிலம் 300 மீட்டருக்கு கீழாக தாழ்நிலையிலும் அமைந்துள்ளன.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.