இலங்கைத் தமிழர் சிந்தனை வளர்ச்சியில் அமெரிக்க மிஷன் (நூல்)

இலங்கைத் தமிழர் சிந்தனை வளர்ச்சியில் அமெரிக்க மிஷன் என்பது, இலங்கைத் தமிழரின் கல்வித்துறையின் வளர்ச்சியில் அமெரிக்கமிஷன் வகித்த பங்கு குறித்து ஆய்வு செய்யும் ஒரு நூல். தென்னிந்தியத் திருச்சபையின் ஓய்வுபெற்ற பேராயர் எஸ். ஜெபநேசன் எழுதிய இந்த நூல் குமரன் புத்தக இல்ல வெளியீடாக 2009 ஆம் ஆண்டு வெளிவந்தது.

இலங்கைத் தமிழர் சிந்தனை வளர்ச்சியில் அமெரிக்க மிஷன்
நூல் பெயர்:இலங்கைத் தமிழர் சிந்தனை வளர்ச்சியில் அமெரிக்க மிஷன்
ஆசிரியர்(கள்):எஸ். ஜெபநேசன்
வகை:கல்வி வரலாறு
துறை:இலங்கைத் தமிழர் கல்வி வரலாறு
காலம்:இலங்கையில் பிரித்தானியர் ஆட்சிக்காலம்
இடம்:யாழ்ப்பாணம்
மொழி:தமிழ்
பக்கங்கள்:304
பதிப்பகர்:குமரன் புத்தக இல்லம்
பதிப்பு:2009

இலங்கைவாழ் தமிழ் மக்களின் உயர்கல்வி வரலாற்றிலே 1823ஆம் ஆண்டிற்கும் 1855ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதி ஒரு முக்கியமான காலகட்டமாகும். யாழ்ப்பாணக் குடாநாட்டிற் சமயப் பிரசாரஞ்செய்வதற்கென அமெரிக்காவிலிருந்து வந்த மிஷனரிமார் இக்காலப்பகுதியிலே மேற்கத்தியப் பல்கலைக்கழகங்களுக்கீடான ஒரு கல்லூரியை நிறுவி நடத்தினார்கள். ஆசியாவில் நிறுவப்பெற்ற மிகப் பழைமைவாய்ந்த நவீனபாணியிலமைந்த உயர்தரக் கல்லூரிகளில் இதுவே மிக முற்பட்டது என்று கருதப்படுகின்றது. இத்தகைய நிறுவனத்தினை நிறுவி நடாத்திய அமெரிக்க மிஷனரிமாரின் செயற்பாடுகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலங்கைத் தமிழர் சிந்தனை வளர்ச்சியில் ஏற்படுத்திய தாக்கத்தினை இந்நூல் ஆராய்கின்றது.[1]

நோக்கம்

இலங்கைத் தமிழ் மக்களுடைய நவீனகாலக் கல்வி, பண்பாட்டு வளர்ச்சிகள் குறித்த ஆய்வுகள் மிகவும் அரிதாகவே நடத்தப்படுகின்றன. இந்த நிலையில், 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் யாழ்ப்பாணத்தில், அமெரிக்க மிஷனின் உதவியுடன் இடம்பெற்ற கல்வி விருத்தி பற்றி எடுத்துரைப்பதே இந்நூலின் நோக்கம்.

பொருளடக்கம்

  1. அமெரிக்க மிஷனின் தோற்றமும் அதன் சமய, இலக்கிய சமூகவியற் கோட்பாடுகளும்
  2. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தின் அரசியற்பொருளாதாரக் கலாசார நிலைமைகள்
  3. வட்டுக்கோட்டைச் செமினரியின் தோற்றம்
  4. வட்டுக்கோட்டைச் செமினரியின் பாடத்திட்டமும் தமிழ்ப் பயிற்சிநெறியும்
  5. வட்டுக்கோட்டைச் செமினரியின் ஆசிரியர்களும் மாணவர்களும்
  6. வட்டுக்கோட்டைச் செமினரியிலே தமிழ் நூல் வளர்ச்சி
  7. வட்டுக்கோட்டைச் செமினரியினால் தமிழர் சிந்தனைப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள்
  8. முடிவுரை

குறிப்புக்கள் பிற்சேர்க்கை நூல்விபரப்பட்டியல்.

குறிப்புகள்

  1. ஜெபநேசன், எஸ்., இலங்கைத் தமிழர் சிந்தனை வளர்ச்சியில் அமெரிக்க மிஷன், குமரன் புத்தக இல்லம், கொழும்பு, 2009. பக். x

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.